‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (3) சமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்?
டி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் வெளியிட்டார் பெரியார்.
டி இந்தியாவில் பணக்காரன்-ஏழை முரண் பாட்டைவிட மேல் ஜாதி – கீழ் ஜாதி முரண்பாடு முதன்மையாக இருக்கிறது என்று அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.
டி 1931 விருதுநகர் மாநாட்டில் சமதர்மமே இலட்சியம் என்று அறிவித்து முதன்முறையாக மதங்கள் ஒழிய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்.
டி 1932 மே மாதம் இரஷ்ய மே தினம் அணி வகுப்பில் அந்நாட்டு பிரதமருடன் பங்கேற்றார்.
டி இங்கிலாந்தில் தொழில் கட்சி நடத்திய மாநாட்டில் பங்கேற்று அம்மாநாட்டிலேயே அக்கட்சியைக் கடுமையாக துணிவுடன் விமர்சித்தார் பெரியார்.
குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.
எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி-மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
நம் உலகம் ஒரு பக்கா தனியுடமை உலகம் என்று எழுதி (நிறைய கருத்துக்கள், அவையெல்லாம் சொல்ல வேண்டியதில்லை), அடுத்ததாக நான் சொல்வது என்னவென்றால், பெரியார் 1930ஆம் ஆண்டு அதற்கு முன்னாலிருந்து பொதுவுடமை கருத்துகளை இன்னும் பல செய்திகளை, பொது வுடமை பற்றிய கட்டுரைகள் எல்லாம் தன்னுடைய ‘குடிஅரசு’ பத்திரிக்கையில் வெளியிடத் தொடங்கு கிறார். முதலில், பொதுவுடமையின் தத்துவம் என்ற பிரடரிக் எங்கல்ஸ் எழுதிய நூலை மொழிபெயர்த்து தன்னுடைய ‘குடிஅரசு’ பத்திரிக்கையில் வெளியிடு கிறார். அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது, இந்தியாவில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த கால கட்டத்தில், இவையெல்லாம் இந்திய மொழிகளில் வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யாருக்கும் கிடைப்பதில்லை. அதை பெரியார் தன்னுடைய ‘குடிஅரசு’ இதழில், சமதர்ம அறிக்கை என்ற பெயரால், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்த்துப் போடுகிறார். அது வரைக்கும் அந்த அறிக்கை தமிழில் வரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தமிழில் யாருமே மொழி பெயர்த்து போடவில்லை. பெரியார் மொழி பெயர்த்து குடிஅரசு ஏட்டில் தொடர்ந்து வெளியிடு கிறார். 1931ஆம் ஆண்டு வெளியிடத் தொடங்குகிறார்.
அப்போது அவருடைய பார்வையை மட்டும் சொல்லி விடுகிறேன். அந்த அறிக்கை மொழி பெயர்ப்பு முன்னுரையில் சில செய்திகளை அவர் முன்வைக்கிறார். மற்ற செய்திகளும் சொல்லுகிறார். “தற்காலம் ரஷியாவிலும் ஸ்பெயினிலும் சில இடங்களிலும் சமதர்மம் பொதுவுடமை பெயரால் கிளர்ச்சிகளும் அரசாட்சிகளும் நடந்து வருவது எவருக்கும் தெரியும்”. இப்படிப்பட்ட உணர்ச்சி என்பது ஜெர்மனியில் தோன்றியிருந்தாலும், இதற்கான முதல் மாநாடு லண்டனில் நடந்திருந்தா லும், முதல் புரட்சி பிரான்சு நாட்டில் நடந்திருந்தா லும், அதற்கான நல்ல புரட்சியும் அரசும் ஏற்பட்டது ரஷியாவில் ஏற்பட்டது. “சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்கள் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மானியராக இருந்தாலும், அதற்காக மாநாடு கூட்டியது