ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு ! தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

ரஜினிகாந்த் மீது 04.03.2020 ல் மீண்டும் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கு !
தற்போதைய நிலை என்ன?
நீதிமன்றம் கூறியுள்ளது என்ன??

துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார்.

ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது ஆகவே ரஜினியின் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் புகார் மனு அளித்தது.

ஆனால் அந்த புகார் மனுக்களின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்ததை அடுத்து ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்கு 21.01.2020ல் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் காவல்நிலையங்களில் புகார் அளித்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் நீதிமன்றத்தை ஏன் அணுகினீர்கள் என்றும் காவல்துறைக்கு போதிய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் அவர்கள் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வழங்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ஆகவே இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் முதலில் தொடர்ந்த அந்த வழக்கை திரும்ப பெற்றது.

அதன் பிறகு நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை கேட்ட கால அவகாசம் முடிந்து பல நாட்கள் ஆனதற்கு பிறகும் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த வழக்கையும் காவல்துறை இதுவரை பதிவு செய்யவில்லை.

இதனை சுட்டிக்காட்டி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 04.03.2020 ம்தேதி சென்னை குற்றவியல் எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் கழகத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார்கள்.அந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நேற்று ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது.

வன்முறையை தூண்டும் விதமாகவும், வெறுப்பு பிரச்சாரமாகவும் பேசியதற்காக ரஜினி மீது பிரிவு 156(3)குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்காக பதிவு செய்ய நாம் அளித்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அதற்கு பதிலாக
ரஜினி மீது தனிப்பட்ட புகாராக
அவதூறு வழக்கு பதிவு செய்ய மனு அளிக்குமாறு வழிகாட்டியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முரண்பட்டதாகவே நமக்கு தெரிகிறது.

ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் ஜன.14ஆம் தேதி உள் நோக்கத்தோடு நடக்காத ஒன்றை பேசுகிறார்.அதன் பின்பு ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு பாலவாக்கத்தில பெரியார் சிலை உடைக்கப்பட்டது.பெரியார் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார் ( Crime.No.20/2020 Palavakkam Police Station) அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம் என்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் படியும் சமூகத்தில் வன்முறையை தூண்டும் விதமாகவும் வெறுப்புணர்வோடு நடந்து கொள்பவர்களை தடுக்கும் விதமாகவே குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது.

அவ்வாறு வெறுப்பு பேச்சின் விளைவாக நடந்த வன்முறைச்செயலைச் செய்பவருக்கு குண்டர் சட்டம் போடும் அதே காவல்துறைக்கு அந்த வெறுப்பு பேச்சை பேசி வன்முறைக்கு தூண்டுகோலாய் இருந்தவர் மீது அவதூறு வழக்கு மட்டும் பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்துவது வேதனையளிக்கிறது.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றது.ரஜினிகாந்தின் பேச்சை ஆதரித்து சேலத்தில் பெரியார் ஊர்வலம் நடத்திய அதே இடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஊர்வலம் செல்ல முயன்று காவல்துறையுடன் தள்ளுமுள்ளு செய்து தடியடி பிரயோகம் நடத்தி அந்த கூட்டத்தை கலைக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் ரஜினியின் பேச்சால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்கு உணர முடியும்.

இந்நிலையில் ரஜினி மீது நாம் கேட்ட வன்முறையை தூண்டும் விதமாகவும் வெறுப்புப் பிரச்சாரம் ஆகவும் பேசியதற்கு 156(3) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாமல் வெறும் அவதூறு வழக்கு பிரிவு 200 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தி இருப்பது எவ்வாறு சரியானதாக இருக்கும் ?

ரஜினியின் உள்நோக்க வெறுப்பு பேச்சு குறித்து சட்டமேல் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனைகளை நமது கழக வழக்கறிஞர்கள் செய்து வருகிறார்கள்.

ரஜினியின் இந்த உள்நோக்கத்துடன் ஆன வன்முறையை தூண்டும் வெறுப்பு பேச்சு மீது சரியான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை திராவிடர் விடுதலை கழகத்தின் சட்டப் போராட்டம் தொடரும்.

– திராவிடர் விடுதலைக் கழக தலைமையகம்,
11.03.2020.

You may also like...