ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

திமுக பங்கு

முந்தைய கட்டுரை படிக்க

தி.மு.கவின் பங்கும் குறைந்ததல்ல. 22.9.1981 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இலங்கைத் தூதரக முற்றுகைப் போரில் ஏராளமானோர் சிறைப்பட்டனர். திராவிடர் கழகம் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய பொதுக் கூட்டத்தினை சில நாட்களில் நடத்தியது.

ஈழப் போராளித் தலைவர்கள் குட்டிமணி, செகன், தங்கதுரை ஆகியோர் சிங்கள அரசால் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, 28.8.1982ஆம் நாளை ஈழத்தமிழர் பாதுகாப்பு நாளாக அறிவித்து, அனைவரையும் கருப்புப் பட்டை அணிய வலியுறுத்தியதோடு தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களை தி.மு.க நடத்தியது. திராவிடர் கழகத்தினரும் இணைந்து அக்கூட்டங்களை நடத்தினர்.

பாண்டியனார் சந்தை (பசார்) வழக்கு போன்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும், இலங்கை அரசு கேட்டிருந்தவாறு போராளித் தலைவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது போன்ற முடிவுகள் திராவிடர் கழகத்தால் 18.6.83 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டு, 2.7.1983 இல் கருணாநிதி, கி. வீரமணி, பழ. நெடுமாறன், அப்துல் லத்தீப், பெருஞ்சித்திரனார் ஆகியோர் கலந்து கொண்ட மிகப்பெரிய கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. 1983 சூலை திங்கள் நடந்தேறிய தமிழினப் படுகொலைக்குப் பின்னர் கொஞ்சம் அடங்கியிருந்த தாக்குதல்கள் 1985இல் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதும், ஏதிலியராய் தமிழகத்துக்கு வருவதும் அதிகரிக்கத் தொடங்கின. அந் நிலையில்தான் 1985 மே 13ஆம் நாளில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organization) ‘டெசோ’ தொடங்கப்பட்டது.

கலைஞர் தலைவராகவும், க. அன்பழகன், கி.வீரமணி, பழ. நெடுமாறன், அய்யண்ணன் அம்பலம் ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தித் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஈழம் என்ற சொல் சென்று சேர்த்ததில் டெசோவின் பங்களிப்பு மிக அதிகம். கலைஞர், அன்பழகன், வீரமணி, வைகோ, நெடுமாறன் ஆகியோர் தொடர் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில்தான் இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே பூடான் தலைநகர் திம்புவில் பேச்சு நடந்தது. அங்கு பேச்சு நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இலங்கைப் படையின் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தி வரவும் பேச்சு முறிந்தது. அதனால் சினமுற்ற இராஜீவ் அரசு சென்னையில் தங்கியிருந்த போராளிகள் தரப்பின் முன்னணித் தலைவர்களான ஆண்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியரோடு சந்திரகாசனையும் நாடு கடத்த ஆணையிட்டது. நாடு கடத்தலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியது டெசோ. 25.8.1985இல் இலட்சக் கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 30.8.1985இல் தமிழ்நாடு முழுதும் தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பணிந்துபோன இராஜீவ் அரசு நாடு கடத்தல் ஆணையை விலக்கிக் கொண்டது. தொடர்ந்தும் எழுச்சிமிக்கப் பேரணிகள் மாவட்டங்கள் தோறும் நடைபெற்றன என்ற போதிலும் 1986 பிப்ரவரி, மார்ச் திங்களில் ஈழத்தமிழர்கள் மீதான வன்முறை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதையொட்டி டெசோ தமிழகம் தாண்டியும் ஈழச் சிக்கலை இந்திய ஒன்றியம் எங்கும் எடுத்துச் செல்ல முடிவெடுத்தது.

அதன் அடிப்படையில் 1986 மே நான்காம் நாளில் மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றிணை டெசோ கூட்டியது. அம்மாநாட்டில் அடல் பிகாரி வாஜ்பாய், என்.டி. இராமாராவ், எல்.என். பகுகுணா, உபேந்திரா, ஜஸ்வந்த்சிங், அசாம் கணபரிஷத் தினேஷ் கோஸ்வாமி, பல்வந்த் சிங் இராமுவாலியா (அகாலிதளம்) அப்துல்ரசித் நாடாளுமன்ற உறுப்பினர் (காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி) பி. உன்னி கிருட்டிணன் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரசு – எசு) போன்றோர் கலந்து கொண்டனர். இம்மாநாடு இந்திய ஒன்றிய பரப்பு முழுவதும் ஈழச் செய்திகளை எடுத்துச் செல்ல ஒரு பெரும் வாய்ப்பாய் அமைந்தது. 1982ஆம் ஆண்டு, சென்னை , பாண்டியன் சந்தையில் (ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் வணிகத் தெரு) புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை, (ப்ளாட்) தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு தலைவர் உமா மகேசுவரன் (முகுந்தன்) கைத்து முக்கியால் சுட , பிரபாகரனும் திருப்பிச்சுட ஒரு துப்பாக்கிச் சண்டை நடந்தது. அவ்வழக்கில் நால்வர் சிறைப்படுத்தப் பட்டனர். அவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை அரசு கேட்டது. பிரபாகரன் உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும், அவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் போராட்டங்களை நடத்தியது.

அப்போது புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக தமிழ்நாட்டில் பணியாற்றிவந்த புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியன் (பின்னர் இளங்குமரன்) அவர்களின் தொடர்பு கிடைத்தது.

அதன் காரணமாக சென்னை பெரியார் திடலில் 9.7.1983இல் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில்தான் திராவிடர் கழகத்தின் அன்றைய இளைஞரணி செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் முன்முயற்சியில் ஈழத்தமிழர் கண்(ணீர்) காட்சி என்ற ஈழவிடுதலை வரலாற்றை, ஈழத்தமிழர் படும் அல்லல்களை, அரச வன்முறையை விளக்கும் கண்காட்சி நடைபெற்றது.

அம்மாநாட்டின் முதன்மைப் பேசுப்பொருளே ஈழ விடுதலையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக 24.7.1983 முதல் 45 நாட்கள், இன்றைய கோவை நகரப் பேருந்து நிலையம் அருகில், தற்போது இராசாசி சிலை உள்ள இடத்தில், தோழர்கள் கோவை கு.இராமகிருட்டிணன், வெ.ஆறுச்சாமி ஆகியோரின் ஏற்பாட்டில் கண்காட்சி நடந்தது. அக்கண்காட்சியில் தான் 15.7.1983இல் சுற்றி வளைப்பில் வீரச்சாவு அடைந்த உயிரிழந்த ஆசீர் சீலனின் புகைப்படமும், 23.7.1983இல் 13 படை வீரர்களையும், படை வண்டியை அழித்தொழித்த மோதலில் வீரச் சாவடைந்த செல்லக்கிளியின் படமும் இடம் பெற்றன. தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் இக்கண்காட்சி திராவிடர் கழக இளைஞரணியால் நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் மூன்று, நான்கு இடங்களில் கண்காட்சிகள் நடக்கவும், அமைக்கவும் வாய்ப்பாக கண்காட்சியின் அனைத்து புகைப்படங்கள், தரவல்கள், வரைபடங்கள், ஓவியங்கள் அனைத்தையும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி ஏழு படிகள் எடுத்துக் கொடுத்து உதவினார். அக்கண்காட்சியைக் கண்ணுறும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் இடும் நன்கொடைகள் தான் தொடக்ககாலப் புலிகள் இயக்கச் செயல்பாடுகளுக்கு முதன்மை வருமானம் ஆகும்.

23.11.1983இல் புது தில்லிக்கு வந்த இலங்கை அதிபர் ஜே.ஆர். செயவர்த்தனேயை எதிர்த்து தமிழகத்திலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள் 120 பேர் புதுதில்லி சென்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1983ஆம் ஆண்டின் இறுதியில், திசம்பர் 17,18 ஆகிய நாட்களில், ”ஈழ விடுதலை மாநாடு” திராவிடர் கழகத்தால் மதுரையில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் அமிர்தலிங்கம், காசி ஆனந்தன், வண. சின்னராசா ஆகியோரும், அரசியல் கட்சிகளில் இருந்து, வைகோ, நெடுமாறன், இராசா முகமது (அ.தி.மு.க அமைச்சர்) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அம் மாநாட்டின் தொடக்கத்தில் நடை பெற்ற ஈழவிடுதலைப் பேரணியின் இறுதியில், மாநாட்டின் முன்புறம், அமைக்கப்பட்டிருந்த மிக உயர்ந்த கம்பத்தில் ஈழக்கொடியை விடுதலைப் புலிகள் இயக்கத் தோழர் குமரிநாடன் உயர்த்தி வைத்தார்.

மாநாட்டுக்கு முன்னதாக திராவிடர் கழகத் தோழர்கள் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து இருபது, இருபது தோழர்களைக் கொண்ட வழிநடை பரப்புரை அணிகள் திசம்பர் 9ஆம் நாள் தொடங்கி தமிழர்நாடெங்கும் ஈழ விடுதலைப் பரப்புரை செய்து கொண்டு திசம்பர் 16ஆம் நாள் மதுரையை அடைந்தது.

இந்தியாவில் பயிற்சி – அடுத்த கட்டுரையில் தொடரும்

You may also like...