மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை!
மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம்! இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்! மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்!

“மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்தும் இதுதான். இந்நிலையில் இந்து தமிழர் கட்சி எனும் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் என்பவர் இந்த வருடம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது, தர்கா அருகில் உள்ள மலை உச்சியில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அரசியல் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்த கோயில் நிர்வாகம் பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்றுவோம்; இதுதான் கோயிலின் பழக்கவழக்கம் என்று கோயில் ஸ்தானியர்கள் அறிவித்து விட்டனர்.

இதனை ஏற்காமல் ராம ரவிக்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கோயிலின் பழக்கவழக்கங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் எதனையும் கணக்கில் கொள்ளாமல் எதிர்தரப்புகள் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கக்கூடிய கால அவகாசத்தையும் வழங்காமல், வழக்கமான இடத்தில் தீபத்தை ஏற்றாமல் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணின் மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

இந்த உத்தரவு சமூகப் பதற்றத்தையும், சட்ட நெருக்கடியையும் ஏற்படுத்தி விட்டது.திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல வழக்குகள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலும் அதன் பிறகும் பல நேரங்களில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. 2014 ல் W.P(MD)No.19422 of 2014 மேல் முறையீடு WA(MD)No.1524 of 2014 படி சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு தற்போதுள்ள வழமையான இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று 07.12.2017 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி தற்போது வரை அங்கு உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தற்போது நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீபம் ஏற்றும் படி உத்தரவிட்டுள்ள தர்கா அருகில் உள்ள தூண் தீபத் தூண் அல்ல. அது Survey of India வால் நிறுவப்பட்ட எல்லைக் கல் ஆகும். இங்கு சென்று தீபம் ஏற்ற தர்காவின் படிக்கட்டுகளை பயன்படுத்தி ஏறலாம் என்று நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பை ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இப்படி எதனையும் கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் டிசம்பர் 3 அன்று மாலை 06.00 மணிக்கு தான் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாவிட்டால் 06.05 க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் கடும் நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் கூறினார். மேலும் நீதிமன்ற பாதுகாப்புக்கு மட்டுமே அதுவும் நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே செயல்பட வேண்டிய மத்திய தொழிற் பாதுகாப்பு படையை அரசியல் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமாருடன் அனுப்பி தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் செயல் ஆகும். இந்த அளவிற்கு மக்களின் மத நம்பிக்கையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தி கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய நினைக்கும் மதவாத சக்திகளை நாம் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்.

நீதிமன்ற தீர்ப்புகள், அவர்களே சொல்லும் பழக்க வழக்கங்கள், அவர்களே சொல்லும் ஆகம விதிகள், கல்வெட்டு வரலாற்று ஆதாரங்கள், எதிர்த்தரப்பு வாதங்களுக்கு வாய்ப்பு இவற்றை எதையும் கணக்கில் கொள்ளாமல் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் விதமாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
இது மட்டுமல்ல எச்சில் இலையில் உருளுவது சரி என்று தீர்ப்பளித்தார் இதே ஜி ஆர் சாமிநாதன் அதுவும் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்தது.

அரசியல் சட்ட சாசனப்படி மதச்சார்பற்ற தன்மையோடு நடந்து கொள்ள வேண்டிய, எந்த சார்பு தன்மையும் இன்றி நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதியாக இருந்து கொண்டு பாஜக,ஆர்.எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ சனாதன கருத்துக்களை பொது மேடைகளில் பேசிக்கொண்டு இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து நீதிபதியாக செயல்படுவதற்கு அடிப்படை தகுதியை இழந்தவராக இருக்கிறார்.

மதவாத சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கும் வகையில் எந்தவித தயக்கமும் இன்றி துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வரும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை நீதிபதி பதவியில் இருந்து நீக்கவோ அல்லது பிற மாநிலத்திற்கு மாற்றுவதற்கோ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கிறோம். இந்த மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை மக்கள் மன்றத்தின் முன் தொடர்ந்து அம்பலப்படுத்தி பரப்புரைகளை முன்னெடுப்போம்!”.

– “கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
05.12.2025
பெரியார் முழக்கம் இதழ் 11122025

You may also like...