ஆர்.எஸ்.எஸ். பாசிசத்துக்கு துணை போகிறார்: மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு
சுமார் 50,000 பேர் கலந்துகொண்ட பேரணி இந்திய பிரதமர் மோடி அவர்களை டெக்ஸஸ் மாகாணத்தில் “Howdy Modi” (நலமா மோடி) என்ற நிகழ்ச்சியில் பாராட்டி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றை பாஸ்டன் நகர மேயர் மார்ட்டின் வால்ஷ் நடத்தினார். பலரும் தம் கருத்துக்களை பகிர்ந்த அந்த அரங்கில் கீழ்க்கண்ட கருத்து ஒரு டெமோக்ரடிக் கட்சி உறுப்பினரால் முழங்கப்பட்டது. காணொளியில் வெளி வந்த அவரது உரையின் சில பகுதிகள்.
“கடந்த மாதம், டெக்சாஸின் எல்-பாஸோ நகரில் ஒரு வெள்ளை நிற வெறி பயங்கரவாதி 22 பேரைக் சுட்டுக் கொன்றான். தன் செயலுக்குக் காரணமாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது, நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்று தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டான். நியூசிலாந்தில் கோர தாண்டவமாடிய மனிதனோ, 2011இல் நார்வே நாட்டில் 77 பேர் கொல்லப்பட்ட செய்திதான் இந்த படுகொலை செய்ய தன்னைத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்தான்.
நார்வேயில் இரத்த ஆற்றை ஓட்டிய பயங்கரவாதி ஆண்டர்ஸ் ப்ரீவிக், உலகெங்கிலும் உள்ள வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் தேசியவாத குழுக்களால் எவ்வாறு ஈர்க்கப்பட்டேன் என்பதை விவரித்து ஒரு அறிக்கையையே வெளியிட்டிருந்தான். பயங்கரவாதி ப்ரீவிக் தன் அறிக்கையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தன் முன்மாதிரியாக சுட்டிக்காட்டியிருந்தான். மேலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் “வலதுசாரி இந்து தேசியவாதம்” மற்றும் இந்தியாவை “இந்து தேசமாக” மாற்றியமைக்க முற்படும் அதன் குறிக்கோளை அவன் அதில் புகழ்ந்து பாராட்டியிருந்தான் .
ஆர்.எஸ்.எஸ் என்பது 1925ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பாசிச துணை இராணுவம் (para military) ஆகும். அதே ஆண்டில்தான் ஹிட்லர் தன்னுடைய “மெய்ன் காம்ப்”ஐ வெளியிட் டிருந்தான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது ஜெர்மானிய நாஜிக்களின் அதே வெறித்தனம் மற்றும் உத்வேகத்துடன் உருவாக்கப்பட்டது. அந்த கருத்தியல்தான் இப் போது நரேந்திர மோடியை பெற்றெடுத்து உருவேற்றியிருக்கிறது.
2002இல் மோடி தலை மையில் ஆர்.எஸ்.எஸ் படையினர் குஜராத் மாநிலத்தில் 2,000 முஸ்லீம்களை படுகொலை செய்தார்கள். அவர்கள் பெண்களை கும்பல் கும்பலாக பாலியல் பலாத் காரம் செய்தனர், சிறுவர் களை தெருவீதிகளில் உயிருடன் எரித்தனர். அந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் பின்நாட்களில் ஊடகங்களில் மோடி அரசுதான் இதை ஊக்குவித்தது, செயல்படுத்த பணித்தது என வாக்குமூலமும் அளித்தனர். இந்த கொடுஞ்செயலுக்காக மோடிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய 10 ஆண்டுகள் தடையும் நம் அரசால் விதிக்கப்பட்டது.
இன்று மோடியின் நாசகார இரும்புக்கர ஆட்சியின் கீழ் பல்வேறு சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுக்கத்தக்க வன்முறைகளும், படுபாதக செயல்களும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ்ஸின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொரு இந்தியரும் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் அஞ்சி வாழ்கின்றனர். இன்று மோடியை வரவேற்க கையை அசைப்பவர்களை, அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களாகவே வரலாறு பதிவு செய்யும். இரத்தக் கறை படிந்த அவரின் கைகளோடு கரம்கோர்த்த இவர்களால் ஒருபோதும் இந்த அழுக்கைக் கழுவ முடியாது.
பிஷப் டெஸ்மண்ட்டிட் ஒருமுறை, “அநீதி அரங்கேறும் சூழல்களில் நீங்கள் நடுநிலை வகித்தால், நீங்கள் ஒடுக்குமுறையாளரின் பக்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என்று கூறினார். எனவே நீங்கள் மோடிக்கு விரிக்கும் சிவப்பு கம்பளம் நியாயமானதுதானா என்பதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்? Houston நகரம் ஹவுடி மோடி (மோடி நலமா) என்று சொல்வதைவிட ஆடியோஸ் மோடி (குட்பை மோடி) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்! (ஹவுடி மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு 25,000 பேர் கூடுமளவுக்கு இடம் ஒதுக்கித் தர கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று மேயர் ஒதுக்கித் தந்தார்.)
பெரியார் முழக்கம் 26092019 இதழ்