காந்தி 150 ‘தீண்டாமை ஒழிய வர்ணாஸ்ரமம் அழிந்தால் கண்ணீர் சிந்த மாட்டேன்’
‘முன் ஜென்ம பலன்’ என்பதற்கு வைதிக மதம் தரும் விளக்கங்களை காந்தி புறந்தள்ளி இவ்வாறு எழுதுகிறார்: “ ‘கர்மா’ என்ற முன்ஜென்ம விதி தத்துவம் மனிதர்களை மதிக்கவில்லை என்றால், அந்த தத்துவத்தை மத பழமைவாதிகளிடமே விட்டு விடுங்கள்; தனது ‘தலைவிதி’யை நிர்ணயிப்பது மனிதன் மட்டும்தான். எனவே உங்கள் ‘தலைவிதி’யை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களாக மாறுங்கள் (Man is the makers of his own destiny, and I therefore ask you to become makers of your own destiny).”
அவரது நடைமுறை வாழ்விலேயே ‘முன்ஜென்மப் பயன்’ என்ற கருத்தை நிராகரித்தார் என்பதற்கு சான்றுகள் உண்டு. நோயால் அவதிப்பட்ட ஒரு பசுவை கொன்றுவிடச் சொன்னார். முன் ஜென்ம விதிப்படியே பசு இந்த நோயை அனுபவிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார். 1928ஆம் ஆண்டில் தனது ‘ஆஸ்ரமத்தில்’ தீர்க்க முடியாத ஒரு நோயினால் அவதிப்பட்ட பசுவின் கன்றுகுட்டியை கொன்றுவிட காந்தி கூறினார். ஆஸ்ரமத்தில் சிலர் கடுமையாக எதிர்த்தனர். தனது முடிவை நியாயப்படுத்திய காந்தி, ‘மனிதருக்கு இத்தகைய நிலை வந்தாலும் இதே முடிவைத்தான் எடுப்பேன்’ என்றார்.
‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை தொடக்கக் காலங்களில் நியாயப்படுத்தி வந்த காந்தி, பிற்காலத்தில் இவ்வாறு எழுதினார்:
“தீண்டாமை ஒழியும்போது ‘வர்ணா ஸ்ரமம்’ குப்பைக் கூடைக்கு அனுப்பப்படும் என்றால், அதற்காக நான் கண்ணீர் சிந்த மாட்டேன் (If Varnashrama goes to the dogs, in the removal of untouchability, I shall not shed a tear).”
மேலும் காந்தி இவ்வாறு கூறினார்: “வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து எங்கேயும் போய் நான் பிரச்சாரம் செய்யவில்லை; ஆனால் தீண்டாமையை ஒழிக்க வைக்கம் சென்றேன். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு இந்த மூன்றும் சுயராஜ்யத்தின் மூன்று தூண்கள் என்று, காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து, இதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வைத்தது நான் தான். ஆனால் வர்ணாஸ்ரம சமூக அமைப்பை உறுதி செய்ய வேண்டும்; அதுவே சுயராஜ்யத்தின் நான்காவது தூண் என்று ஒரு போதும் நான் கூறியது இல்லை. (I have never placed establishment of varnashrama dharma as the fourth pillar) எனவே ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்புக்கு நான் தவறாக அழுத்தம் தந்து வந்தேன் என்று நீங்கள் என்னை குற்றம் சாட்ட முடியாது” என்று காந்தி கூறினார்.
பெரியார் முழக்கம் 10102019 இதழ்