மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி
மகாராஷ்டிரா பா.ஜ.க.வுக்குள் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் போராட்டம் தொடங்கி விட்டது. முதல்வராக இருந்த பார்ப்பனர் பட்னாவிசை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி உயர்த்தி யுள்ளனர். இது குறித்து ‘தி பிரின்ட்’ ஆங்கில இணைய தள இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை:
“பா.ஜ.க. ஏனைய கட்சிகளைப் போன்றது அல்ல; நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்கிறது. அந்தக் கட்சிககுள் தான் இப்போது ‘வேறுபாடுகள்’ தலைதூக்கியிருக்கின்றன.
105 மகாராஷ்டிரா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களில் குறைந்தது 15 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வராக இருந்த பட்னாவிசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளதோடு, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்துள்ள எம்.வி.டி. கூட்டணியுடன் (மகா விகாஸ் கூட்டணி) பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. மகாராஷ்டிராவின் முன்னாள் பெண் அமைச்சர் பங்கஜ்முண்டே, பா.ஜ.க.விலிருந்து விலகப் போவதாக ஒரு வாரத்துக்கு முன் அறிவித்தார். இவர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பதவி ஏற்றவுடன் கார் விபத்துக்கு பலியான கோபிநாத் முண்டேயின் மகள். பங்கஜா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் செல்வாக்கு மிக்க தலைவர். ‘பீட்’ சட்டமன்ற தொகுதியில் போட்டி யிட்டு தோல்வியுற்றார். பங்கஜாவைப் போலவே 15 பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்குள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக வருத்தத்தில் உள்ளனர். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள பட்னாவிஸ் ஒரு பார்ப்பனர். 2014ஆம் ஆண்டு இவர் முதல்வராக்கப்பட்டதற்குக் காரணமே பா.ஜ.க. மீது அதிருப்தியில் இருந்த பார்ப்பன சமூகத்தை மீண்டும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகக் கொண்டு வருவதுதான் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அது போலவே பட்னாவிஸ் ஆட்சியில் பார்ப்பன சமுதாயம் நன்றாக பயனடைந்தது. ஆனாலும், பா.ஜ.க.வுக்கு கீழ் மட்டத்தில் வலிமை யான ஆதரவு தளமாக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் புறக்கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பட்னாவிஸ்தான் என்கிறார் ஒரு முன்னாள் பா.ஜ.க. அமைச்சர். மகாராஷ்டிராவில் 45 சதவீத ஓட்டு வங்கியாக பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயமான டான்கர் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஷென்ட்கே. பா.ஜ.க.வில் பிற்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப் பட்டு வருவது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது என்று பத்திரிகையாளர்களுக்கு வெளிப் படையாகவே கடந்த வாரம் பேட்டி அளித்துள்ளார். “2014ஆம் ஆண்டு எனக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ தரவில்லை; அதற்கான காரணத்தையும் இதுவரை கூறவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு முக்கிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவரான ஏக்னாத கட்சே கட்சியில் ஓரம் கட்டப்பட்டார்.
இவர், பா.ஜ.க.வில் பிற்படுத்தப்பட்டோர் தலை தூக்காமல் சதி செய்து வரும் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் ஒன்றை தயாரித்து, டெல்லி பா.ஜ.க. தலைமையிடமே நேரில் புகார் கூறியிருக்கிறார். மாநிலத் தலைமை பிற்படுத்தப்பட்டோர் வலிமையை சீர்குலைக்க விரும்புகிறது என்று குற்றம் சாட்டுகிறார். பார்ப்பனர் பட்னாவிஸ் அனுமதி இல்லாமல் பிற்படுத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசவே முடியாத அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளோம் என்கிறார் முன்னாள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜீதோட்சாம்.
“பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்கு வங்கி செல்வாக்குள்ள பா.ஜ.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத தாவ்டே, சந்திரசேகர் பவான்குல் ஆகியோரும் பட்னாவிஸ், அமித்ஷா தலைமைக்கு எதிராகவே இருக்கிறார்கள். மகாராஷ்டிர பா.ஜ.க. பார்ப்பன-பனியாக்களின் கட்சியாகவே செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, பிறகு அந்த சமுதாயத்தைக் கை கழுவி விடுகிறார்கள். மோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றாலும் கட்சி, பார்ப்பன-பனியா பிடிக்குள் தான் இருக்கிறது. எங்கள் குரல் மவுனமாக்கப்பட்டு விட்டது” என்பதே இவர்களின் கருத்தாக இருக்கிறது.
“இவர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் நிலவும் கருத்து வேறுபாடுகள் பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அமைச்சர் பாலாசாகேப் தோரட். – என்று ‘தி பிரின்ட்’ ஏடு எழுதியுள்ளது.
‘இந்து’த்துவா அணிக்குள் ‘பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் முரண்பாடு கூர்மையடையத் தொடங்கியிருப்பதை’ இவை உணர்த்துகின்றன.
பெரியார் முழக்கம் 12122019 இதழ்