இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 6

காட்சி – 6

இடம் : இராவணன் அரண்மனையில் ஒரு பகுதி.

பாத்திரங்கள் : இராவணன், சீதை, மேகநாதன், இரண்டொரு வீரர்கள்.

[சீதை தலைவிரி கோலமாக நிற்கிறாள்.)

இராவ : ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இனி நீ வருந்திப் பயன் இல்லை. அந்த மூடர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் உன்னை அவர்களோடு அனுப்பிவிடுகிறேன், வருந்தாதே.

மேக : தந்தையே! ஆரியச் சிறுக்கிக்கா இரக்கம்! அநீதி இழைத்தவன் மனைவிக்கா மரியாதை!

இராவ : எதிரிக்கும் இரங்க வேண்டியது இலங்கையின் பண்பல்லவா மகனே?

மேக : இரக்கத்தைக் கோழைத்தனமென்று கருதிவிடுவார்கள் இழிந்தவர்கள். இந்தச் சிறுக்கியைச் சித்திரவதை செய்ய வேண்டும். இவள் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினால்தான் ஆரியர்களுக்குப் புத்தி வரும். இனியேனும் யாருக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள்.

இராவ : இந்திரசித்தா! ஆத்திரப்படாதே… அறிவிலா மூடர்கள் செய்த வேலையை நாமும் செய்யலாமா? நமக்குத் தீங்கு செய்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதுதானே நமது மரபு?

மேக : மரபு மனிதர்களுக்காக; ஆரியர்கள்…. மிருகங்கள்!

இராவ : இனியாவது திருந்தலாமல்லவா? மனிதர்களாக…

மேக : திருந்தவே மாட்டார்கள்; திமிர்பிடித்தவர்கள். திரித்துக் கூறி தங்களையே பெருமைப்படுத்திக் கொள்ளுவார்கள்!

இராவ : உலகத்திற்கு உண்மை புரியும்….

மே : உலகத்தின் கண்களிலே மண்ணைப் போட்டுவிடுவார்கள். நம் கண் முன்பே நம்மை அரக்கர்கள் என்று கூறி உலகை ஏய்க்கும் கிராதகர்கள் எதைத் தான் செய்ய மாட்டார்கள்?

இராவ : உண்மைக்கு அழவில்லை மேகநாதா…..

மேக : உண்மையை உணர அறிவு வேண்டும் அப்பா. ஆரியர்கள் இப்போது செய்யும் வேலை நம்மவர்கள் அறிவை அழிப்பதுதானே! எதையும் ஆண்டவன் செயல் – அவன் திருவிளையாடல்…. என்று கூறி ஏமாற்றி விடுவார்கள்.

இராவ : தமிழர்களிலே வீரர்கள் உண்டு அவர்களை முறியடிக்க

மேக : துரோகிகளும் இருக்கிறார்கள் அப்பா, ஆதரிக்க…

இராவ : உண்மைதான்.

மேக : பிறகேன் இந்த ஒழுக்கம் கெட்டவளுக்கு உயர்வு தேடுகிறீர்கள்?

இராவ : இது, ஒரு தமிழன் சாதாரண பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை.

மேக : நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள், எதிரிகள் ஏற்றம் கொள்ளப்போகிறார்கள் அப்பா! நாம் இப்போதே படை கொண்டு சென்று பைந்தமிழ்ச் சோலையிலே புகுந்து கொண்டிருக்கும் ஆரியப் புல்லுருவிகள் அத்தனை பேரையும், அந்த ராம லட்சுமணர்களையும் ஒழித்துக் கட்டவேண்டும் என்று சொல்லுகிறேன்.

இராவ : மேகநாதா! அவசியப்பட்டால் அப்படிச் செய்யலாம். இப்போது அது தேவையில்லை என்று நினைக்கிறேன். நிற்க, இவளுக்கு நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். இவளையோ, இவள் கணவர்களையோ துன்புறுத்துவதில்லை என்று. ஆகவே நான் என் வாக்கைக் காப்பாற்றியாக வேண்டும்.

மேக : தங்கள் விருப்பம்… அப்பா! நான் வருகிறேன்.

[கோபமாக எழுந்து போகிறான்.)

சீதை : தமிழர் தலைவா! உங்கள் பெருமையறியாது ஏதோதோ சொல்லிவிட்டேன். மன்னியுங்கள்….

இராவ : அணங்கே! தமிழனது ஆட்சிமுறை முற்றிலும் நீ அறிந்தால் அதிசயப்படுவாய்.

சீதை : சுருங்கச் சொன்னால் ஆரியர்களாகிய எங்கள் முறைக்கு முற்றும் மாறாக இருக்கும் போலிருக்கிறது.

இராவ : ஆம்! தமிழன் தன்மானமுள்ளவன் – தர்மம் தவறாதவன் – நெறி பிறழாதவன் – நீதி வழுவாதவன் – வலுச்சண்டைக்குப் போகாதவன் – வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்குபவன், ஆனால், என்ன காரணத்தினாலோ எங்கள் நாட்டிலே புகுந்தவர்கள் எவரும் எங்களை நல்லவர்கள் என்று சொல்வதே கிடையாது.

சீதை : அதற்குக் காரணம்?

இராவ : காரணம். பொறாமைதான் காரணம்! நீயே பார்க்கிறாயே, எங்கள் நாட்டு வனப்பையும், எனது மக்களின் வாழ்வையும், மாளிகைகளின் பெருமையையும் இவற்றையெல்லாம் பார்க்கும் மாற்றாரின் மனதில் பொறாமை புகாது என்ன செய்யும்? நாங்கள் வாழ்வது உங்களவர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எங்கள் தலையில் இடியைப் போடவேண்டும் என்று உங்கள் முன்னோர்கள் வேதங்களிலே எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்களே அது எதற்காக? எங்களை ஒழித்துவிட்டு உங்கள் வர்க்கம் உயர்வு தேடும் வரையில் ஓய்ந்திருக்காது போலிருக்கிறது. அதற்காகத் தானே உங்கள் ஆரிய முனிகள் – ஆச்சாரியர்கள் ரிஷிகள் எல்லோரும் அக்ரமமாக எங்கள் நாட்டிலே புகுந்து நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்? கேட்டால் மறையோதுகிறோம். மகேசனைத் தேடுகிறோம் – இம் மண்டலத்தையும் உய்விக்கப் போகிறோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்!

சீதை : பேரரசே! உண்மையில் நாங்கள் எவ்வளவோ இழிந்தவர்கள். என் கணவரின் அற்பபுத்தியும், எங்கள் இனத்தின் சுயநல சூழ்ச்சியும் இப்போது நன்றாகப் புரிகிறது.

இராவ : மேகநாதன் பேசியது கண்டு நீ ஆத்திரப்பட்டிருப்பாய்; அதிலே எவ்வளவு உண்மை இருக்கிறது தெரியுமா?

சீதை : உங்கள் பெருமைக்கும் பெருந்தன்மைக்கும் உலகில் ஈடு இணையில்லை மன்னவா.

இராவ : நல்லது! உனது கணவன் வந்து அழைத்துப் போகும் வரையில் நீ எனது அசோக மாளிகையில் தங்கியிரு. அங்கு எனது தம்பி விபீடணனின் மகள் திரிசடை உனக்கு உதவியாக இருப்பாள்.

சீதை : *தங்கள் சித்தம்! தங்கள் அன்புக்கு அடியாள் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த சடலம் உங்கள் பணிக்காக என்றும் காத்துக் கிடக்கிறது. (*வா.ரா.ஆ.கா. 56-ம் சருக்கம் 1-22 )

You may also like...