பொதுத் தேர்வு ஒரு சித்திரவதை ஆயிஷா நடராசன்
கற்றலும் கற்பித்தலும் இனிமையான மகிழ்வூட்டும் அனுபவமாக இருக்க வேண்டும் என்று நாம் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுமே ‘தேர்வு’ என்ற ஒற்றைச் சொல்லால் முறியடிக்கப்பட்டு விடுகிறது – பேராசிரியர் யஷ்பால் (யஷ்பால் குழு அறிக்கை, 1993 – முன்னுரை)
ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. (தற்போது 3 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு எனக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்). இந்த அறிவிப்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உலகில் எங்குமே இல்லாத பேரிடரை நமது மண்ணில் செயற்கையாக உருவாக்கும் பின்விளைவைக் கொண்டது. பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) எனும் ஒரே தேர்வை முன்பு ஆங்கிலேய அரசு வைத்திருந்தது. அதை முடித்தால் கல்லூரி (பி.யூ.சி.) போய்விடலாம். ‘கோத்தாரி கல்விக் குழு’ பி.யூ.சி.யை மேல்நிலை வகுப்பாக்கிப் பள்ளிக் கல்வியில் இணைத்தபோது பிளஸ் 2 தேர்வு உருவானது. இப்படியாக, பள்ளியில் இரண்டு பொதுத் தேர்வுகள் வந்தன. அதுவே பதினோராம் வகுப்பிலும் பொதுத் தேர்வு என இரண்டாண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. பிளஸ் 1 பாடமே நடத்தாமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை நடத்தும் தனியார் பள்ளிகளை வேறுவகையில் கண் காணிக்க முடியாமல் கொண்டு வரப்பட்ட தேர்வு இது.
இந்தத் தேர்வு காரணமாகச் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தமிழகப் பள்ளிகளில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித் தேர்வுத் துறையே வெளி யிட்டுள்ளது. இவர்கள் பாலிடெக்னிக் (டிப்ளமா) படிக்கப் போயிருக்கலாம் எனத் தலைமை ஆசிரியர்கள் சொல் கிறார்கள். பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத இந்தச் சிறார் அங்குள்ளனரா என விசாரித்தால், கடந்த நாலைந்து ஆண்டுகளில் அவர்களது சேர்க்கை பல ஆயிரம் குறைந்து விட்டதாகவும் அந்த மாணவர்கள் தங்களிடம் வர வாய்ப்பில்லை என்றும் பட்டயத் தொழிற்கல்வித் துறை சொல்கிறது.
பிளஸ் 1-ல் சேர்ந்து பொதுத் தேர்வின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் தொடராமல் போன ஒன்றரை லட்சம் சிறார் நமக்குப் புகட்டும் பாடம் என்ன? ஒரு ஊரில் புயல், சுனாமி தாக்கும்போது மனித உயிர்கள் பலியாவது போல மாணவர்களைக் கல்வியைவிட்டே காணாமல் போக வைக்கும் கல்வி சுனாமிதான், பொதுத் தேர்வு முறை.
பொதுத் தேர்வு எனும் வர்த்தகம்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1882-ல் வில்லியம் ஹன்டர் என்பவருடைய தலைமையில் இந்தியா வந்த கல்விக் குழுதான் முதலில் பொதுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. பள்ளி இறுதித் தேர்வு என்று அதற்குப் பெயர். ஆங்கிலேய ஆட்சிக்குத் தேவையான எழுத்தர், கணக்காளர் வேலை களுக்கு ஆளெடுக்க அந்தத் தேர்வைப் பயன்படுத்தினார்கள். 1979 வரை அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைமுறை யில் இருந்தது. பிறகு அறிமுகமான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் அடிப்படையில் ஆங்கிலேயர் நடத்திய பொதுத் தேர்விலிருந்து வேறுபடுகின்றன. உதாரணமாக, அன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், ஏனைய பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் என்பது அந்த ஆண்டு தேர்வு எழுதியவர் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் ஒரு பாடத்தில் 80 மதிப்பெண் பெற்று, மற்றொரு பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய மதிப்பெண்ணை பெறத் தவறினால் அதிக மதிப்பெண்ணிலிருந்து பத்துக்கு ஒரு மதிப்பெண் எனத் தேர்ச்சி பெறாத பாடத்துக்குச் சேர்த்துத் தேர்ச்சி வழங்கப் பட்டது. இன்று நடக்கும் பொதுத் தேர்வு இத்தகைய நெகிழ்வுத் தன்மை இன்றி முரட்டுத்தனமான அம்சங்களைக் கொண்டது. மாதிரித் தேர்வுத்தாள் வர்த்தகம், நோட்ஸ்/கைடு வர்த்தகம், டியூசன் பயிற்சி வர்த்தகம், தனியார் பள்ளிக் கட்டண வர்த்தகம் எனப் பல வர்த்தகங்களின் கூட்டுவணிகமா கவே இன்றைய பொதுத் தேர்வுகள் நடத்தப்படு கின்றன. இதன் பொருட்டு பள்ளி மாணவர்களது பெற்றோர் சில நேரம் கல்லூரிக் கட்டணத்தைவிடக் கூடுதலாகப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர் தலையில் அத்தனை சுமையும் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் இத்தகைய சூழலுக்குத் தள்ளப் பட்டிருப்பது கொடுமை.
