சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து…

இன்று காந்தி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள். எனவே காந்தியாருக்கும் வேத மரபான பார்ப்பனியத்திற்கும் இடையிலான ‘உறவுகள்’ குறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, பிறகு, எனது தலைப்புக்கு வருகிறேன்.

தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்களின் செய்திகளைத் தொகுத்து தமிழ்நாடு காதி வாரியம், ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை வெளியிட்டிருக் கிறது. தொகுத்தவர் பெயர் இராமசாமி. அதில் உள்ள தகவல்கள் இவை:

16.10.1927 அன்று பாலக்காட்டில் காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரசாமி காந்தியாரை சந்தித்தார். சந்தித்த இடம் மாட்டுக் கொட்டகை. காரணம், காந்தி பிறப்பால் ‘பிராமணன்’ அல்ல என்பதுதான். அப்போது தீண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ‘ஆலயப் பிரவேசப்’ போராட்டங்களை காந்தி நடத்திய காலம். அதுகுறித்து காந்தியிடம் பேசிய மூத்த சங்கராச்சாரி, ‘தீண்டப்படாத’வர்கள் என்று இழிவுக்குள்ளான சமூகத்தைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது கூடாது’ என்று கூறினார்.

“அரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய பழக்க வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகும் என்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது என்று ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.” (நூல்: பக்.575, 576)

இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற கூப்பாடு இப்போதும் கேட்கிறது. தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதே ‘பெரும்பாலோர் மனம் நோகச்’ செய்யும் செயல் என்று கூறியவர்கள் தான் இந்தப் பார்ப்பனர்கள். ‘தீண்டாமை சட்டப்படிக் குற்றம்’ என்ற சட்டப் பிரிவே சங்கராச்சாரிகள் பார்வையில் ‘இந்துக்களை’ இம்சைக்குள்ளாக்கும் மனம் நோகச் செய்யும் சட்டம்தான்.

மற்றொரு சம்பவம் – காந்தியாரே மனம் திறந்து கூறிய ஒரு நிகழ்வு. அதே நூலில் இதுவும் இடம் பெற்றிருக்கிறது. அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள்தான். மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப்பனர் வீட்டில்தான் காந்தி வந்தால் தங்குவது வழக்கம். பார்ப்பனர் குறித்து காந்தி கூறுகையில், “தமிழ்நாட்டில் பிராமணர்கள் இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்கு நான் வரும்போது அவர் வீட்டுத் திண்ணையில் தான் தங்கினேன். இப்போது அவர் வீட்டுக்குள் சமையலறை வரை நான் செல்லுகிறேன்” என்று காந்தி கூறியதாக அந்நூலில் பதிவாகியுள்ளது. அது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்ற சூறாவளி வீசிய காலகட்டம். சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையிலே மட்டும் அனுமதிக்கப்பட்ட காந்தியை அவர் வீட்டு சமையலறை வரை அனுமதிக்கும் வாய்ப்பை காந்திக்கே உருவாக்கித் தந்தது பெரியார் இயக்கம்.

