பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்
தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது.
வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும் பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள் கிடைப்பது இல்லை, இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்ற மோடியின் வாதப்படி பார்த்தால் அதே இந்தியாவில் மோடியின் இந்தியாவை மறுத்துள்ள வாக்குகள் 56.14 சதவீதமாகும் என்பதையும் அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பல முற்போக்குக் கருத்துக்களைக் கொண் டிருந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி
5 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் மக்கள் சந்தித்த நெருக்கடிகளை முன்வைத்து வாக்குகளைக் கேட்டார். குறிப்பாக தமிழ்நாட்டில் ராகுல்காந்தி முன்வைத்த கருத்துக்களை பாராட்டி வரவேற்க வேண்டும். பெரியாரின் நூல்களை மோடிக்கு அனுப்பி வைக்கத் தயார்; அதை அவர் படிக்க வேண்டும் என்று பேசியதோடு தென் மாநிலங்களை மோடி ஆட்சி புறக்கணிப்பதை சுட்டிக்காட்டியும் கல்வி உரிமையை மாநிலங்களுக்கு வழங்குவோம் என்றும் உறுதியளித்தார், கேரளாவில் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஆனால் உ.பி.யில் அமேதி தொகுதி அவரைக் கைவிட்டுவிட்டது. தென்னாடு அவரை அரவணைத்துக் கொண்டது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் பாஜகவின் எதிர்ப்பு அணியை நாடு முழுவதும் ஒன்று திரட்டும் முயற்சிகளில் முனைப்புக் காட்ட வில்லை. குறிப்பாக உ.பி., பீகார் மாநிலங்களில் எதிர்ப்பு அணிகளின் பிளவை பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. மக்கள் பிரச்சினைகளை பேசாமல் தவிர்த்து தேசம் – தேசப்பாதுகாப்பு என்ற தேசிய வாதத்தை முன்வைத்து மோடி பரப்புரை செய்தார். மதச்சார்பின்மை பேசுகிறவர்கள் எங்கே போனார்கள் என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு மோடி எழுப்பியுள்ள கேள்வி மிக மிக ஆபத்தானது. இந்தியாவில் மதச் சார்பின்மையைப் பேசுவதே தேசியத்துக்கு எதிரானது என்ற மோடியின் முழக்கம் இந்துப் பார்ப்பனியமே இந்தியாவின் அடையாளம் என்ற அபாய அறிவிப்பதாகும். அடுத்தடுத்து நிகழப்போகும் இந்த பார்ப்பனிய ஒடுக்கு முறைகளை சந்திப்பதற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்.
தமிழ்நாடு இந்துப்பார்ப்பனிய சிந்தனை யோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரியார் ஆழ உழுது விதைத்து விட்டுப் போன சமூகநீதி மண் என்பதை தேர்தல் முடிவுகள் இந்தியா முழுமைக்கும் கம்பீரமாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி மதவாதக் கூட்டணியை முறியடித்து மகத்தான சாதனையை நிகழ்த்தி முடித்திருக்கிறது என்றாலும் மோடி எதிர்ப்பு உணர்வை தமிழகத்தில் ஆழமாக விதைத்ததில் பெரும் பங்காற்றியது தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்கள்தான் என்ற உண்மையை மறுத்துவிடமுடியாது.
மதவாதத் திணிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வடநாட்டார் திணிப்பு, கல்வி உரிமைப் பறிப்பு, நீட் திணிப்பு களுக்கு எதிராக தமிழகத்தில் இயக்கங்கள் களத்தில் மக்களைத் திரட்டிப் போராடின, அரசின் கடும் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டன. தமிழ்நாட்டு வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்தும்- மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்தும் இயக்கங்களோடு இணைந்து மக்களும் வீதிக்கு வந்து போராடினார்கள். தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தினால் 13 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.
மாநில உரிமை, இந்துத்துவ எதிர்ப்பை முன்வைத்து இயக்கங்கள் நடத்திய போராட்டங்களே தமிழகத்தில் மோடி அலை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட
மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட உறுதியான பாஜக எதிர்ப்பு, கூட்டணிக் கட்சிகளிடம் காட்டிய அரவணைப்பு, தீவிரமான பரப்புரை, மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி வாக்கு சேகரித்த அணுகுமுறை மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது.
