இராவணன் உருவ எரிப்புக்கு பூரி சங்கராச்சாரி கண்டனம்
தசரா விழாவின்போது இராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் நடைமுறை, இந்து கலாச்சாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று பூரி சங்கராச்சாரியாரான அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் அருகே இராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த மக்கள் மீது இரயில் மோதி சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில், பூரி சங்கராச்சாரியார் அதோக் ஷஜானந்த் தேவ் தீர்த்த மஹராஜ், மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ தசரா விழாவின்போது, கொடும்பாவி எரிக்கும் பழக்கம் ஒரு பழமைவாதமாகும்; இந்து கலாச்சார அடிப்படைக்கே எதிரானது; இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும்; அவ்வகையில், இராவணனின் இறுதிச் சடங்குகளை இராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்; எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது; எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார். மேலும், “இக்கொடும்பாவி எரிக்கும்நடைமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும்”என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இராமன் கடவுளா?
காட்சிப் பொருளா?
உ.பி.யில் இராமனுக்கு கோயில் கட்டி ‘இராமனை’ கடவுளாக்க சங் பரிவாரங்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில் இராமனுக்கு 211 அடி சிலை வைத்து காட்சிப் பொருளாக்க உ.பி. பா.ஜ.க. முதல்வர் ஆதித்யநாத் முயற்சிக்கிறார் என்று வாரணாசியில் பார்ப்பனர் துவாரக பீட சங்கராச்சாரி தலைமையில் கூடிய சாமியார்கள் உ.பி. அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இராமன் கடவுளா காட்சிப் பொருளா என்று சங் பரிவாரங்கள் ‘குடுமிபிடி’ சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும் ‘இராமன்’ பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமாக்கப்படுகிறான் என்பது மட்டும் உண்மை.
பெரியார் முழக்கம் 06122018 இதழ்