தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்
தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்..
தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை.
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார்.
இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பு ஆணை கொண்டு வந்தபோது திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்தது. அப்போது திராவிடர் கழக மேடைகளில் தோன்றி பொருளாதார வரம்புகளை எதிர்த்தவர் தா.பாண்டியன் என்பதை இந்த நேரத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
பொதுவுடமை இயக்கம் கடந்த காலங்களில் செய்த தவறுகளையும் சுய மதிப்பீட்டிற்கு உள்ளாக்கினார். அதை விரிவாக ஆய்வு செய்து நூலாக வெளியிடவும் அவர் தயங்கியதே கிடையாது. 1976 ஆம் ஆண்டு அவசர நிலையை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியில் பார்ப்பனர் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியபோது அதை ஜனசக்தி பத்திரிக்கையில் சுட்டிக்காட்டி கண்டிக்கவும் செய்தார் என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வெளியேறி யுசிபிஐ என்ற கட்சியை உருவாக்கி காங்கிரஸ் கட்சியோடு தோழமையோடு பயணித்து பிறகு மீண்டும் தனது யுசிபிஐ கட்சியை தமிழ்நாட்டில் சிபிஐ கட்சியுடன் இணைத்து அதனுடைய பொதுச்செயலாளராகவும் தமிழக களத்தில் களமாடியவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள். தோழர் தா.பாண்டியன் அவர்கள் பல நல்ல மரபுகளை தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்தகால தலைமுறைத் தலைவர்கள் கருத்து மாறுபாடுகளை கொண்டிருந்தாலும் அந்த மாறுபாடுகளை அறிவுப் பூர்வமாக மேடையில் விவாதித்தார்கள், பேசினார்கள், கலந்துரையாடினார்கள். அப்படி உருவான புதிய சிந்தனைகள்தான் அடுத்தகட்டத்தை நோக்கி புதிய எழுச்சிகளை தமிழகத்தின் சூழலுக்கேற்ப கருத்துக்களை, சிந்தனை மரபினை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது.
அத்தகைய சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதற்கு வித்திட்ட முன்னோடித் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்த பொதுவுடமைப் போராளி தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வீர வணக்கத்தை செலுத்துகிறது.