அயோத்தித் தீர்ப்பை மறு ஆய்வு செய்க: தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்
பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் அயோத்திப் பிரச் சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 21.11.2019 அன்று மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), தெஹலான் பாகவி (எஸ்.டி.பி.அய்.), தனியரசு (சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்கள் உரையாற்றினர். அயோத்திப் பிரச்சினையில் சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, என்றும் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திருமாவளவன் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், கழக மாவட்ட செயலாளர்
இரா. உமாபதி உள்ளிட்ட 28 பேர் மற்றும் ஆயிரம் பேர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பெரியார் முழக்கம் 28112019 இதழ்