தமிழில் பெயர் சூட்டும் இயக்கம்; ‘வினாயகன் சிலை’களுக்கு மாற்றாக ‘வள்ளுவர் சிலை’ பேரணி பார்ப்பனியத்துக்கு எதிராக ‘வள்ளுவர் நெறி’யை மக்கள் பண்பாடாக மாற்றுவோம் திருக்குறள் மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் உரை

திருக்குறள் மாநாட்டில் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

1949ஆம் ஆண்டு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடு பற்றி பலரும் பேசினார்கள். அம் மாநாட்டின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1949 ஜன. 15, 16ஆம் தேதிகளில் சென்னை பிராட்வேயில் ஒரு மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு ‘வள்ளுவர் குறள் – தமிழர் நெறி விளக்க மாநாடு’ என்ற தலைப்பில் அந்த மாநாட்டை பெரியார் கூட்டினார். சி.டி.டி. அரசு  அறிமுக உரையாற்ற, சோமசுந்தர பாரதியார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

முதல் நாள் மாநாட்டில் தமிழறிஞர்கள் திரு.வி.க., திருக்குறள் முனுசாமி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் இராசமாணிக்கனார், இலக்குவனார் ஆகியோர் உரையாற்றினர். இரண்டாம் நாள் 16.1.1949 அன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது.  இராவ் பகதூர் சக்கரவர்த்தி நயினார் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். பேரறிஞர் அண்ணா தலைவரை முன்மொழிந்தும், நாவலர் நெடுஞ்செழியன் வழிமொழிந்தும் உரையாற்றினர்.

சி. இலக்குவனார், கா. அப்பாத்துரை, புலவர் குழந்தை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பேசினர். இரவு 10 மணிக்கு அண்ணா எழுதிய சந்திரமோகன் நாடகம் நடந்தது. மாமன்னன் சிவாஜி, பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்ட வரலாற்றைச் சித்தரிக்கும் அந்த நாடகத்தில் அண்ணாவே காகப்பட்டர் வேடம் ஏந்தி நடித்தார். நாடகத்தைக் காண இரவு 7 மணி முதலே மாநாட்டுப் பந்தலில் கூட்டம் அலை மோதியது. நள்ளிரவு 2 மணிக்கு நாடகம் முடிந்தது. டி.கே. சண்முகம் நன்றி கூறினார் என்று ‘குடிஅரசு’ ஏடு பதிவு செய்திருக்கிறது.

நாம் நடத்தும் இந்த திருக்குறள் மாநாட்டை

எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதே நேரத்தில தமிழ் அமைப்பு நடத்தும் சிலரும் கண்டிக்கிறார்கள். 1949இல் அண்ணா தி.க.விலிருந்து பிரிந்து செல்லாமல் தடுக்க, அவரை திருப்திப்படுத்தவே இந்த மாநாட்டை பெரியார் நடத்தியதாக ஒரு  அமைப்பு அவதூறு பேசுகிறது. இந்த மாநாடு நடப்பதற்கு 20 ஆண்டு களுக்கு முன்பே 1929ஆம் ஆண்டில் எட்டு அணாக்கள் (அக்கால நாணயம்) விலையில் பெரியார் திருக்குறளை நூலாக வெளியிட்டு பரப்பினார் என்ற வரலாற்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1949 மாநாட்டுக்குப் பிறகும் பெரியார் குறள் மாநாடுகளை நடத்தினார். பொதுக் கூட்டங்கள் நடத்தினார். பண்டிதர்கள், புலவர்களிடம் மட்டுமே பேசப்பட்ட திருக்குறளை பாமர மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் பெரியார். பெரியார் பொதுக் கூட்ட பேச்சுகளைத் தொகுத்து, “பெரியார் களஞ்சியம்-குறள் வள்ளுவர்” எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 1953இல் 170 பக்கத்தில் சட்டைப் பைகளில் வைக்கும் அளவில் பெரியார் திருக்குறள் நூலை வெளியிட்டார். விலை 6 அணா என்று நிர்ணயிக்கப்பட்டது. வெளியிடப்பட்ட 10 நாள்களில் வரவு செலவு பார்த்ததில் 5 அணாவுக்கே தரலாம் என்று முடிவு செய்து, 5 அணாவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ‘விடுதலை’யில் பெரியார் அறிவித்தார்.

