ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் – கொளத்தூர் மணி

முன்னுரை

தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லோருடைய உணர்வுகளும் ஈழத்துக்கும், ஈழ விடுதலைக்கும் ஆதரவானவைகளாக உள்ளன. ஆனால் செயல்தளத்தில், ஈழ ஆதரவு செயல்பாடுகளில் அவ்வாறு கூறிவிட முடியாது.

மற்றொரு பக்கம், ஈழ ஆதரவு என்பதை, சொற்களால் பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் செயல்பாட்டுத் தளத்துக்கு வந்ததில்லை.

ஈழத்தில் 2009 மே திங்களில் நடந்து முடிந்த கடைசிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்தின் அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்தும் வெறியாட்டம் ஆடிய இலங்கை அரசுக்கு, இந்திய காங்கிரசு அரசு ஆயுதம், ஆளணி, உளவு, தொழில்நுட்ப உதவிகள் என முழுமையாய்த் துணை நின்றது. அவ்வரசின் கூட்டாளியாக இருந்த தி.மு.க. தன்னல நோக்கில் அமைதி காத்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாய் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தந்திரமான பட்டினிப் போர், பகட்டுப் பேச்சுக்களாலும் – கூர்மழுங்கவும் செய்தது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் மீதான பகையுணர்வு அவ்வாறு வெளிப்பட்டது. அது அந்தக் கட்சியில் பெரும்பான்மையாக இருந்த ஈழவிடுதலை ஆதரவாளர்களையும், போர் எதிர்ப்பு, இன அழிப்புப் போராட்டங்களில் பங்கேற்க விடாமல் மறைமுகமாக தடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின், குறிப்பாக கலைஞரின் இரண்டக நடவடிக்கை இன உணர்வாளர்கள் இடையில் பெரும் வெறுப்பை உருவாக்கியது. இவ்வெறுப்பு 2009இல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த, தேர்தலில் பங்கெடுக்கும் ஈழ ஆதரவாளர்கள் ஏறத்தாழ அனைவரையும் எதிரணியின் பக்கம் நிற்க வைத்தது.

ஆனால், மனத்தின் அடியாழத்தில் எப்போதும் திராவிடர் இயக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த பலர், தி.மு.க.வின் இந்த இரண்டகச் செயல்களைக் காட்டிக் காட்டி தமது திராவிடர் இயக்க எதிர்ப்புணர்வை வளர்த்தெடுக்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டு மொத்த திராவிடர் இயக்கங்களையும் ஈழ விடுதலை எதிர்ப்பாளர்களாகவும், தமிழ் இனத்துக்கு எப்போதும் இரண்டகம் செய்பவர்களாகவும் நிறுவுவதற்குக் கிளம்பினர்.

போதிய அரசியல் புரிதல் இல்லாத, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு எதுவும் அறியாத புதிய இளையோர் கூட்டம், ஈழத்தின் கடைசி கட்டப் போர் நடந்த நேரத்தில் ஈழ ஆதரவு நிலைப்பாட்டுடன் தெருவுக்கு வந்திருந்தனர். அதுவும் இறுதிப்போர் தொடங்கும் நேரத்தில் ஈழத்திற்கு சென்ற (அனுப்பிவைக்கப்பட்ட) ஒருவர் பிரபாகரனை சில மணித்துளிகள் மட்டுமே சந்தித்து விட்டு வந்ததையே தனது அரசியல் வரலாறாகக் கொண்ட ’காளான்’ தலைவர் போன்றோர், வரலாறுகளை வாட்சப்பில் மட்டுமே பயிலும் அப்பாவி இளையோரிடம், திராவிடர் இயக்க எதிர்ப்புப் பரப்புரைக்கு கலைஞர், தி.மு.க. செயல்பாடுகளைக் கொள்முதல் ஆக்கிக் கொண்டனர். அரசியல் தெளிவு கொண்ட தலைவர்களும், இயக்கங்களும் கூட தி.மு.க.வைக் காட்டியே திராவிடர் இயக்க எதிர்ப்புப் பரப்புரையை மேற்கொள்கின்றனர். முன்னொரு காலத்தில் ’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரவிக்குமார்’ செய்ததைப் போலவே, சில அடிகளை உருவி எடுத்தும், பொருத்தமில்லா பொருள் விளக்கங்கள் கொடுத்தும் தமது அறிவுப் புலமையைக் காட்டப் புறப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த வேளையில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தின், திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

 

தொடரும்

You may also like...