பொதுத் தேர்வு எனும் வன்முறை
அதிகாலை நான்கு மணி டியூசன் முதல் இரவு ஒன்பது மணி சிறப்புப் பயிற்சிவரை ஆண்டு முழுக்கப் பொதுத்தேர்வு தயாரிப்பு எனும் சித்ரவதை குழந்தைகளை வாட்டி வதைக்கிறது. அதிலும் தேர்வு முடிவு வெளிவரும் நாளில் நடக்கும் தற்கொலைகள் பொதுத் தேர்வுகளுக்குச் சிறப்பு வன்முறை அந்தஸ்தை வழங்குகின்றன. அதிலும் ‘பலூன் பருவம்’ என்று அழைக்கப்படும் பத்து வயதில் (5-ம் வகுப்பு) குழந்தைக்குத் தேர்வு வைப்பதே தவறு. உடல்ரீதி யாக குரல்வளை, உள்நாக்கு வளர்ச்சி முழுமை அடையாத பருவம் அது. அதனால் சத்தமாக வாய்விட்டுச் சொல்லும் (டீசயட னுசடைட) பயிற்சி அதிகம் தர வேண்டிய காலம் அது. ஒரு சொல், ஒருவரி எழுதும் பருவம். சாலையில் நடந்து கவனமாக வீட்டுக்குச் செல்லத் தெரி யாமல் யானை, மிட்டாய்க்காரர், ஐஸ்கிரீம் வண்டிக்குப் பின்னால் செல்லும் பழக்கத்தை விடாத பருவத்தின் மீது பொதுத் தேர்வைத் திணிப்பதைவிடப் பெரிய வன்முறை வேறெதுவும் இல்லை. எட்டாம் வகுப்புக் குழந்தைகள் (12, 13 வயதினர்) மார்புக்கூடு முழுமைபெறவும் முதுகுத்தண்டு நிலைபெறவும் குறைந்தபட்சம் ஒன்பதில் இருந்து பத்து மணிநேரம் வரை உறங்க வேண்டியவர்கள். மன அழுத்தம் தரமுடியாத மென்மையான இரண்டும் கெட்டான் பருவம் அது. அவர்களைத் தனிமைப்படுத்தி தூக்கத்தைக் கெடுத்துப் பொதுத் தேர்வு எழுதப் பயிற்சி தருவது சித்ரவதைதான். 1966-ல் தயாரிக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக் குழுவின் அறிக்கையைப் பத்தாண்டு களுக்கு மேல் விவாதித்து, 1979-80ல்தான் தமிழ்நாடு அதை ஏற்று அமல்படுத்தி பிளஸ் 2 தேர்வைத் தொடங்கியது. ஆனால், இன்றோ கஸ்தூரி ரங்கன் கல்விக்குழுவின் பரிந்துரைகளைச் சட்டப்பேரவை யில்கூட விவாதிக்காமல் இத்தனை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசரமும் நிர்ப்பந்தமும் என்ன?
தேர்வுகளும் மற்ற நாடுகளும்
பிற நாடுகளில் தேர்வே இல்லையா? அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் ஒருவரை தயார்படுத்துவதே கல்வி. அப்ப டிப்பட்ட கல்வியை நாம் எந்த அளவுக்கு வெற்றிகரமாகக் கற்பிக் கிறோம் என்பதை ஆக்கப்பூர்வமாக மதிப்பிடவே தேர்வு. தேர்வு வெறியில் முன்னோடி தேசம் சீனா. கி.பி. 101-லேயே ஹான் பேரரசால் அங்கு நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இப்போதும் கவோ கேவோ (ழுயடி முயடி) தேர்வுதான் கல்லூரிச் சேர்க்கையைத் தீர்மானிக் கிறது. ஆனால், பள்ளி இறுதித் தேர்வு தவிர வேறு பொதுத் தேர்வு அங்கு இல்லை. இடைநிற்றல் எனும் பேச்சுக்கே இடமில்லை. மூன்றாம் வகுப்புவரை ஜப்பானில் தேர்வு என்பதே கிடையாது. நான்கு, ஐந்து, ஆறாம் வகுப்புகளில் வாய்மொழித் (டிசயட) தேர்வு, படமாக வரைதல், இசைத்தல் போன்ற தேர்வுகளே உள்ளன. ஜெர்மனி, இஸ்ரேல், கனடாவில் எட்டாம் வகுப்பு வரை நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே மாணவர்களு டைய கல்வி அறிவு சோதிக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் நம் கல்வி அமைச்சர் சமீபத்தில் விஜயம் செய்த பின்லாந்தில், ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் தேர்வு என்பது திறந்த புத்தகத் தேர்வு முறையே. அங்கு வினாத்தாள் என்பது ஒரு ‘புக்லெட்’. விடைகளை வீட்டிலும் பள்ளியிலுமாக மாணவர்கள் புத்தகத்தில் தேடி எடுத்துப் பார்த்து எழுதி வரலாம். பின்லாந்து உலகக் கல்வி தர வரிசை களில் முதலிடத்தில் உள்ளது.
கட்டுரையாளர்: கல்வியாளர்
பெரியார் முழக்கம் 17102019 இதழ்