பட்டியலிடுகிறார் கேரள முதல்வர் சடங்குகளுக்கு எதிராக கேரளாவில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் பினராயி விஜயன் (கேரள முதல்வர்)
16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து –
ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள் போன்றவர்களின் வரிசையில் உட்படுபவர்கள்தான் அய்யா வைகுண்டரும் பொய்கையில் குமார குரு தேவனும் எல்லாம். இவர்களால், இந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகள் நீங்கியதால் வந்த ஒளி தான் இப்போது கேரளத்தில் வீசுகின்றது. நாம் அதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் எல்லோரும் ‘சடங்குகளை மீறுவதற்காகத்தான் நிலைப்பாடு கொண்டிருந்தார்கள்’ என்பதைத் தான். ஸ்ரீ நாராயண குரு அருவிப்புறத்தில் சிவபிரதிஷ்டை நடத்திய சம்பவம்… உண்மையில் அது ஒரு சடங்கு மீறல் அல்லவா? அப்போது “உங்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை?” என்று அவரிடம் கேட்டார்கள் அல்லவா? அதற்கு குரு என்ன பதில் கூறினார்…? “நாம் பிரதிஷ்டித்தது பிராமணர்களின் சிவனை அல்ல…நமது சிவனைத்தான் நாம் பிரதிஷ்டித் துள்ளோம்” அங்கு சடங்கு மீறல் தான் நடத்தப் பட்டது. அதன்பிறகு, அதே குரு. “இனி கோவில் களையல்ல…பள்ளிக்கூடங்களைக் கட்டுவது தான் மக்களுக்கான தேவை” என்று தானே சொன்னார்.
அங்கேயும் சடங்கு மீறல்கள் தானே தென்படு கிறது? அப்படியென்றால், சடங்குகள் மீறப்பட வேண்டியது என்று தான் நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.அய்யன்காளியின் வில்வண்டிப் போராட்டத்தைப் பாருங்கள்… பொட்டு வைத்து, பட்டுத் தலைப்பாகை வைத்து, கோட்டு அணிந்து…. அன்று அதற்கெல்லாம் உரிமை இருந்ததா? பொட்டு வைக்க உரிமை இருந்ததா? பட்டுத் தலைப்பாகை வைக்க உரிமை இருந்ததா? கோட்டு அணிய உரிமை இருந்ததா? அப்படி யென்றால், உரிமை யில்லை என்று சொன்னவர்களின் சட்டத்தோடு சேர்ந்து நிற்காமல், ‘எங்களுக்கு உரிமை உண்டு’ என்று கூறி, அந்தஉரிமையை நிலைநாட்டு வதற்காகத் தான் நின்றார்கள்.கடந்த வருடம் என்று தான் நினைக்கிறேன்… இங்குள்ள ஊரூட்டம்பலம் ஆரம்பப்பள்ளிக்குச் சென்ற போது, அங்கே பாதி எரிந்துபோன பெஞ்சை நான் பார்க்க நேர்ந்தது. அது… எந்த பெஞ்சு தெரியுமா? பஞ்சமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியைப் பள்ளியில் அமர விடவில்லை என்று கேள்விப்பட்ட போது, அந்த சிறுமியையும் அழைத்துக்கொண்டு, அய்யன்காளி தட்டிக் கேட்க வருகிறார் என்று கேள்விப்பட்ட மேல்ஜாதியினர் அந்த பள்ளிக்கே தீ வைத்தார்கள். அதில் முற்றும் எரிந்து போன பள்ளியிலிருந்து, எஞ்சிய இந்த எரிந்த, துண்டு பெஞ்சு மட்டும் கிடைத்தது. அதைத்தான் நான் அங்கு காண நேர்ந்தது. அவ்வாறு நமது மாநிலத்தில் வெவ்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன.
