”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.
”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.
இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார்.
கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது.
கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் செய்தார். அது `தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` . அன்று பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. ஒரு நாள் காலையில் வேலைக்கு போனால் மறுநாள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். வேலைக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்பிடி வேலை தீடிரென மறுக்கபட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.
டிசம்பர் 25 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்தது 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பது டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியப்படுகிறது. எனவே உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் குடுக்கவில்லை. ஆனால் பிறகு கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்பிடி என்றத் தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினர்.12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டதில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாக கூலி உயர்வுப் போராட்டங்களை பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலார்கள் பங்குதாரர்கள் ஆவதுதான் முக்கியம் என்பதே பெரியாரின் நிலைப்பாடு. “எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).
“நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” – “(பகுத்தறிவு – 2.12.1934)
“முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்” -1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்.
இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யுனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.
கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்கு கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.
கீழ்வெண்மணியை சாா்ந்த முனியன் என்பவா் கீவளூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண்:327/68ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்கு கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின். எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆத்ரவளித்தாகச் சொல்வது எங்குமே பொருந்தாது. இன்னொரு முக்கிய விசயம். ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் “ என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு” எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதை கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.
கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆனா சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல்த் துரை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘கலாக்குடி மதி’ இன்னும் உயிரோடு இருக்கிறார்.குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆக, கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை.