இராமாயண நாடகம் – பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

பால காண்டமும், அயோத்தியா காண்டமும்

காட்சி – 1

இடம் : காட்டில் வால்மீகி ஆசிரமம்.

பாத்திரங்கள் : வால்மீகி, சீதை, லவன், குசன்.

[மெளனமாக அமர்ந்திருந்த வால்மீகி தனக்குள்ளாகவே கூறிக்கொள்கிறார்.) “உண்மையை, உலகம் ஒரு நாள் அறிந்தே தீரப் போகிறது. ஏன் நாமே அதைக் கூறிவிடக் கூடாது.”

[இப்பொழுது சீதையும் லவகுசர்களும் அங்கு வருகிறார்கள்.]

வால்மீகி : காலம் வந்து விட்டது சீதா! காவியத்தைத் தொடங்கப் போகிறேன்; உன் கண்மணிகளின் இதயங்களிலே புதிய கருத்துக்களைத் தூவப் போகிறேன்.

சீதை : எல்லாம் உங்கள் கிருபை மகரிஷே!

வால் : குழந்தைகாள்! ஏடுகளை எடுத்து வந்து என்னருகில் அமருங்கள்.

(குசனும் லவனும் ஏடு எழுத்தாணிகளுடன் வந்து வால்மீகியின் முன்னர் அமர்கின்றனர்.)

வால் : கண்மணிகாள்! காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு மாகாவியத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்; உலகு கண்டு வியக்க இருக்கும் அம் மா ஓவியத்தைக் கவனமாகத் தீட்டி வாருங்கள். கருத்துக்களைச் செவ்வனே குறித்துக் கொள்ளுங்கள்; உங்கள் எதிர்காலமும்… உள்ளத்தை இரும்பாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் அன்னையின் நல்வாழ்வும் இம் மாகாவியத்தைப் பொறுத்தே இருக்கிறது.

[குசனும் லவனும் எழுத வால்மீகி காவியத்தை தொடங்குகிறார்.]

ஒலி : கோசல நாட்டுக் குறு மன்னன், தசரதன், தள்ளாமையின் உருவம்; அவன் இதயமோ காமக் கடல். மாலையிட்ட கோசலையும், கரம் பிடித்த சுமித்திரையும், அருகிருந்தும், அறுபதாயிரம் அழகிகளைக் சுவைத்து ஆனந்தப்பட்டான் அந்த ஆரியர் குலத்தலைவன்; ஒரு சமயம் சம்பரன் என்ற திறனுடைய தென்வேந்தன் மீது போர் தொடுத்த பொழுது அவனுக்கு உதவியாக வந்தாள் கேகய நாட்டு இளவரசி கைகேயி, அவள் மீதும் மையல் கொண்டான். அம் மாமன்னன்(?) மண்டியிட்டான் – தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான்…

கைகேயியின் தந்தை கேகயன்; தன் மகள் வயிற்றிலே பிறக்கும் மகவுக்கு அயோத்தி அரச பீடத்தைத் தசரதன் தருவதாக இருந்தால் தன் மகளை மணம் முடித்துத் தருவதாகக் கூறினான். ஒப்பி அவளையும் தன் அழகிகள் பட்டாளத்தில் ஒருத்தியாக ஆக்கிக் கொண்டான் அக்கிழக் குமரன்.

காலம் ஓடியது. தசரதக் கிழவனின் கால்களும் தள்ளாடியது. ஆனால் அவன் காண்பதற்கு ஒரு குழந்தையைக் கூடக் காணோம் அரண்மனையில். காதிலே மழலை மொழி புக வழியேதும் காணாத மன்னன், அரச குரு வசிஷ்டரிடம் முறையிடுகிறான். பின்னர், அந்தணர் கூட்டம் திரண்டது… மகவு பெற மார்க்கம் தேடப்பட்டது…. வேதங்கள் சுருதிகள் அலசப்பட்டன. வேதியர் குழாம் திட்டம் தீட்டியது; ரிஷ்யசிருங்க முனிவரை அழைத்து அஸ்வமேதமும், புத்திரகாமேஷ்டியும் தொடங்க வேண்டுமென்று, ஏற்பாடுகளை வசிஷ்டருடன் ஸுயஜ்வர், வாமதேவர், ஜாபலி, காசியபர் முதலிய மறை வல்லோர் கவனிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

*அசுவமேதயாகம் (வா.ரா. பாலகாண்டம் : சருக்கம் 8 – 14) நடைபெறுகிறது. தசரதனின் காதல் மனைவியர்களான கோசலையும், சுமித்திரையும், கைகேயியும் ஓர் இரவு முற்றும் கட்டிப் புரளுகின்றனர் வெட்டுண்ட குதிரைகளின் குறிகளுடன்… அத்துடன் விட்டதா ஆரியர் வேத மகிமை!

யாகங்களை முன்னின்று நடத்திய ருத்விக்குகளான ஹோதா, அத்வர்யு, உத்காதா என்பவர்களுக்கு முறையே கோசலை, கையேயி, சுமித்திரை ஆகிய தன் பத்தினிகளைக் கரம்பிடித்துக் கொடுக்கிறான் தசரதன். வேத விதியாம் இது…. என் செய்வது! குழந்தை பிறக்க வேண்டுமே! பல இரவுகளுக்குப் பின் பணம் பெற்றுக் கொண்டு பாவையர்களை மன்னனிடம் ஒப்புவித்து விடுகின்றனர் அப்பரப்பிரமங்கள்!

காலம் ஓடுகிறது; கரு முற்றுகிறது; ராம, பரத, லட்சுமண சத்துருக்கணர்கள் முறையே கோசலை, கைகேயி, சுமித்திராதேவி?யர்களுக்குப் பிறக்கின்றனர்…..

மைந்தர்கள் வளர வளர மன்னன் தசரதனின் மனக்கவலையும் வளர்கிறது. தனக்குப் பிறகு அரச பீடத்திலே யாரை அமர்த்துவது என்று? வாக்குக் கொடுத்தபடி கைகேயி பெற்ற புத்திரன் பரதனையா? அல்லது முதல் மனைவி கோசலை பெற்ற மூத்த பிள்ளை ராமனையா? என்று சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தாள் அக் கிழமன்னன்.

இந்த நேரத்திலேதான்…. ஒழுங்கான அரசின் கீழ், நேர்மையான சட்ட திட்டங்களுடன் ஆட்சி நடத்தி வரும் அசுரர்களின் (திராவிடர்கள்) நாட்டின் மீது கண்வைத்த ஆரியக் கூட்டத்தினர் தங்கள் கொலை வேள்வி முறைகளையும் – வேத ஸ்மிருதி மார்க்கங்களையும் அங்கும் பரப்ப முயன்றபோது அவ்வசுரர்களால் தடுக்கப்படுகின்றனர். பலரிடத்தும் முறையிட்டும் பயன்காணா அவ்வேதமோதிகளின் கூட்டத்தினரில் ஒரு பகுதி, விஸ்வாமித்திரர் தலைமையில் தசரதனிடம் வந்து, விஷயத்தை விளக்கி “குறுநில மன்னனே! உனது கொடியை குவலய மெங்கும் பரப்ப மார்க்க மிருக்கிறது…. தடை சொல்லாது ராம லட்சுமணர்களையும், சிறுபடை ஒன்றையும் அனுப்பு, அரக்கர் கொட்டத்தை ஒடுக்கி, உனது அரசு எல்லையை விரியச் செய்கிறோம்” என்று கூறவே, ஆசைவயப்பட்ட தசரதன் அப்படியே செய்கிறான்.

இப்பட்டாளம் நல்லாட்சிக்குட்பட்டிருந்த அசுரர்கள் நாட்டில் புகுந்து முன்னேற்பாடில்லாதிருந்த தடாதகை, சுபாகு போன்றார்களை அழித்து, ஆரியர்த்தம் குடி, கொலை, வேண்டா ஒழுக்கங்களைப் பரப்பி விட்டு மிதிலை அடைகிறது.

மிதிலாபுரி மன்னன் சனகன் என்பானுக்கு, சொந்தமாகப் பிள்ளைகள் இல்லை. ஆனால் சில காலத்திற்கு முன்னர் தன் பூங்காவில் உலவப் போகும் போது. அதன் ஓரத்திலே சின்னஞ்சிறு பெண்மகவு ஒன்று துணியால் சுற்றப்பட்டு ஆங்குக் கிடத்தப் பட்டிருக்கவே, தகாத வழியிலே பிறந்த இக்குழவியை எந்தத் தாயோ இப்படிப் போட்டுவிட்டாளே என வருந்தி அதையெடுத்து வளர்த்து வந்தான். அச்சிற்றிடை, பருவமடைந்து இப்போது பல ஆண்டுகளாகி இருந்தும், அவளைக் கரம் பற்றி அழைத்துச் செல்ல எந்த அரச குமாரனும் வராத காரணத்தால், மனமொடிந்த சனகன், தன்னிடமிருந்த ஓர் ஓட்டைவில்லை முன் வைத்து அதை நாணேற்றக் கூடிய சாதாரண மனிதன் கூட சனக குமாரிக்கு மணவாளனாகலாம் என்று ஊர் அறிய விளம்பரம் செய்திருந்தான். அப்படியும் யாரும் கிடைக்காதிருந்த நேரத்திலேதான், விஸ்வாமித்திரருடன் ஆங்கு போந்த ராமன் வில்லை எடுக்கிறான். அதற்குள்ளாகவே அது உடைத்துக் கொள்கிறது. எவ்வளவு மோசமான வில்லை வைத்திருக்கிறான் சனகன் என்பது இதிலிருந்தே புரியும். எப்படியாவது மகளுக்கு மணவாளன் கிடைத்தால் போதுமென்ற கவலை போலும் அவனுக்கு