அப்படித்தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது. அடையாளத்திற்காக மேல்ஜாதியினரால் அணிய வைக்கப்பட்ட கல் மாலையை அறுத்தெறிய நடத்தப்பட்ட போராட்டம்… உடன் அமர்ந்து படிக்க நடத்தப்பட்ட போராட்டம்… படித்த பிறகு… வேலை கிடைப்பதற்கான போராட்டம்… பாதையில் நடப்பதற்கான உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம்… கோவிலுக்குள் நுழைந்து வழிபடு வதற்கான போராட்டம்… இத்தகைய வெவ்வேறு போராட்டங்கள் மூலம் தான், நாம் இன்று காணும் கேரளம் உருவானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இங்கே பாரதிய ஜனதா கட்சி நாட்டையாளும் கட்சியல்லவா? அக்கட்சியின் நிலைப்பாட்டை தனியாக நாம் பரிசீலிக்கவேண்டும்.
மகாராஷ்டிராவில் சனி தேவனின் ஒரு திருத்தலம் உள்ளது. ஒரு கோவில். அங்கு சனிதேவன் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். சனி சிக்னாபூர் என்பதுதான் அந்தக் கோவிலின் பெயர். அந்தக் கோவிலில் எக்காலத்திலும் பெண்கள் நுழைந்த தில்லை. பெண்கள் அக்கோவிலுக்குள் செல்லவே கூடாதாம். சனிதேவன் பெண்களைப் பார்க்கவே கூடாது என்பது தான் அங்குள்ள நிலைமை. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ‘பெண்களுக்கு கோவிலுக் குள் செல்ல உரிமை உண்டு’ என்று தீர்ப்பளித்தது. அங்கே பாஜக அரசுதான் உள்ளது. அவர்கள் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தி னார்கள். இப்போது பெண்கள் அந்தக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படி யென்றால், பாஜக ஆளும் மாநிலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தலாம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில், இடது ஜனநாயக முன்னணி ஆளும் மாநிலத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே வந்தாலும் அமல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். இது என்ன மாதிரியான இரட்டை நிலைப்பாடு?அங்கே அதுபோலவே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு தீர்ப்பு… மும்பைக்கு அருகே ஹாஜி அலி தர்கா… அங்கே பெண்களை செல்ல அனுமதிக்க வேண்டு மென்று மனு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், நீதிமன்றம் பெண்கள்அந்த மசூதியில் செல்ல அனுமதித்தது. அந்த மசூதியில் பெண்கள் செல்கிறார்கள். இதெல்லாம் மகாராஷ்டிராவில் நடந்த விஷயங்களாகும். அதோடு இடதுமுன்னணி அரசு சமூக சீர்திருத்த பாரம்பரியத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருகிறது.
நமது கோவில்களில் “பிராமணர்கள்” அல்லாதவர்களும் பூசாரிகள் ஆகலாம். அது, நமது தேசமே பெரும் ஆதரவளித்து வரவேற்ற ஒன்றாகும். சாதாரணமாக எல்லோரும் பூசாரிகள் ஆகிவிட முடியாது என்பது போன்ற, மேல்ஜாதி ஆதிக்கம் நிறைந்த விதிமுறைகளை எழுதியவர்கள் உட்பட எல்லோரும், “எல்லா ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தால் பூசாரி ஆவதற்கு தடையேது மில்லை” என்ற நிலைப்பாட்டை முன்வைத்தபோது ஏற்றுக் கொண்டார்கள். அதுபோலவே தான், அறநிலையத் துறை ஊழியர்களின் நியமனத்தில் பட்டியலினத் தவர்கள், மலைவாழ் இனத்தவர்கள், பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தினோம். உயர்வகுப்பின ரில் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளவர்களுக்கு, அறநிலையத் துறை ஊழியர் நியமனத்தில் தனியாக இடஒதுக்கீடு செய்யும் ஒரு முறையையும் மாநில அரசு அமல் படுத்தியது. இதெல்லாம், சமூக சீர்திருத்த மரபின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகள் ஆகும். இங்கே காங்கிரசார் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், கட்சிக் கொடியின்றி பாஜக தலைமை தாங்கும் போராட்டத்தில் பங்கேற்றால், நீங்கள் காங்கிரஸ் அல்ல என்று ஆகிவிடுவீர்களா..? ஆமாம்…காங்கிரஸ் இல்லையென்று ஆகிவிடும் நிலை உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். நாளை அவர்கள் பாஜக ஆகிவிடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். காங்கிரசுடன் இணைந்து நிற்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது அரசியலமைப்புச் சட்டம் பற்றிய ஆர்.