ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 2 – கொளத்தூர் மணி
உள்நுழையும் முன்
தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி, இலங்கை மலையக இரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்குப் போய், கொத்தடிமைகளாய் உழன்று வந்தனர், ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’. அம்மலையகத் தமிழர்களின் வாக்கு உரிமை பறிப்பு, குடியுரிமை நீக்கம் 1940களின் இறுதியில் நிகழ்ந்தது. அப்போது அம்மக்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. அம் மக்களின் நிலை குறித்து விரிவான கட்டுரைகளும் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்திகளும் நூல்களும் வெளிவந்தன. அரசியல் அமைப்புகள் மாநாட்டுத் தீர்மானங்களாகவும், செயற்குழு தீர்மானங்களாகவும் அம் மக்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. தமிழக, இந்திய ஒன்றிய அரசுகளை அம்மக்களுக்கு ஆதரவாக செயலாற்றத் தூண்டின. அவற்றை செய்தவை திராவிடர் கழகமும், அப்போது புதிதாய் தோன்றியிருந்த திராவிடர் முன்னேற்றக் கழகமுமே ஆகும்.
ஈழக் கோரிக்கையை ஆதரித்து அதைத் தொடர்ந்து 1970களின் பிற்பகுதியில் எழுந்த தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவையும் இவ்விரு கழகங்களேயாகும்.
ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் எல்லாம் அரசுப் படைகளால் அடித்துத் துவைத்து அடக்க முற்பட்டதே இளைஞர்களைக் கருவி ஏந்திப் போராட உந்தியது.
1980களின் தொடக்கத்தில் விடுதலைப் போராளிகள் தமிழ்நாடு வந்த நிலையில் அவர்களுடனான முதல் தொடர்பைக் கொண்டவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்களே ஆவார். தர்மபுரி நச்சலைட் பகுதிகளில் பயணம் – சட்டமன்ற உரை – காவல்துறை வெறியாட்டக் கண்டனம் போன்ற மானுட உரிமை களப் பணிகளும், மாந்தநேயத்துடன் பல சிக்கல்களில் தாமாக முன்வந்து முகம் கொடுக்கும் துணிச்சலும் அவர்பால் போராளிகளை ஈர்க்கச் செய்திருக்கலாம்.
அவரது ஈழப் பயணங்கள், அவை குறித்த அவரது எழுத்துக்கள் ஈழவிடுதலையின் நியாயங்களை உலகுக்கு உணர்த்தவும், அவரது முந்தைய இந்திய ஒன்றிய அளவிலான அரசியல் தொடர்புகள் ஈழ ஆதரவு தளத்தில் முன்னகரவும் பெரிதும் பயன்பட்டன.
அடுத்ததாக, புலிகள் தொடர்பு கொண்ட அரசியல் தலைவர் அன்றைய தி.மு.கவின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த வைகோ அவர்களே ஆவார். புலிகளை அழைத்து கலைஞரிடம் அறிமுகப்படுத்தியது தொடங்கி இன்றளவும் தொடர்கிறது. அவர் தி.மு.கவில் இருந்து விலகி (விலக்கப்பட்டு?) தனி அமைப்பாக உருவாக்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ஈழ விடுதலையையே தனது முழு முதற் கொள்கையாகக் கொண்டு இது தொய்வுமின்றி துடிப்புடன் செயல்படும் கட்சியாக விளங்குகிறது. இவரும் தனது ஈழப் பயணம், எழுத்து, உரை, இந்திய அளவிலான தலைவர்கள் தொடர்புகள் வழியாக ஈழவிடுதலை குறித்த புரிதலை தமிழ்நாட்டைத் தாண்டியும் பலவகைகளில், பல காலக் கட்டங்களில் எடுத்துச் சென்ற தலைவர் ஆவார்.
2009இல் புலிகளின் படைபலம் சிதைக்கப் பட்டதன் பின்னர், மேலைநாடுகளில் ஈழத் தமிழர்களின் துயரங்களை, இனக்கொலையை, தீர்வை, தேவையை – அமெரிக்கக் குடியரசுத் தலைவர், இங்கிலாந்து தலைமையமைச்சர், பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நல்லுறவைப் பேணி, அதன் வழியே அவற்றை விளங்கச் செய்ததில் பெரும்பங்கு அவர்க்கே உண்டு.
மேலும் பிரசெல்சில் நடந்த அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூடியிருந்த அவையில் ஈழத் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்க, புலிகள் இயக்கம் தேர்ந்தெடுத்து அழைத்தது அவரைத்தான். ஒதுக்கப்பட்ட நேரம் கடந்தும் அவைத்தலைவர் மேலும் பேச இசைவு தந்தமை, இறுதிப் போருக்குப் பின்னரான அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை விளைவித்த ஒன்றாகும்.
ஈழ விடுதலையோடு இணைத்துப் பேசப்படும் இராசீவ் வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரின் தண்டனைக் குறைப்புக்கான வழக்குக்காக அவர் எடுத்த முயற்சிகள், அவரது கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டங்கள், மேற்கொண்ட தில்லி உச்சநீதிமன்ற பயணங்கள் பற்றி அனைவரும் அறிவர், ஆனால் அவ்வழக்கு நடத்த அவர் செலவளித்த பல பத்து இலக்கங்களைப் பற்றி என்னைப் போன்ற ஒரு சிலரே அறிவோம்.
மேலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்ட நாள் 16.5.2009 ஆகும். ஏறத்தாழ முள்ளிவாய்க்காலில் போர் முடியும் நேரம் அது. அன்று சில பதற்றமான செய்திகளைப் பரிமாற புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனவே என்னைத் தொடர்பு கொண்டு வைகோ அவர்களிடம் உடனடியாகப் பேசவேண்டும் என்றனர். நானும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது உதவியாளர் தோழர் அருணகிரியைத் தொடர்பு கொண்டபோதுதான், தொகுதியில் பதிவான வாக்குகளைவிட 23,000 வாக்குச் சீட்டுகள் அதிகம் இருப்பது குறித்து அவர் மாவட்ட ஆட்சியருடன் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறினார். நான் அவசரத்தைக் கூறியதும் சில மணித்துளிகளில் வைகோ அவர்கள் எனது தொடர்புக்கு வந்தார். நானும் எனக்கு அனுப்பப்பட்டிருந்த மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்பி வைத்தேன். அதுகுறித்து அமெரிக்க செனட்டர்கள் சிலரிடமும் (குடியரசுத் தலைவரைத் தொடர்பு கொள்ள முடியாததால்) இங்கிலாந்து தலைமையமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் இருவரிடமும் பேசி உரையாடல் செய்திகளை மீண்டும் கூற ஏறத்தாழ 50 மணித்துளிகள் ஆயின.
அவரது தொகுதியில் பதிவானதைவிட வாக்குச் சீட்டுப் பெட்டிகளில் ஏறத்தாழ 23,000 வாக்குச் சீட்டுகள் அதிகமாக இருந்ததே அவர் மாவட்ட ஆட்சியருடன் சொற்போர் கொண்டிருந்த வேளையில் செய்தியாகும். அந்த மிகை சீட்டுகளே அவரது தோல்விக்குக் காரணமாயின. தன் அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் ஒன்றைக்கூட, புலிகள் என்றவுடன் விட்டுவிட்டு ஓடிவரும் செயல் ஒத்த வேறு நிகழ்வொன்றை யாராவது கேள்விப் பட்டிருப்போமா?
மற்றொரு திராவிடர் இயக்கத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர், அரசவைப் புலவர், பெரியாரியலர். முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பையும், பற்றையும் புலிகளுக்காக பயன்படுத்திக் கொண்டவர். பொருளியல் பற்றாக்குறையில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளுக்கு எம்.ஜி.ஆர். முதன் முதலில் கொடுத்த இரண்டு கோடி ரூபாய்களும், தொடர்ந்து அளித்த பெருந்தொகைகளும் பாய்ச்சல் வேகத்தில் புலிகள் இயக்கம் செயல்பட உதவின. தனது பதவி குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல், சில திரைமறைவு உதவிகளின் வழியாகப் புலிகளின் ஆயுத வலிமை உயர உதவியவர்.
இராஜீவ் என்ற கத்துக்குட்டி பிரதமரை, பழம் கிழ நரியான செயவர்த்தனே எளிதில் ஏமாற்றி நிறைவேற்றியதே 1987 ஒப்பந்தம். புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு நெருக்கடி தந்த ஒப்பந்தம். ஈழ விடுதலைப் போரை அமைதிப் படையை அனுப்பி பத்தாண்டுகள் பின்தள்ளிய ஒப்பந்தம். உடல் நலம் கெட்டு அமெரிக்காவுக்கு மருத்துவத்திற்காய் செல்லவிருந்த எம்.ஜி.ஆரை சென்னை கடற்கரையில் தன்னோடு ஒரே மேடையில் நிற்கவைத்து ஆதரித்து பேசவைத்தார் இராஜீவ்காந்தி. அடுத்தநாள், பதற்றமாய், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரை அழைக்க, (அரசியலில் முரண்பட்டு நின்ற நிலையில் இருந்த) அவரோ தான் தனித்து வரமுடியாது, மற்றொருவரை அழைத்து வருவேன் என நிர்ப்பந்தித்து, நெடுமாறன் அவர்களை உடன் அழைத்துச் சென்றார் – காரணம் விளங்காமலே. “நான் மருத்துவத்திற்கு வெளிநாடு செல்கிறேன், உயிரோடு திரும்புவேனா என்பது தெரியாது. நேற்று நான் கடற்கரை மேடையில் இராஜீவோடு நின்றதால் நான் ஒப்பந்தத்துக்கு ஆதரவானவன் என்று தம்பி (தலைவர் பிரபாகரனை அப்போதெல்லாம் அவ்வாறு குறிப்பிடுவதே வழக்கம்) என்னைத் தவறாகக் கருதி விடக் கூடாது. நான் திரும்பி வராவிடில் நீங்கள் இருவரும் தம்பிக்கு இதைக் கூறிவிடுங்கள்” என்று கூறியப் பெருமகன் அவர்.
ஈழத்தில் தமிழர்கள் 1961 இல் தாக்கப்பட்ட போது தமிழினமும், தமிழ் மொழியும் பூண்டோடு அழிக்கப்படுவதில் இருந்து காப்பாற்ற – உண்மை நிலை அறிய ஒரு குழுவை அனுப்ப பன்னாட்டு மன்றம் (ஐ.நா) உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினார் அண்ணா .
அதைப்பின்பற்றி, 1983 அக்தோபரில் தொடங்கி 84 நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு நாடுகள் அவைக்கூட்டத்தில் 70 நாட்கள் அன்றைய அ.தி.மு.க அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் கலந்து கொண்டு பன்னாட்டு மன்றப் பொதுச் செயலாளர் பெரஸ்.டி. கொய்லர் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கம் கொடுக்கச் செய்தார் எம்.ஜீ.ஆர்.