காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர் !
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் பெரியாரியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடைபெற்றது.அந்த பயிரங்கத்தின் இடையே ஜாதிமறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது.
குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் அவர்கள் மணி நடத்தி வைத்தார்.
மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காவலாண்டியூர் கிராமம்,கழகக் கட்டமைப்புடன் செயல்படக்கூடிய பகுதி.
பெயரிலேயே‘காவல்’அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒருதனி சிறப்பு உண்டு. குடும்பத்தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராளமான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டியூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த சின்னத்துரை எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டியூர்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு, ‘இனி நமக்குப்பயமில்லை’ என்று அவர்கள் கூறுவதாக அந்தக் காட்சி இருக்கும். அந்த திரைப்படத்தின் இயக்குனரின் தம்பிக்கு இங்கு திருமணம் நடைபெற்று பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
காவலாண்டியூரில் கடும் எதிர்ப்புக்கிடையே கழகம் கால்பதித்து வளர்ந்த நிகழ்வுகளை காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் முகாமில் நினைவு கூர்ந்தார். தோழர்கள் சித்துசாமி, ஈசுரவன், சுப்ரமணியம் ஆகியோர் முன்னின்று கழகத்தை உருவாக்கிய போது, கடும் எதிர்ப்பு இருந்தது. அப்படி எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரின் அடுத்த தலை முறையினர் முழுவதுமாக கழகத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருவதை சுட்டிக் காட்டினார்.
கழகத்துக்காக நிரந்தரமாக கட்டிடம் ஒன்றை உருவாக்கி அங்கே பெரியார் படிப்பகத்தை நடத்தி வருகிறது, காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம். இந்த ஊரிலிருந்து தோழர்கள் குடும்பம் குடும்பமாக இந்த முகாமில் பங்கேற்றனர்.