எஸ்.எஸ்-ன் பார்வை ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க வேண்டுமென்றுதான் ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதை அவர்கள் வெளிப் படையாகவே கூறுகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்திலேயே கூறிவிட்டார்கள். ஆனால் இப்போது ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை காங்கிரசாரும் உயர்த்திப்பிடிக்கிறார்கள். அது, “எல்லாவற்றையும் விட உயர்ந்தது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கையே முக்கியம். அரசியலமைப்புச்சட்டத்தின் மதிப்புமிக்க அம்சங்களை விட சட்டங்களைவிட நம்பிக்கையே முக்கியம்” என்பதாகும்.இந்த வாதத்துடன் இணைந்து நிற்பவர்கள் அதன் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை சரியான விதத்தில் புரிந்து கொண்டிருக்கிறார்களா? இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த வாதத்துடன் அணி திரள்வதாக செய்திகள் வருகின்றன. முஸ்லீம் லீக் தலைவர்களும் உணர்ச்சி வசப்பட்டு இந்த வாதத்துடன் அணிவகுக்கிறார்கள். நீங்கள் இந்த வாதத்தை கொஞ்சம் விரிவுபடுத்திப் பாருங்கள்.
பாபர் மசூதி விவகாரத்தில்…எங்கே போய் முடியும்? நம்பிக்கைதான் முக்கியம் எனில், இராமர் கோவில்தான் அது என்று கூறும் நம்பிக்கையோடு அல்லவா இணைந்து நின்றிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-ம் அந்த வாதத்தோடு தான்… பாஜகவும் அந்த வாதத்தோடு தான்… காங்கிரசும் மிகச்சரியாக அந்த வாதத்தோடு தான், அக்காலத்தில் நின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்… இந்த வாதத்தின் பின்னால் உள்ள ஆபத்து என்னவென்று சரியான முறையில் யார் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நமது நாட்டில், சங் பரிவாரங்கள் உரிமை கொண்டாடுவது ஒரு பாபர் மசூதியின்மீது மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் மீது அவர்களின் உரிமைவாதம் இருக்கிறது. இது எங்களது ஆராதனாலயம் என்று கூறுகின்ற உரிமை வாதத்தை முன்வைக்கிறார்கள்.எல்லாமே நம்பிக்கை யின் அடிப்படையிலானது என்றால் நாளைய எதிர்காலம் என்னவாகும் என்று… நிதானமாக சிந்தித்தால் போதும்…சிந்திக்க முடிந்தால்…இவ்வாறு நம்பிக்கையின்பால் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதை மட்டும் நாங்கள் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்… நாம் கவனமாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்ன வெனில், எது அவர்களின் குறிக்கோள் என்பதே.. அரசைத் திட்டுவதோ… இடதுஜனநாயக முன்னணியைத் திட்டுவதோ அல்ல… மாறாக அவர்களின் உண்மையான நோக்கம் கேரளத்தின் மதசார்பற்ற சிந்தனையைத் தகர்ப்பதே ஆகும்.
அதை அனுமதிக்க வேண்டுமா? என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி. அதை அனுமதிக்கவே முடியாது. நாம் உறுதியாக இத்தகைய முன்னெடுப்புகளை எதிர்த்து நின்று போராடியிருக்கிறோம். மதசார்பற்ற சிந்தனைகளை எதிர்க்கவும், மதசார்பற்ற எண்ணங் களை தகர்க்கவும் நடத்தப்படும் முயற்சிகளை, நாம் எல்லோரும் இணைந்து முறியடிக்க வேண்டும். மதநம்பிக்கையாளர்கள் உட்பட உள்ள அனைவரும், அதற்காக அணிதிரண்டு களத்திலிறங்கிப் போராட வேண்டுமென்று இந் நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். வாழ்த்துக்கள்…!
நன்றி : தீக்கதிர்
பெரியார் முழக்கம் 22112018 இதழ்