உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்
அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொது அமைதி கருதி வரவேற்றாலும், தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் (நவம். 11, 2019) தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த ஏடு எழுப்பியுள்ள கேள்விகளின் சுருக்கமான தமிழ் வடிவம்:
- 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் இராமன், சீதை சிலைகள் போடப்பட்டதையும் மசூதியை இடித்ததையும் சட்ட விரோத நடவடிக்கைகளாக தீர்ப்பு கூறியிருப்பது மதச்சார்பின்மை கொள்கைக்கு உளவியலாக வலுசேர்க்கிறது என்றாலும் உச்சநீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதித்ததோடு இந்துக்களுக்கே அந்த இடம் உரிமையானது என்று தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தாலும் தீர்ப்பு அதை நியாயப்படுத்தியிருக்கிறது.
- நிலத்துக்கான உரிமை கோரி இரண்டு சமூகங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. வழக்கில் இணைத்துக் கொண்ட ஒரு சமூகம், திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கியது. மசூதியை இடித்தது விசுவ இந்து பரிஷத். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது பாரதிய ஜனதா. இந்த வன்முறையை அரங்கேற்றிய பிரிவு 1989ஆம் ஆண்டு ‘குழந்தை இராமன்’ சார்பில் ஒரு மனுதாரராக இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. மனுதாரரில் ஒரு தரப்பு வன்முறையைக் கையில் எடுத்தது என்பதும் பிறகு வழக்கில் இணைத்துக் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- உச்சநீதிமன்றம் இறுதியாக முடிவுக்கு வந்த கருத்துகளோடு தீர்ப்பு உடன்படாமல் முரண்பட்டு நிற்கிறது. அகழாய்வு சான்றுகளை முக்கிய ஆதாரமாகக் காட்டுகிறது உச்சநீதிமன்றம்., மசூதி இடிக்கப்பட்டதால்தான் அப்பகுதியில் அகழாய்வை நடத்த முடிந்திருக்கிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது. மசூதியை இடித்தவர்களுக்கு அதன் வழியாகக் கிடைத்த சான்று ஆதாரத்தை நீதிமன்றம் சாதகமாக்கியிருக்கிறது. மசூதியை இடித்தவர்களுக்குக் கிடைத்த பயன் இது.
- அகழாய்வு அறிக்கை 12ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருக்கும் அடையாளங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் இல்லை. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் மசூதி வருகிறது. இடையில் 4 நூற்றாண்டுகளில் அங்கே என்ன இருந்தது என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை.
- 1857ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை மசூதியில் தொழுகை நடந்தது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தொழுகைக்கு உரிய இடமாக அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அவர்களுக்கு என்ன “சலுகை அல்லது உரிமைகளை” வழங்கியிருக்கிறது?
- மசூதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் ‘இராம ஜென்ம பூமி’ என்று இந்து தரப்பு உரிமை கோரியது. மசூதியின் உட்சுவர் பகுதி, வெளிச் சுவர் பகுதி என்ற இரண்டு பகுதிகளில் வெளிச் சுவர் பகுதி இஸ்லாமியர்கள் உரிமையில் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பின் இரண்டு பகுதிகளையும் இந்துக்களுக்கு உரிமையாக்கியது சரியா?
- நிலம் தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்று இஸ்லாமியர் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் நிலத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே உரிமையுடைய இந்து தரப்புக்கு முழு நிலப் பரப்புக்குமான உரிமை வழங்கப்பட்டிருப்பது சரியா?
- மசூதி கட்டப்படாத 1857க்கு முன்பே அப்பகுதியில் ‘இந்து’ வழிபாடு நடந்திருக்கிறது என்றும், 1857க்குப் பிறகே இஸ்லாமியர் ‘தொழுகை’ நடத்தியிருக்கிறார்கள் என்றும் கூறும் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று உண்மையை மறந்து விட்டது. 1857ஆம் ஆண்டில் மசூதியின் வெளிப்புறத்தில் தொழுகை நடத்தும் உரிமைக்கும் வழிபாடு நடத்தும் உரிமைக்கும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவாகி பெரும் கலவரம் வெடித்தது. அப்போது பிரிட்டிஷ் நிர்வாகம், மசூதி வெளிச்சுவர் பகுதியில் ஒரு தண்ட வாளத்தைப் போட்டு இரண்டாகப் பிரித்து, இந்துக்கள் வழிபாட்டுக்கு தனி இடம் ஒதுக்கியது என்பது வரலாறு. இந்து வழிபாடு மட்டுமே நடந்தது என்று உச்சநீதிமன்றம் கூறுவது வரலாற்று நிகழ்வுக்கு முரணாக இருக்கிறது.
- ஒப்பீட்டு அளவில் இந்துக்களுக்கே சாதகமான வாய்ப்புகள் என்ற முடிவுக்கு உச்சநீதிமன்றம் வரும்போது ‘சாதகமான வாய்ப்புகளுக்கு’ சிவில் சட்டங்களின் நெறிமுறையில் ஒரு சார்புக்கு மட்டுமே உரிமையானது என்ற முடிவுக்கு வர முடியுமா?
- இராமன் கோயில் பிரச்சினையை முன் வைத்து 1992 முதல் நாட்டில் மதக் கலவரங்களையும் வன்முறைகளையும் உருவாக்கி கோயில் கட்டும் இயக்கம் நாட்டில் நடத்தப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் ‘குண்டு வெடிப்பு’ போன்ற எதிர்வினைகளும் நடந்தன. இந்த நிலையில் மசூதியை இடித்து கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் மீதான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். புதிய இந்தியா குறித்து பேசும் பிரதமர் மோடி, இராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் விசுவ இந்து பரிஷத்தினருக்கு இடமளிக்கக் கூடாது.
இந்துக்களின் நம்பிக்கையை மதித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, எதிர்காலத்தில் சட்டத்தைப் புறந்தள்ளி நம்பிக்கையை யாரும் முன்னிறுத்துவதாக இருந்து விடவும் கூடாது.
பெரியார் முழக்கம் 14112019 இதழ்