காந்தியின் மற்றொரு ‘வேதமரபு’ தொடர்பான நிகழ்வைப் பதிவு செய்ய விரும்புகிறேன். “ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் என்ற விவசாயி, ‘சுதந்திரம்’ பெற்றபோது தமிழ்நாட்டில் முதலமைச்சசராக இருந்தார். ‘பகவான் ரமணரிஷி’ பக்தராகவும் இராமலிங்க அடிகளாரின் சீடராகவும் இருந்தார். முன்னேறிய சமூகத்தில் பிறந்தாலும் பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிராக சமூக நீதியோடு செயல்பட்ட நேர்மையான முதல்வர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாதாரை நீதிபதியாகப் பரிந்துரைத்தார். பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். முதன்முதலாகப் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்தியவர். அதற்கு முன்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இருந்தது. பதைபதைத்துப் போன பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக்கு காந்தி வந்தபோது, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கு எதிராக ஒரு புகார் மனுவை காந்தியிடம் அளித்தனர். ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்றும், அவர் பதவிக்கு வந்த பிறகு, ‘பிராமணர்’ களுக்கு பணியிடங்களில், கல்லூரிகளில் இடம் கிடைப்பது இல்லை என்றும் மனுவில் புலம்பினார்கள். மனுவைப் படித்த காந்தி, பார்ப்பனர்களைப் பார்த்து திருப்பிக் கேட்டார். “பிராமணருக்குரிய தர்மம் வேதங்களைப் படிப்பதும், ஓதுவதும் தானே; ‘என்ஜினியரிங்’ படிப்பது ‘பிராமண தர்மத்துக்கு’ எதிரானது அல்லவா? என்று காந்தி திருப்பிக் கேட்டார். அதிர்ச்சியடைந்த பார்ப்பனர்கள், இனி காந்தி தங்களுக்குப் பயன்பட மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த ஆண்டிலேயே காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்போது நமது தலைப்புக்கு வருவோம். தமிழையோ பார்ப்பனரல்லாத தமிழர்களையோ ‘வேதமதம்’ சமத்துவமாக எப்போதும் அங்கீகரித்ததே இல்லை. இப்போது ‘இந்து’ என்று இவர்கள் பேசுகிற மதம், ‘வேத மதம்’, ‘பார்ப்பனிய மதம்’ தான். ‘இந்து’ என்ற சொல், எந்த இதிகாசம், புராணம்,  வேதத்திலும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெயர். இதை காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே ஒப்புக் கொள்கிறார். அவாள் பார்வையில் ‘சமஸ்கிருதம்’ தான் தமிழுக்கே தாய் மொழி. இங்கே தமிழ்நாட்டில் இந்து மதக் காவலர்களாகப் புறப்பட்டிருக்கும் விவரம் புரியாத அப்பாவி ‘சூத்திரர்கள்’ தமிழ்நாடு -பெரியார் பூமியல்ல; ‘ஆழ்வார், நாயன்மார்கள் பூமி’ என்று பேசுகிறார்கள். தொலைக்காட்சியில்  பேசும் சில பார்ப்பனர்களும் இப்படிப் பேசுவது வழக்கமாகியிருக்கிறது. ஏதோ ஆழ்வார், நாயன்மார் தமிழில் பாடிய பக்திப் பாடல்களை எல்லாம் பெருமைப்படுத்துவதுபோல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இது ஆழ்வார், நாயன்மார் பூமி என்றால்,தமிழ்நாட்டுக் கோயில்களிலே ஏன் சமஸ்கிருத வழிபாடு நடக்க வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர் வீட்டு ‘முகூர்த்தங்களில்’ ‘திதி’களில் ‘கிரகப் பிரவேசங்களில்’ ஏன் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்திலே மட்டும் மந்திரங்களை புரியாத மொழியில் ஓதவதுதான் ‘இந்து’க்களின் கடமை என்று வற்புறுத்த வேண்டும்? ஆழ்வார் நாயன்மார்கள் பாடிய தமிழ்ப் பாட்டுகள் ‘தீட்டாகி’ விட்டது ஏன்? தில்லை நடராசன் கோயில் தீட்சதர்கள், தேவாரம் பாடிய ஓதுவாரை விரட்டி அடித்தது ஏன்?

காஞ்சி பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி இதற்கு தெளிவாகவே பதில் கூறிவிட்டார்:

“இந்து மதத்தினுடைய சமஸ்காரங்கள் என்று சொல்லக்கூடிய தத்துவார்த்தங்களை சடங்குகளை எல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அது சமஸ்கிருதத்திலேதான் முடியுமே தவிர வேறு ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் போன்ற எந்த மொழிகளாலும் புரிந்து கொள்ள முடியாது.”

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமியிலே அவர்கள் எழுதிய தமிழில் இந்து மதத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் சங்கராச்சாரி. பார்ப்பனர்கள் இன்று வரை சமஸ்கிருதத்தையே உயர்த்திப் பிடித்துக் கொண்டு ‘இது ஆழ்வார் பூமி, நாயன்மார் பூமி’ என்று பிதற்றுவது, காதில் பூ சுற்றுவது அல்லவா?

வள்ளலார், காஞ்சி மூத்த சங்கராச்சாரியை சந்தித்தபோது, ‘சமஸ்கிருதமே அனைத்து மொழி களுக்கும் தாய்’ என்று கூறியவுடன், வள்ளலார் உடனே, ‘அப்படியானால் எங்கள் தமிழ் தான் தந்தை’ என்று அவரிடமே நேரடியாக பதிலளித்தார். வள்ளலார் வரலாற்றை எழுதிய ஊரன்அடிகளார் இதைப் பதிவு செய்கிறார்.

