ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!
‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது.
நீட் தகுதியை உயர்த்துகிறதா?
மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது.
இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண் குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது.
வேதியல், இயற்பியலில் பூஜ்யம் அல்லது 10க்கும் கீழே ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற 85 சதவீதம் பேர் பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளார்கள். மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களைச் சேர்க்கும் பஞ்சாப் மருத்துவக் கல்லூரிகள் நாட்டிலேயே மிக அதிகக் கட்டணம் வாங்கும் கல்லூரிகளாகும். சுதேஷ் என்ற மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணமாக ரூ.68 இலட்சம் வாங்குகிறது. அரசு நிர்ணயிக்கும் கட்டண சீரமைப்புக்குக் கீழே வராமல் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் பஞ்சாபில் தங்களுக்குள் ஒரு குழுவாக இணைந்து (ழுசடிரயீ டிறநேன ருniஎநசளவைல) செயல்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டா லும் இதே அடிப்படையில் மிகக் குறைந்த மதிப் பெண்களைப் பெற்ற மாணவர்கள் பல மாநிலங்களில்
பெரும் தொகையைக் கட்டணமாக செலுத்தி சேர்த்துள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு தகுதிக்கான தேர்வு என்று நடுவண் ஆட்சி வாதிடுவது பொய்த்துப் போய் விட்டது என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நடப்பாண்டில் சுமார் 65,000 மருத்துவப் படிப்புஇடங்கள் உள்ளன. இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில்
7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் 1 இலட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.
ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை. அதே நேரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான தர வரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது.
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்குக் காரணம். நீட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் விலகிக் கொள்ள, கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் பலர் 15 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர்.
மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாகிவிட்டது.
பெரியார் முழக்கம் 20062019 இதழ்