எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சி, விழுப்புரம் பயணக் குழுவினர் மற்றும் மேட்டூர் பயணக் குழுவினர் இணைந்து நிகழ்த்திய பறை இசை, மேட்டூர் தோழர்கள் அரங்கேற்றிய உணர்ச்சி மயமான வீதி நாடகங்கள், சென்னை பயணக் குழு வில் இடம் பெற்ற நாத்திகனின் எழுச்சிப் பாடல்கள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு உணர்வூட்டின. எட்டு மணி வரை கலை நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடந்தன.

பயணக் குழுவின் அனுபவப் பகிர்வு

பிறகு பயணக் குழுக்களின் சார்பில் குழுவில் இடம் பெற்ற தோழர்கள் பயணத்தில் மக்கள் வெளிப்படுத்திய ஆதரவு பல்வேறு அமைப்புகள், கட்சியினர் தந்த வரவேற்புகளைப் பகிர்ந்து  கொண் டனர். மகேஷ் (மயிலாடுதுறை), சூலூர் பன்னீர் செல்வம் (திருப்பூர்-கோவை), வேணுகோபால் (கோபி), கோவிந்தராஜ் (மேட்டூர்), இரா. உமாபதி (சென்னை), அய்யனார் (விழுப்புரம்) ஆகியோர் பயண அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து மாநாடு தொடங்கியது. நாமக்கல் மாவட்ட அமைப்பாளரும் மாநாட்டுப் பணிக் குழு வில் முன்னின்று செயல்பட்டவருமான கழக செயற் பாட்டாளர் அ. முத்துப்பாண்டி மாநாட்டுக்குத் தலைமை  தாங்கினார். நாமக்கல் மாவட்டக் கழகத் தலைவரும் மூத்த பெரியாரியல்வாதியுமான குமார பாளையம் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன்,

அ. மீனா (பள்ளிபாளையம் கழக நகரத் தலைவர்),

ச. சஜீனா (நகர கழகச் செயலாளர்) முன்னிலை வகித்தனர். இவர்கள் மாநாட்டுப் பணிகளில் பெரும் பங்காற்றியவர்கள்.

தொடர்ந்து அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினர். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். பள்ளிபாளையம் நகர கழகத் தோழர் தியாகு நன்றி கூறினார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தீர்மானங்களையும் முன்மொழிந்தார்.

எழுச்சி; உற்சாகம்

மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், காமராசர், அம்பேத்கர், காரல்மார்க்ஸ், லெனின், அயோத்திதாசர், பார்ப்பனரல்லாத தலைவர்கள் சுப்பராயன், முத்துலட்சுமிரெட்டி,

சர் பிட்டி தியாகராயர், சர். ஏடி பன்னீர்செல்வம், மூவலூர் இராமாமிர்தம், அன்னை மணியம்மையார், பனகல் அரசர், நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மாவீரர் பிரபாகரன், பெண்புலி அங்கயற்கண்ணி ஆகியோர் படங்களுடன் அவர்களது கருத்துகள் அடங்கிய பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. பயணக் குழு தோழர்கள், ‘இஆர்’ திரையரங்கி லிருந்து உணர்ச்சி முழக்கங்களுடன் மேடை நோக்கி பேரணியாக வந்தனர். கருஞ்சட்டை இளைஞர்களின் அணி வகுப்பை ஏராளமான பொது மக்கள் இருபுறமும் நின்று பார்த்தனர். பெரியார் இயக்கம், இளைய தலைமுறையிடம் வந்து சேர்ந்து விட்டதை உணர்த்து வதாக இருந்தது இந்தப் பேரணி.

மாநாடு நிறைவடைந்தவுடன், பயணக் குழுவினருக்கு மாநாட்டு வரவேற்புக் குழுவினர் சுவையான மாட்டுக் கறி உணவை அவர்கள் இருக்கைக்கே வந்து வழங்கினர். கழகக் குடும்பங்கள் ஒருவரையொருவர் சந்தித்து அன்பையும் நட்பையும் பகிர்ந்து கொண்டனர். குழுக்களாக படம் எடுத்தனர்.

பயணக் குழுவினருக்கு மேடையில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சான்றிதழ்களை வழங்கினர். பயணக் குழுவினர் தனித்தனியாக படம் எடுத்துக் கொண்டனர். மக்களை சந்தித்த மனநிறைவோடு பெரியாரின் பாசறையான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் விடைபெற்று, பயணம் வந்த தனித் தனி வாகனங்களில் ஊர் திரும்பினர். அடுத்து அக்.2ஆம் தேதி புதிய கல்வித் திட்ட நகல் கிழிப்புப் போராட்டத்துக்கு தோழர்கள் தயாராகி வருகிறார்கள்.

– நமது செய்தியாளர்

 

பெரியார் முழக்கம் 26092019 இதழ்

You may also like...