பிறகு சீதா ராம திருமணம் நடைபெறுகிறது. அதோடு கூடவே ராமனது இளவல்களுக்கும் மணம் முடிகிறது. எல்லோரும் அயோத்தி திரும்புகின்றனர் – பெரிய மகன் ஸ்ரீராமனின் திறமைகளை(?)க் கண்ட தசரதன் எப்படியும் அவனுக்கே முடி புனைவது என்று வசிஷ்டருடன் சேர்ந்து சதி செய்கிறான். முனியும் அதற்குச் சம்மதித்து நாள் குறிப்பிடுகின்றான். முன்னேற்பாடாக பரதனையும் சத்ருக்கனையும் அவர்களது பாட்டன் வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.

குறித்த நாள் நெருங்குகிறது. தசரதனின் சதி வேலையைத் தன் தோழி மந்தரை மூலம் உணர்ந்த கைகேயி தசரதனிடம் நீதி கோருகிறாள்…. தசரதன் தடுமாறுகிறான்… மீண்டும் முனிவர்கள் கூட்டம் ஆலோசனை நடத்துகிறது.

“சிறிய இந்தக் கோசலா நாட்டுக்கு இவ்வளவு பெரிய சண்டையா? வேண்டாம்; தெற்கே அசுரர்களது பரந்த நாடு இருக்கிறது அதை மட்டும் ராமன் கைப்பற்றி விட்டால் ஆரிய அயோத்தி ராஜ்யம் எவ்வளவு பரந்து விரிந்து கிடக்கும் தெரியுமா? முடிந்தால் இலங்கை வேந்தன் ராவணனது நாட்டைக்கூட கைப்பற்றலாமே…. அதற்காகத்தானே நமது ஒற்றர்களாகிய முனிவர்கள் நமது முறைகளை இப்போது அந்நாடுகள் எங்கும் பரப்பி அந்நாட்டு மக்களை மடையர்களாக்கி வருகிறார்கள். ஆகவே, ராமன் தைரியமாகக் கொஞ்ச காலம் எங்களோடு வந்தால், எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்து அசுரர்களை ஒழித்து, ஆரிய தர்மத்தையும், ராஜ்யத்தையும் நிலைநாட்டுவோம்” என்கின்றனர்.

சாம்ராஜ்ய வெறி பிடித்த தசரதன் அதற்கு சம்மதிக்கவே ராமனும் பரந்த நாட்டுக்கு அதிபதியாக வேண்டுமென்ற வஞ்சக எண்ணங் கொண்டு சதி வேலைக்கு உடன்பட்டு ஆரிய முனிவர்களோடு சேர்ந்து தென்னாட்டின் மீது வஞ்சகப் போர் தொடுக்க முன் வருகிறான்.

சில நாட்கள் கழித்து பரதன் மீண்டும் அயோத்திக்கு வருகிறான். அதற்குள் தசரதன் மாண்டு விடுகிறான். ராமனின் நோக்கத்தை அறிந்த பரதன் சித்திரகூடத்திற்கு வந்து ராமனை சந்திக்கிறான். ராமன் விஷயத்தை விளக்குகிறான். அதற்கு ஒப்புக் கொண்ட பரதன் நந்திக் கிராமத்திலிருந்து கொண்டு ராமனது இரண்டு பாதரக்ஷைகளை (செருப்புக்களை) அரச பீடத்திலேற்றி வைத்து அரச வேலையைக் கவனிக்கிறான்.

சிலந்தியின் வலையைப் போல் ஆரியர்கள் கூட்டம். முனிவர்கள் – ரிஷிகள் – தபஸ்விகள் என்ற போர்வையிலே தென்னகத்தே சதிக்கூடத்தை நிர்மாணிக்க – ராம லட்சுமணர்கள் சீதா சமேதராக பவனி வருகின்றனர்.

திராவிட (அசுரக் கூட்டத்தினர்க்கு இவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள்… அம்மம்மா! எழுதக் கைகூசும்… இந் நிலையில்தான், தென்னாட்டுப் பெருவேந்தன் இராவணன் இக் கொடியர்கள் கூற்று கேட்டுக் கொதித்து எழுகிறான்: அவையைக் கூட்டுகிறான்; ஆரியர்களின் அடாத செயல்களைப் பற்றி ஆராய்கிறான்.

You may also like...