ஆனாலும் திமுகவை வலிமையான கட்சியாக மாற்றி அமைக்க வேண்டியிருக் கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். கிராமம், ஒன்றியம், நகரம் என்ற கீழ் மட்ட அளவில் கட்சி உணர்வோடு பணியாற்றக் கூடிய தோழர்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள் என்பதையும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், கீழ்மட்டத்தில் பணி யாற்றும் தோழர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதையும் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். திமுக தலைவர் இது குறித்த கவலையுடன் சிந்திப்பார் என்று நாம் நம்புகிறோம். திராவிட இயக்கக் கொள்கை அடையாளத்தோடு தமிழ்நாட்டில் இயங்கும் ஒரே அரசியல் கட்சியாக திமுக மட்டுமே இருக்கிறது. திமுக மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் திமுகவை வீழ்த்தி விட்டால், தமிழ்நாட்டில் திராவிட இயக்க உணர்வையே முற்றிலும் அழித்துவிடலாம் என்ற ஒற்றை இலக்கோடு திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் பல்வேறு அடையாளங் களில் வரிந்து கட்டி நிற்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்திட வேண்டும்.
இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்திருக் கிறார்கள். குறிப்பாக மருத்துவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். வாக்கு வங்கி அரசியலுக்கு ஜாதியை மூலதனமாக்கி அதை முன் வைத்து கூட்டணிக்குப் பேரம் பேசும் பா.ம.க.வின் சந்தர்ப்பவாத அரசியல், கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஜாதி எதிர்ப்புக்காக தொடர்ந்து போராடிவரும் இயக்கங்களின் நோக்கத்தை முறியடித்து ஜாதி வெறிநோக்கி சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பா.ம.க.வின் தோல்வி ஜாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.
அதேநேரத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களான தலித் மக்களின் தலைவராக இந்துத்துவ சனாதன எதிர்ப்பு லட்சியங்களில் சமரசம்செய்து கொள்ளாமல் தேர்தல் களத்தை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுள்ள வெற்றி மிகவும் மகத்தானதாகும்., ரிசர்வ் தொகுதியில் போட்டியிடும் பட்டியல் பிரிவு வேட்பாளர்களில் மேல்ஜாதி அதிகாரத்துக்குப் பணிந்து போகக் கூடியவர்களாக இருப்பவர்களே வெற்றி பெறமுடியும் என்பதே ஜாதிய சமூகத்தின் உளவியல். உரிமைப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்கும் தொல் திருமாவளவன் போன்றவர்கள் வெற்றி பெறவே கூடாது என்றுதான் கருதுவார்கள். இந்தப் பின்னணியில் தான் திருமாவளவன் பெற்றுள்ள வெற்றியை – வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தாலும் மகத்தான வெற்றி என்று குறிப்பிடுகிறோம். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்திய இரட்டை வாக்குரிமையின் தேவையையும் அவசியத்தையும் காலம் உணர்த்தி நிற்கிறது.
தமிழ்நாட்டில் காமராசர் வளர்த்த காங்கிரஸ் கட்சி காமராசர் பாதையிலிருந்து திசை திரும்பி தேர்தல் வெற்றிக்கு கட்சியே பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்திய கூத்தும் அரங்கேறியது. இது தான் காமராசர் காட்டிய பாதையா என்று கேட்க விரும்புகிறோம்.
தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் பாரதிய ஜனதாகட்சிக்கு சிம்ம சொப்பனமாக – நாடாளுமன்றத்தில் முழங்கக்கூடியவர்கள், அதையும் நாடு பார்க்கத்தான் போகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு இப்போது தனித்து நிற்கிறது. இது பெரியார் மண் என்ற செய்தியை உரத்துப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் கடும் நெருக்கடிகளை தமிழ்நாடு சந்திக்கும் அதை முறியடிக்க பெரியாரின் கைத்தடியை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். இந்தக் கைத்தடி பெரியார் இயக்கங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. பார்ப்பனிய மதவாதத்தை முறியடித்து – தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கத் துடிக்கும் கட்சிகள், இயக்கங்கள், வெகுமக்கள் – ஒவ்வொருவரும் உரிமையோடு உயர்த்திப் பிடிக்க வேண்டிய கைத்தடி.
தமிழ்நாடு பெரியார் மண் என்பதை உறுதிப்படுத்திடவும் அதற்கான களங்களை தமிழகம் சந்தித்திடவுமான அரசியல் சூழல் உருவாகி இருக்கிறது.மோடித்துவத்தின் சவாலை-தமிழகம் முறியடிக்கும் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். வெல்லப்போவது பெரியார் தத்துவம் தான்.
பெரியார் முழக்கம் 30052019 இதழ்