சைவத்தில் மிகுந்த பிடிப்புள்ளவரும், தமிழ் ஆட்சி மொழி அகராதியை உருவாக்கியவருமான ஆட்சி மொழிக் காவலர் கி. இராமலிங்கனார், தன்னுடைய சரிதையான ‘என் வரலாறு’ நூலில் சங்கராச்சாரியுடன் ஏற்பட்ட  அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். உணவு வழங்கும் துறை அதிகாரியாக அவர் இருந்தபோது, காஞ்சி சங்கரமட அழைப்பை ஏற்று மடத்துக்கு உணவுப் பொருள் வழங்குதல் குறித்து சந்திக்கச் சென்றார். தமிழில் பேசிய இராமலிங்கனார் கருத்தைப் புரிந்துக் கொண்டு, சமஸ்கிருதத்திலே சங்கராச்சாரி உரையாட அவரது செயலாளர் தமிழில் மொழி  பெயர்த்தார். கி. இராமலிங்கனார், ‘சங்கராச்சாரி தமிழ் பேச மாட்டாரா’ என்று கேட்டபோது, ‘உச்சிவேளை பூசை நேரத்தில் ஸ்வாமிகள், ‘நீசபாஷை’யில் பேச மாட்டார்’ என்ற பதிலை உதவியாளர் கூறினாராம்.

தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைப் பெற்றவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். தனது உறவினர் வீட்டுத் திருமணத்தில் ஒரு புரோகிதர், திருமண மந்திரங்களுக்குப் பதிலாக, ‘கருமாதி மந்திரம்’ ஓதியதைக் கண்டுபிடித்து, அந்த புரோகிதனை மந்திரத்தை நிறுத்தச் சொல்லி, கேள்விக் கேட்டவுடன் புரோகிதன், ‘திருதிரு’வென்று விழித்திருக்கிறான்.

ஆனால், ‘பார்ப்பனர்கள் மட்டுமே வேதங்களை ஓத வேண்டும்’ என்கிறார் சீனியர் சங்கராச்சாரி. வேதத்துக்குரிய அதிகாரம் படைத்தவர்கள் ‘பிராமணர்களே’ என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இந்த அதிகாரம்  ‘அவாள்களே’ எடுத்துக் கொண்ட அதிகாரம். இன்னும் கொடுமை என்னவென்றால், தனது பார்ப்பனிய வெறியை நியாயப்படுத்த,  தமிழைத் துணைக்கு அழைப்பது தான். சங்கராச்சாரியின் கருத்துகளைத் தொகுத்து, வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தெய்வத்தின் குரல்’ தொகுதி இரண்டிலிருந்து ஒரு பகுதியைக் கூறுகிறேன்:

“தமிழில் மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை” என்கிறார். அதாவது தமிழில் மறை என்ற ஒன்றே இல்லை என்கிறார். தமிழர் மறையான திருக்குறளையும் அவாள்கள் ஏற்க தயாராக இல்லை. மேலும் கூறுகிறார்:

“வேதங்களில் ஆங்காங்கே மறைமுகமாக இரட்சிக்க வேண்டிய பகுதிகளுக்கு ‘இரகசியம்’ என்று  வேதத்திலே பெயர் கொடுத்திருக்கிறது. உபநிஷத்துகளில் இப்படி இரகசியமான பகுதிகளை தனியாக உபநிஷதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் இன்னும் ஒரு படி மேலே போய் வேதம் முழுதும் ‘மறை’ என்ற சொல்லிவிட்டது. “மறை என்றால் மறைத்துக் காப்பாற்ற வேண்டியது என அர்த்தம்” என்கிறார் சங்கராச்சாரி.

வேதத்தை ‘மறை’ என்று தமிழறிஞர்கள் குறிப்பிட்டது, ‘நெறி’ என்ற பொருளில்தானே தவிர, அதை இரகசியமாக மறைத்து வைக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல. ஆனால் தமிழே, வேதத்தை முழுமையாக மறைக்க வேண்டும் என்று கூறிவிட்டது. வேதம்கூட அப்படி கூறவில்லை; தமிழே கூறுகிறது என்று திரிபுவாதம் செய்கிறார். தமிழை ‘நீச பாஷை’ என்று கூறுகிற இவர்கள், தங்கள் வேதத்தைக் காப்பாற்றுவதற்காக தமிழை கேடயமாக்குகிறார்கள். இதுதான் பார்ப்பனியமான வேத மரபின் நேர்மையற்ற பித்தலாட்டம்.

