பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!
அரசின் அறநிலையத் துறை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட தில்லை நடராசன் கோயில் பார்ப்பன தீட்சதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சில காலம் இருந்தபோது வசூலான உண்டியல் தொகையில் நூறில் ஒரு சதவீதம்கூட இப்போது கணக்கில் வருவது இல்லை; தீட்சதர்கள் சுருட்டிக் கொண்டு விடுகிறார்கள்.
அரசு அதிகாரி மேற்பார்வையின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். அவர்களுக்காக வாதாடியவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீட்சதப் பார்ப்பனர்கள் சரிகட்டி விட்டார்கள். அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு இந்த வழக்கில் உறுதியாக எதிர் வழக்காடாமல் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது.
தீட்சதர்களுக்கு வாதாடிய சுப்பிரமணிய சாமியும் எதிர்த்து வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும் கைகோர்த்தே நின்றார்கள். ‘தீட்சதர்கள் மானுடப் பிறவிகள் அல்ல; அவர்களின் மூதாதையர் வானுலகில் இருந்து இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ‘பூ தேவர்கள்’ (அதாவது பூமியில் பக்தி சேவையாற்ற இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்). அத்தகைய பூதேவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள நடராசன் கோயிலை அரசு நிர்வாகம் செய்ய உரிமை இல்லை என்பதே தீட்சதர்கள் வாதம். உச்சநீதிமன்றமும்
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது. மீண்டும் ‘தீட்சதர்’ கொள்ளைக்கு
கதவு திறந்துவிடப்பட்டது.
‘ஆகம விதிகளில்’ ஓர் ‘அச்சுப் புள்ளியை’க்கூட மீறக் கூடாது. அது
தெய்வ குற்றமாகிவிடும் என்று தீட்சதர்கள் கூறி வருகிறார்கள். ஆறுமுகனார் என்ற சைவ முதியவர் தில்லை நடராசர் கோயிலுக்குள் ‘தேவாரம்’ தமிழிசையைப் பாடினார் என்பதற்காக ஆண்டவன் காதில் தமிழ் ஓசை கேட்பது பாவம் என்ற கூறி அவரை அடித்து உதைத்து வெளியே தள்ளியது தீட்சதர்கள் கூட்டம். ஆறுமுகனார் தமிழிசையைப் பாடுவதற்கு வாழ்நாள் முழுதும் போராடினார். பகவான் காதுகளில் தமிழ்ப் பாட்டு கேட்க முடியாத ஒரு ‘ஒதுக்குப்புற’ இடத்தில் சில நிமிடங்கள் தமிழ் பாடலைப் பாடிவிட்டுப் போ என்று சென்னை நீதிமன்றத்
தீர்ப்புக் காரணமாக ‘கருணை’ காட்டினார்கள் தீட்சதர்கள்.
அப்படி தீட்சதர்களால் திண்டுக்கல் பூட்டு போட்டு கட்டிக்காத்த ஆகமவிதி ‘அவாள்’ சுரண்டல் என்று வரும்போது காற்றில் பறந்து விடுகிறது.
இந்தக் கோயிலில் ‘ஆயிரங்கால் மண்டபம்’ என்று ஓர் இடம். இது தீட்டுப்படக் கூடாத புனித இடம் என்று தீட்சதர்கள் கூறி வருகிறார்கள். நடராசனை நகைகளால் மலர்களால் அலங்கரித்து வேதமந்திரம் ஓதி, இந்த ஆயிரங்கால் மண்டபத்துக்குக் கொண்டு வருவார்கள். ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் இந்த விழா நடக்கும். இதில் வேறு எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் ‘புனிதம்’ கெட்டுப் போய்விடும் என்று கூறி வந்தார்கள். சேக்கிழார், பெரிய புராணத்தை இங்கே அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் கம்பரின் இராமாயணத்தை அரங்கேற்ற அனுமதிக்கவில்லை. காரணம் இராமாயணம், வைணவர்களின் நூல்.
எந்த நூலை எங்கே அரங்கேற்றலாம் என்பதை ‘நூல்’ தானே தீர்மானிக்கும்?
இப்போது அதே ஆயிரங்கால் மண்டபத்தில் ‘சூத்திர’ தொழிலதிபர் இல்லத் திருமணம் மின் விளக்கு அலங்காரம், தட புடலான விருந்துகளோடு தீட்சதர்கள் சம்மதத்தோடு நடந்திருக்கிறது. ஏதோ ஒரு ‘தீட்சதர்’ தொழிலதிபர்களால் நன்றாகக் ‘கவனிக்கப்பட்ட’க் காரணத்தால் அவர் அனுமதி அளித்து விட்டார் போலும். தீட்சதர்கள் சங்கம் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஒதுங்கிக் கொண்டது.
பட்டு தீட்சதர் என்பவர் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாராம். தில்லை நடராசன் கோயிலில் காலங்காலமாக இவர்கள் ‘கடவுளைக் காட்டி’ மக்களை மிரட்டி வந்த ஆகம – சாஸ்திர விதிகளை ஒரே ஒரு ஒற்றைப் பார்ப்பனரால் மாற்றிவிட முடியும். அவ்வளவு அதிகாரம் அவாளுக்கு இருக்கிறது!
பக்தர்கள் சாஸ்திரம் மீறப்பட்டு விட்டதே என்று அதிருப்திக்கு உள்ளாகி யிருப்பதாக பத்திரிகைகள்
செய்தி வெளியிடுகின்றன.
நம்மைப் பொறுத்த வரை பட்டு தீட்சதருக்கு மாலை போட்டு வாழ்த்து கூறவே விரும்புகிறோம். ஆயிரங்கால் மண்டபத்துக்குள் ஒரு ‘சூத்திரர்’ வீட்டுத் திருமணத்தை நடத்த அனுமதித்துள்ளாரே, அதற்காகத்தான்!
ஆகம விதிகள் என்பதெல்லாம் சுத்தப் புரட்டு. அதற்கும் ஆண்டவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதோ ‘சூத்திரர்’ வீட்டுத் திருமணம் நடந்திருக்கிறதே! நடராஜன் ருத்ர தாண்டவமாடி திருமணத்தை நிறுத்தி விட்டானா? இல்லையே!” என்பதை செயல்முறையோடு உணர்த்தியிருக்கிறார், பட்டு தீட்சதர்.
‘பட்டு தீட்சதரே! உங்களின் ஆகம எதிர்ப்புத் திருப்பணிகள் தொடர வாழ்த்துகிறோம். அதேபோல் அனைத்து ஆகவிதிகளையும் மீறிக் காட்டுங்கள்; புரட்சி ‘பூதேவர்’ என்றுகூட விருது வழங்கத் தயார்! ‘பூதேவர்கள்’ எதைச் செய்தாலும், சரியாகத்தானே இருக்கும்?
நம்முடைய இந்து முன்னணிகள் ‘கூஜா’ பார்ப்பனர்கள்கூட ‘தெய்வ நிந்தனை’, ‘மதக் குற்றம்’ என்று எதுவும் பேசாமல் பசை போட்டு வாயை ஒட்டிக் கொண்டிருக்கிறார்களே, கவனித்தீர்களா?
ஆமாம், தீட்சதர்களின் ‘ஆகம-சாஸ்திர’ நிந்தனைகூட தெய்வாம்சம்தான் இருக்கும் இதையும் நாம் நம்ப வேண்டும்; நம்ப மறுத்தால் ‘இந்து விரோதி’.
காரணம் அவாள், பூதேவர்கள்!
-கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 19092019 இதழ்