லண்டன் பட்டணமாக இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும், முதன் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்கவேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தாலும், அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமல் இல்லை. என்ன நியாயம் என்று வாசகர்கள் கேட்பீர் களேயானால், அதற்கு நமது சமாதானமானது, எங்கு அளவுக்கு மீறிய தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறதோ, அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார உணர்ச்சி வீறுகொண்டு எழவும், சீக்கிரத்தில் இரண்டில் ஒன்று காணவும், காரியம் நடைபெறும். எனவே நியாயப்படி பார்ப்போமேயானால், உலக அரசாங்கங்களில் ரஷிய ஜார் அரசாங்கமே மிகக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கிறது. அதனாலேயே அங்கு சமதர்ம முயற்சி அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷிய தேசத்தை விடவும் இந்தியாவுக்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூழ்ச்சிக் காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாக கல்வி அறிவு உலக ஞானம் சுயமரியாதை உணர்ச்சி முதலியன பெறுவதற்கு மார்க்கமில்லாமல் காட்டுமிராண்டி தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தம் என்றும், மோட்ச சாதனம் என்றும் புகட்டி வந்த தாலும், அதே சூழ்ச்சிக் காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத் தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்துவந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலாக இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷ்யாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.” இதனால்தான் இங்கு புரட்சி வரவில்லை/
முதலில் இங்கல்லவா வந்திருக்கவேண்டும், ஏன் வரவில்லையென்றால் இங்கே ஒரு கூட்டம் இருந்து, அது உனக்கு என்ன பண்ணுவது, உன் தலை விதி, நீ ஏழையாக இருக்கின்றாய், அவன் பணக்காரன் போன ஜன்ம புண்ணியம் என்றெல்லாம் சொல்லிச்சொல்லி ஏமாற்றி வந்ததால்தான், இங்கே புரட்சி வரவில்லை. ஏனென்றால் இங்கே தானே புரட்சி வந்திருக்க வேண்டும், ரஷியாவிற்கு முன்னால், என்றெழுதி விட்டு, “ஆனபோதிலும் கூட இப்போது உலகில் மற்ற எல்லா பாகங்களிலும் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிர்க்க முடியாத அவசியமாய் போய்விட்டதால், இங்கும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால், இந்தியா வுக்கும் மற்ற தேசத்திற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகிறது. அது என்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படு கின்றது. அதாவது, முதலாளி-வேலையாள், பணக்காரன்-ஏழை, என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் ஜாதியார்-கீழ்ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாக வும் இருப்பதால், அது பணக்காரன்-ஏழை தத்து வத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது”. இதில் ஜாதி என்பது ஒன்று அதிகமாக என்று சொல்வது மட்டுமல்ல, முதன்மையாக என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.