இப்போது ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது. அது சங்கரமட மரபு அல்ல என்கிறது சங்கரமடம். விஜயேந்திரன், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது ‘தியானத்தில்’ இருந்தாராம். ஆனால், ‘தேசிய கீதம்’ பாடும்போது, தியானம் போய் நிதானம் வந்து விடுகிறது. தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது சட்டப்படி தேசிய அவமதிப்புக் குற்றம். தமிழ்த் தாய் வாழ்த்துக்கு அப்படி சட்டம் ஏதும் இல்லை. அது ஒரு சம்பிரதாயம்; மரியாதைக்குரிய மரபு. பெரியார் பொது நிகழ்வில் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், ‘தேசிய கீதம்’ பாடினாலும் அவற்றில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். அது அவைக்குக் காட்டும் மரியாதை என்றார் பெரியார். அந்தப் பண்பை இந்தப் பார்ப்பனர்களிடம் வேத மரபாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? சொல்லப்போனால் தியானத்தை திறந்தவெளியில் செய்யக் கூடாது என்கிறார்கள். இவர் தியானத்தையும் அவமதித்திருக்கிறார்.

தமிழை, சங்கராச்சாரி எப்படி இழிவாகக் கருதினார் என்பதற்கு மற்றொரு சான்று. மிகப் பெரும் வேதபண்டிதரான அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரி, ‘நக்கீரன்’ பத்திரிகையிலே ஒரு தொடர் எழுதினார். “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற தலைப்பில் அது நூலாக வெளி வந்திருக்கிறது. இந்தத் தொடர் வேத புரோகிதத்தின் உண்மை முகங்களை கிழித்து தொங்கவிட்டிருக்கிறது. தொடர் வெளிவந்தபோது ‘துக்ளக்’ ஆசிரியரான சோ, தொடரை நிறுத்துமாறு விடுத்தவேண்டுகோளை தாத்தாச்சாரி ஏற்க மறுத்து தொடரை எழுதினார். “தனது கருத்தை தாத்தாச்சாரி அழுத்தமாகப் பதிவு செய்ததற்காக வர்ணாஸ்ரம மனுதர்மங்களை இன்னமும் கைவிட முடியாத சில ‘பெரிய’ மனிதர்கள் தாத்தாச்சாரியின் வீடு தேடிப் போய் அவரை மிரட்டினார்கள்” என்று அந்த நூலின் பதிப்புரையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழை வேதமதம் எப்படி அவமதிக்கிறது என்பதற்கு காஞ்சி மடத்தில் நிர்வாகியாக முக்கியப் பொறுப்பில் தாத்தாச்சாரி இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தையே இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“கும்பகோணம் மடம் (காஞ்சி மடத்துக்கு அதுதான் உண்மைப் பெயர்) சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய்  மேய்ந்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலை நேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்… குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசிப் பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில், நாட்டுக்கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்… மகா பெரியவரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்… ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது, நாளை வாயேன்’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரைப் பார்க்கணும்’ – என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தைக் கேட்ட சிலர்… விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.

போனேன். கேட்டார். சொன்னேன். “இதோ பாரும் தாத்தாச்சாரி… அவரைப் பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும், நோக்குதான் தெரியுமே… தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்… பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ… அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ…”

என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். ‘நான் சொன்னதுதானப்பபா… சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்…’ என்றேன்.

‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி… நாளை வரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’- என தாய்மொழியாம் ‘தமிழில்’ மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.”

– (‘இந்து மதம் எங்கே போகிறது?’ நூலிலிருந்து)

இதுதான் வேத மரபு – தமிழுக்கு தந்த மரியாதை. ‘வேத மரபு’க்கு இப்போதும் அதிகாரம் படைத்ததாகக் கூறிக்  கொண்டிருக்கும் சங்கராச்சாரி மடம், தமிழுக்குத் தருமம் கவுரவம், மரியாதை, அங்கீகாரம் இதுதான். பிறகு விஜயேந்திரன் எப்படி தமிழ்த் தாய் வாழ்த்தக்கு எழுந்து நிற்பார்? அந்த ‘நீச பாஷை’யை வாழ்த்திப் பாடுவதை காதால்கூட கேட்கக் கூடாது என்பதற்காகவே ‘தியானத்துக்கு’ப் போய் விட்டார்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 08022018 இதழ்

You may also like...