மருத்துவக் கட்டமைப்பில் ‘திராவிடன் மாடலு’க்குக் கிடைத்த மகத்தான வெற்றி

தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள், ஏனைய மாநிலங்களை விட வெற்றிகரமாக செயல்படுவதற்கான காரணங்கள் என்ன ? கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் “திராவிடன் மாடல்” அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கைகளே இந்த வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன என்பதை விளக்கி, இந்து ஆங்கில நாளேட்டில்(ஜனவரி 27, 2022) சிறப்பான கட்டுரை ஒன்று வெளி வந்திருக்கிறது. சென்னை அரசு மருத்துவமனை யில் மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாகவும் பணியாற்றும் டாக்டர் சக்திராஜன் இராமநாதன் (சிறுநீரகத் துறை), டாக்டர் சுந்தரேசன் செல்லமுத்து (புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை) ஆகியோர் இணைந்து அக்கட்டுரையை எழுதியுள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு சட்டப்படி செல்லத்தக்கதே என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தகுதி குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களின் வெளிச்சத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. திராவிடம் நாட்டையே கெடுத்துவிட்டது என்ற கூக்குரல்கள் அர்த்தமற்றது என்பதற்கான சான்றாதாரங்கள் அவ்வப்போது வெளி வந்து கொண்டே இருக்கின்றன. தகுதி என்பது பொதுப் போட்டியில் பெறும் மதிப்பெண்களில் இல்லை. மாறாக நேர்மை, மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு என்பதே தகுதிக்கான அடையாளம்; அதை சமூகச் சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விளக்கி இருக்கிறது. இதே பார்வையில் தான் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் தகுதியையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் செயல்படுத்தி இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்துள்ளனர். என்றக் கருத்தை உரிய சான்றுகளுடன் இந்தக் கட்டுரை நிறுவி இருக்கிறது.

குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் அரசு மருத்துவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமூக நீதிக் கொள்கையை தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் தொடர்ந்து பின்பற்றி வருவதை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மேல் பட்டப்படிப்பு (Post Graduate), உயர் சிறப்பு மருத்துவ படிப்பு (Super Speciality) படிப்புகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50ரூ இட ஒதுக்கீடு வழங்கும் முற்போக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட கொள்கை தான், மருத்துவக் கட்டமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறது. பொது மருத்துவத்துறை பரவலாக விரிவடைவதற்கு இதுவே அடிப்படை. இதனால்தான் மகப்பேறு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு உயர்மட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட மருத்துவமனைகளில் இத்தகைய உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. 1960,70 களில் சென்னை தலைமை மருத்துவமனையில் பல சிறப்பு மருத்துவத் துறைகள் உருவாக்கவும் இது வழி வகுத்தது. பின்னர் 1990 களில் பெரும் நகரங்களையும் கடந்து, இரண்டாம் நிலை நகர மருத்துவமனைகளிலும் சிறப்பு உயர் மருத்துவ நிபுணர்களின் சேவை கிடைக்கத் துவங்கியது. இன்று தமிழ்நாட்டில் 900 உயர் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பல்வேறு துறைகளில் தங்களது சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இந்திய ஒன்றியத் திலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அய்ரோப்பிய நாடுகளிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகளில் மட்டுமே இந்த எண்ணிக்கை இருக்கிறது.

மருத்துவ கட்டமைப்புக்காக, தமிழ்நாட்டில் கொள்கையை உருவாக்கியவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு, இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் அரசு மருத்துவர்கள் கிராமத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்கள். இதனால் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ பட்டதாரிகள் முன்வந்தனர். கிராமப்புறங்களில் மருத்துவர் பற்றாக்குறை என்ற நிலை நீங்கியது. மற்றொன்று, மேல் பட்ட படிப்பு, உயர் சிறப்பு மருத்துவ நிபுணர் படிப்புகளில் இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அரசு மருத்துவர்கள் பதவி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளிலேயே பணி புரிய வேண்டும் என்று சட்டப்பூர்வ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது ஆகும். அதனால் கூடுதல் ஊதியத்துக்காக தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது பெருமளவு தடுக்கப்பட்டது. இப்படி ஒரு தனித்துவமான ஒப்பந்தமுறை இந்திய ஒன்றியத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

மிகவும் திறமையான மாணவர்களின் புகலிடங்களாக கருதப்படும், சென்னை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அய்.அய்.டி இரண்டு நிறுவனங்களையும் ஒப்பிட்டால், சென்னை மருத்துவமனை, தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும் மகத்தான சேவைகளை வழங்கி வருவதை புரிந்து கொள்ள முடியும். காரணம் மருத்துவத் துறையில் உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கான கொள்கைதான்.

சீர்குலைக்கும் மருத்துவக் கவுன்சில் :  இதற்கு நேர் மாறாக நீட் தேர்வு முறையும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதி முறைகளில் கொண்டுவரப்பட்ட திருத்தமும் (9ஆவது திருத்தம்) அமைந்துள்ளது. மருத்துவக் கவுன்சில் விதிமுறை களில் செய்யப்பட்ட மாற்றங்களால் கிராமத்தில் பணிபுரியும் முக்கியத்துவம் மோசமான அளவில் குறைக்கப்பட்டது. மேல் மருத்துவப் பட்டப் படிப்பிற்கான 50ரூ இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, டிப்ளமோவிற்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற நிலையை இந்திய மருத்துவ கவுன்சில் உருவாக்கிவிட்டது. தொடர்புடை யவர்களை கலந்து ஆலோசிக்காமலே எடுக்கப்பட்ட குழப்பமான முடிவுகள் இவை.

இத்தனைக்கும் மருத்துவக் கவுன்சில் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்ற அமைப்பும் அல்ல. அது கண்காணிப்பு அமைப்பே தவிர, கொள்கை வகுக்கும் அமைப்பு  அல்ல. இந்தத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்று ஒன்றிய அரசு மனு போட்டது. இன்னும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். தகுதி குறித்த தவறான கண்ணோட்டமே இட ஒதுக்கீட்டிற்கு எதிராக (அகில இந்திய கோட்டா மற்றும் அரசுப் பணி மருத்துவர்களுக்கு) இத்தகைய மனுக்களை தாக்கல் செய்வதற்கான காரணம்.

கிராமப்புறங்களில் மருத்துவப் பணி செய்தால் இட ஒதுக்கீட்டு முறையினால் பயன்பெறலாம் என்ற நடைமுறையை நீக்கிவிட்டு மருத்துவம் படித்த பட்டதாரிகளை கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எந்தப் பலனையும் தராது. மருத்துவர்கள் கிராமங்களுக்கு பணிபுரிய வருவது இல்லை என்று ஒப்பாரி வைப்பதால் என்ன பயன் ? ‘ஆயுஷ்’ என்ற மாற்று இந்திய மருத்துவப் பட்டதாரிகளை கிராமங்களில் நியமிக்கப் போவதாக கூறுவதெல்லாம், வெற்று உணர்ச்சி அறிவுப்புகள் தானே தவிர, நடைமுறைக்கு பயன் தராது. மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு சிறப்பு உயர் மருத்துவப் படிப்புகளில் 50ரூ இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. தகுதி, திறமை குறித்து இப்போது உச்சநீதிமன்றம் தந்திருக்கும் விளக்கத்தின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தனது கருத்தை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும் என்ற கருத்தை மருத்துவர்கள் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

தமிழில் : ‘இரா’

 

பெரியார் முழக்கம் 03022022 இதழ்

You may also like...