பெரியாரை உள்நோக்கத்தோடு எதையாவது கூறி  கொச்சைப்படுத்தவே சிலர் துடிக்கிறார்கள். திராவிடத்தின் முகமூடிகள் மாநாட்டை நடத்துவதாகக் கூறுகிறார்கள். திருக்குறள் மாநாடு நடத்தப்படுகிறதே; நல்ல செயல் தானே; யார் செய்தால் என்ன என்ற கொள்கைப் பார்வையைவிட வெறுப்பும் காழ்ப்புணர்வுமே தலைதூக்கி நிற்கிறது. பார்ப்பனர் எச். ராஜா, திருக்குறள் ‘இந்து’ நூல் என்கிறார்! திருவள்ளுவர் காலத்தில் இந்துமதம் என்ற ஒன்றே இல்லை. பிறகு எப்படி அது ‘இந்து’ நூலாக முடியும்? பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர், அல்லாத மக்களுக்கு சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பிரிட்டிஷார் சூட்டிய பெயர்தான் ‘இந்து’. இதை இறந்துபோன காஞ்சி பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே ஒப்புக் கொண் டிருக்கிறார். திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை. இது எப்படி தமிழ் மறையாகும் என்கிறார் ராஜா. சங்க இலக்கியங்களிலும் திருக்குறளிலும் ‘தமிழ்’ என்ற சொல் இல்லை. அதற்கு ஆய்வாளர்கள் மிகச் சிறந்த விளக்கத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

அக்காலகட்டத்தில் எழுத்து, இலக்கணக் கட்டமைப்பு கொண்ட ஒரே  மொழி தமிழ் தான். எனவே அதை அடையாளப்படுத்த வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. வீட்டில் ஒரே குழந்தை மட்டும் இருந்தால் அதற்குப் பெயர் சூட்ட வேண்டிய அவசியமே இல்லையே! என்பதுதான் ஆய்வாளர்களின் விளக்கம்.

பெரியார் திருக்குறள் மாநாட்டை நடத்திய காலத்தில் திருக்குறளைப் போற்றிய தமிழறிஞர்கள் பலரும் திருக்குறளின் பெருமையை தமிழ்மொழியின் பெருமை என்ற பார்வையில் மட்டுமே பார்த்தார்கள். திருக்குறளையும் பேசிக் கொண்டு வைதீகத்திலும் நம்பிக்கைக் கொண்டிருந்ததோடு, பக்தி இலக்கியங் களையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திருக்குறள் ஆரிய பண்பாட்டு எதிர்ப்புக்கான தமிழருக்கான அறம் என்ற பார்வை மேலோங்கி நிற்கவில்லை. இன்று இந்த மாநாட்டில் காலையி லிருந்து பேசப்பட்ட கருத்துகளை நாம் கேட்டோம். அவை அனைத்துமே திருக்குறளை ஆரியப் பண்பாட்டை வீழ்த்துவதற்கான தமிழர்களின் அற நூலாகவே அனைவரும் பேசினார்கள். இதுவே இந்த மாநாட்டின் நோக்கத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

‘பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு’ இந்த மாநாட்டுக்கு ஆரியத்தை எதிர்க்க தமிழியக்கத்தைக் காக்க வாரீர் என்று தான் அழைப்பு விடுத்திருக்கிறது. ‘தமிழியம்’ என்ற சொல்லின் உள்ளடக்கம், பெரியார் காலத்துத் தமிழியத்திலிருந்து இன்று புதிய வடிவில் உருத்திரட்சிப் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று ‘தமிழியத்தின்’ உள்ளடக்கம் – தமிழ் மொழிப் பெருமைகளைக் கொண்டது மட்டுமல்ல. அது பண்பாட்டுத்தளம் நோக்கி விரிவடைந்திருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப தனது உள்ளடக்கத்தை மேலும் தகவமைத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது ‘தமிழியம்’ என்றால் ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பு; ஜாதி எதிர்ப்பு; வடமொழி எதிர்ப்பு; வடநாட்டார் எதிர்ப்பு; சமூக நீதி, பெண் விடுதலை என்ற கோட்பாடுகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றின் தேவை! ‘திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற சொற்களுக்குள் வீண் விவாதங்களை நடத்துவதைவிட அதன் உள்ளடக்கத்தையும் கருப்பொருளையும்தான் நாம் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும்.

இப்போது இந்த மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம்? திராவிடர் விடுதலைக் கழகம் – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் இந்த அரங்கில் சில செயல்பாடுகளை பரிசீலனைக்கு முன் வைக்கலாம் என்று கருதுகிறேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, பண்பாட்டு நிகழ்வுகளை விழாக்களை நாம் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வீதிக்கு வீதி வினாயகன் சிலைகளை வைத்து வடநாட்டுப் பண்பாட்டுத் திருவிழாவாக மதவெறியைக் கட்டமைக்கிறார்கள். அதற்கு மாற்றாக நாம் வள்ளுவர் சிலைகளை வைத்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற பெயரில் கலை விழாவையும் வள்ளுவர் சிலை  பேரணிகளையும் நடத்தலாம். (பலத்த கைதட்டல்)

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ‘தமிழ்ப் பெயர் சூட்டும்’ இயக்கம் ஒன்றை நாம் தொடங்கி அதை தமிழர் குடும்ப விழாக்களோடு இணைப்பபது குறித்து பரிசீலிக்கலாம்.

தமிழரின் அறம் – நெறி என்பது ஜாதி பார்ப்பனியத்துக்கு நேர் முரணானது என்பதை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கான திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார் விடுதலை இராசேந்திரன்.

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...