வழக்கமாக மார்க்சிய சொல்லாடல்களில் அதைச் சொல்லுவோம், பிரதான முரண்பாடு அல்லது முதன்மை முரண்பாடு என்று சொல்லுவோம். அதற்காக சொல்லியிருப்பாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அதிகமாகவும் முதன்மை யாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்து வத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது. இதை நான் மொழிபெயர்த்து வெளியிடலாம் என்பதால் தான், ”இவ்விவரங்கள் இந்த அளவில் நிற்க, முன் குறிப்பிட்ட.. அதாவது சமதர்ம கொள்கை சம்மந்தமான அந்த காலத்தில் வெளியான ஒரு அறிக்கை மக்கள் உணரும்படியாக வெளிப்படுத்தலாம் என்று நாம் கருதுவதால், அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்று வெளியிட்டு இருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
அதற்கு முன்னாலேயே இயக்கங்கள் நடந்து வந்திருக்கின்றன. மார்க்சிய சிந்தனையாளர்கள் இங்கு பல்வேறு அமைப்புக்களாக இருந்து செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். நாம் சொல்லும் பழங்கணக்கு, 1925-ல் கான்பூர் மாநாடு, 1938-ல் பல பெயர்கள் சொன்னாலும் கூட, அதற்கு முன்னேயே இருந்திருக்கிறார்கள். காங்கிரசில் சோசியலிச கட்சியாக இருந்து இயங்கி இருக்கிறார்கள். இதெல்லாம் நடந்து வந்திருக்கிறது. அதற்கு முன்னரே, 1931 ஆகஸ்ட்டு மாதம் ஒரு மாநாடு நடந்திருக்கிறது விருது நகரிலே. அதில், இந்த அறிக்கை வெளியிடும் முன்பே, அந்த மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் போடுகிறார். அதில் நாம் சமதர்மம் என்பது தான் இந்த நாட்டிற்கு தீர்வாக இருக்க முடியும் என்கிற தீர்மானத்தை அதில் நிறைவேற்றுகிறார்கள். அதில் மத ஒழிப்பு தீர்மானம் முதல் முறையாக அப்பொழுது தான் போடுகிறார். அதற்கு முந்தியெல்லாம், கடவுள் மறுப்பு பேசியிருந் தாலும், எல்லாவற்றுக்கும் தடையாக வந்து நிற்பது, மதமும் கடவுள் உணர்ச்சி என்பதால், மதங்கள் ஒழியவேண்டும் என்பதற்கும், அதை ஒழிப்பதற்கு பாடுபடவேண்டும் என்பதாக தீர்மானிக்கிறது, என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
அதற்கு பின்னால் அவருடைய ரஷிய பயணம் நடக்கிறது. தொடக்க காலத்தில், ரஷியாவிற்கு சென்ற தலைவர்களில் பெரியாரை ஒருவராக நாம் சொல்லலாம். அவர் அந்த ஆண்டு போய், ஒரு மூன்று மாதங்கள், 1931-ம் ஆண்டு புறப்பட்டு போனால் கூட, இங்கிருந்து எகிப்து கிரீஸ் துருக்கி போன்ற நாடுகளுக்கெல்லாம் போய், அப்புறம் தான் ரஷியாவிற்கு 1932ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் போய் சேருகிறார். மூன்று மாத காலம் அங்கே இருக்கிறார். மே மாத இறுதி வரையில் அங்கே இருக் கிறார். மே தின விழாவில் பெரியார் அறிமுகப்படுத்தப் படுகிறார். அந்த விழா அணிவகுப்பில் ரஷ்ய பிரதமர் அவர்களோடு எல்லாம் நிற்கிறார். இந்தியாவிலிருந்து வந்திருக்கிற நாத்திகத் தலைவர் என்று அறிமுகப் படுத்தப்பட்டு, வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதற்கு பின்னால் அங்கிருந்து, அவரோடு சென்ற எஸ்.இராமநாதன், டிராட்கியிஸ்ட்களிடம் போய் இரகசியமாகப் பேசுகிறார். இவரோடு வந்தவர் அவர் என்பதை உளவுப்படை அறிந்தவுடன், பெரியாரை யும், அவரது குழுவினரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அரசு ஆணையிடுகிறது; வெளியேறி வந்து விடுகிறார்கள்.
அதன் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்து போய் ஜெர்மனி, பிரான்சு எல்லாம் போய்விட்டு, அதற்குப் பின்னால் நவம்பர் மாதம் இலங்கை வழியாக தமிழ்நாடு வருகிறார். பதினோரு மாத காலம் உலகச் சுற்றப்பயணமாகப் போய், இந்த ஸ்பெயின் போன்ற நாடு – எங்கெல்லாம் புரட்சி நடந்திருக்கிறதோ, பொதுவுடமை எங்கெல்லாம் மலர்ந்து வருகிறதோ, அங்கெல்லாம் போய் எல்லோரையும் சந்திக்கிறார். இங்கிலாந்து போனபோது, சக்லத்வாலா என்கிற, இந்தியாவிலிருந்து போய் அங்கே பொதுவுடமை கட்சி எம்.பி.யாக இருக்கிற அவரை சந்திக்கிறார். தொழில் கட்சி நடத்துகிற ஒரு மாநாட்டில் பெரியார் பேசியிருக்கிறார். மாநாட்டில் அவர் பேசியதை கேட்டால் வியப்பாக இருக்கும். இப்படியெல்லாம் ஒரு மனிதர் – லான்ஸ்பெரி என்கிற தொழில் கட்சி தலைவர் தலைமையில் மாநாடு. அதில் பெரியார் வந்திருக்கிறார், பேசுங்கள் என்று சொல்லியிருக் கிறார்கள். பெரியார் சொல்கிறார். இந்த தொழில் கட்சிகாரர்களெல்லாம் இந்தியர்களைக் கேவலமாகப் பார்ப்பார்கள்; எங்களை விட கேவலமாக உங்கள் தொழில் கட்சியை நான் பார்க்கிறேன் என்று அந்த மாநாட்டிலேயே பேசுகிறார். அந்தப் பேச்சை கேட்க நமக்கு வியப்பாக இருக்கும். எப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் போய் அந்த நாட்டில் பேசுகிற உரை “இங்கிலாந்தில் ஈவெரா சொற்பொழிவு” என்று அது வந்திருக்கிறது. இந்தியர்களாகிய எங்களை ஒரு பரிகசிக்கத் தகுந்த ஒரு சமூகமாகக் கருதலாம், ஆனால் நாங்கள் பிரிட்டீஷ் தொழிற்கட்சியை மிகவும் பரிகசிக்கத் தகுந்த விஷயமாய்க் கருதுகிறோம் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பேச ஆரம்பிக்கும் முன் இதைச் சொல்லி ஆம்பிக்கிறார். அங்கே உட்கார்ந்திருப்பவர் தொழிற்கட்சித் தலைவர். என்னவெல்லாம் சொல்கிறார் என்றால், நீங்கள் தோழர் லான்ஸ்பெரி அவர்கள் இந்தியர்கள் விஷயத் தில் மிக்க அனுதாபமாக இருப்பதால், இந்தியர்கள் சுடப்படுவதையும், அழிக்கப்படுவதையும் சிறையில் அடைக்கப்படுவதையும் விரும்பவில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், தோழர் லான்ஸ்பெரியின் தொழிற்கட்சி அரசாங்கக் காபினட் ஆனது, சுமார் 80,000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக் கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளியிருக்கிறது. நீ என்ன சொல்கிறாய், என்கிறார். அப்பொழுது அங்கு சுரங்கத் தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், நாலணா கூலி உயர்வுப் போராட்டம். பெரியார் சொல்கிறார், உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஐந்தணா தான் கூலி. நீங்கள் நாலணா கூலி உயர்வுக்கு போராட்டம் செய்கிறீர்கள். தொழிற்கட்சி என்று பேர் வைத்திருக் கிறாய், என்று பேசுகிறார். இந்த துணிச்சல் வேறு யாருக்கு வரும் என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அந்த நாட்டில் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிற ஒரு கட்சியின் தலைவர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிற மாநாட்டில் அவரிடம் பேசுகிறார். நீ என்னய்யா எங்களை யெல்லாம் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறாய், என்ன இருக்கிறது பேச, நீ தொழிற்கட்சி என்று பேர் வேறு வைத்துக் கொண்டு இருக்கிறாய், என்று அதில் சொல்லுகிறார். தொழிலாளர்களே, நீங்கள் இந்த போலிக் கட்சிகளையும் கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூக விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட, உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை எதிர் நோக்கிக் கொண்டு இருங்கள், என்று பேசி முடிக்கிறார். தொழிற்கட்சி நடத்தியிருக்கிற மாநாட்டில் போய், இவர்களை யெல்லாம் நம்பாதே, நீ புரட்சிக்கு தயாராகு, என்று பேசுகிற உரையை இங்கிலாந்தில் பெரியார் ஆற்றியிருக்கிறார். (தொடரும்)
பெரியார் முழக்கம் 04032021 இதழ்