500க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற 500 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலையை நடத்தி முடித்த இலங்கை அரசு, உயிர்நீத்த பொது மக்கள் – மாணவர்கள் நினைவாக யாழ் பல்கலை வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவிடத்தை புல்டோசர் வைத்து இடிக்க உத்தரவிட்டது. இந்த நினைவுச் சின்னம் சட்டவிரோதம் என்று அரசு அறிவித்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு மீண்டும் நினைவுச் சின்னம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன. நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை யிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் இந்த நிலையில் ஏராளமான அளவில் இராணு வத்தை பல்கலை வளாகத்தில் இலங்கை அரசு குவித்து வருகிறது. மாணவர்கள் இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை அனைத்துக் கட்சித் தலைவர் களின் ஆலோசனையோடு ம.தி.மு.க. சார்பில் வைகோ அறிவித்தார். இந்தப் போராட்டத்தையொட்டி 11.1.2021 அன்று காலை 10.30 மணியளவில் இலயோலா கல்லூரி அருகே 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கட்சிக் கொடிகளுடன் திரண்டிருந்தனர். தூதரகம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைத்துத் கட்சி இயக்கங்களைச் சார்ந்த தலைவர் கள், இலங்கை அரசையும் கண்டிக்க முன்வராத இந்திய அரசையும் கண்டித்தும் உரையாற்றினர். திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்  தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ‘தமிழர்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடு’ என்று முழக்கமிட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகை யில், “நினைவகம் இடிக்கப்பட்டது மட்டுமல்ல; தொடர்ந்து ஈழத் தமிழர்கள் உரிமைகளை மறுத்து, தமிழ் ஈழப் பகுதியை சிங்கள மயமாக்கி வரும் இலங்கை அரசுக்கு எதிராக இந்த முற்றுகைப் போராட்டம் நடக்கிறது” என்றார். வன்னி அரசு (வி.சி.க.), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), டெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), திருமுருகன் காந்தி (மே 17) உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக வைகோ பேசினார். தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 14012021 இதழ்

You may also like...