நாடு முழுதும் கட்சியின் நிர்வாகிகள் குறித்த ஆய்வில் வெளியான தகவல் பார்ப்பன-பனியாக்களின் கூடாரம் பாஜக!
பா.ஜ.க. தொடங்கி 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கட்சியின் தேசிய மாவட்ட நிர்வாகிகள் பார்ப்பன-பனியா உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவினர்களிடமே இருக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்சாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாக்குகளைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளையும் இவர்கள் பின்பற்று கிறார்கள்.
ஆனால் அந்தக் கட்சியின் கட்டமைப்பில் அடித்தட்டு மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. பாஜக உருவாகி 38 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அக்கட்சி பொறுப்பில் இன்றளவிலும் முன்னேறிய சமூகத்தினரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. குறைந்த அளவில்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவின் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளவில்தான் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் பொறுப்பில் உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன கட்டமைப்பு குறித்த ஒரு விரிவான ஆய்வை நடத்தி மிகத் துணிச்சலாக இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்திருக்கிறது ‘தி பிரிண்ட்’. பாரதிய ஜனதா கட்சியின் 1000 தலைவர்களை உள்ளடக்கிய ஒரு விரிவான ஆய்வறிக்கையை ‘தி பிரிண்ட்’ ஊடகம் வெளியிட் டுள்ளது. இந்த ஆய்வு முன்வைக்கும் முக்கிய விவரங்களை நாம் தமிழில் காணலாம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பு வகிக்கிற நான்கில் மூவர் உயர் ஜாதியினராகத்தான் உள்ளனர். 60 விழுக்காடு தேசிய நிர்வாகிகள் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்தான். மாநிலத் தலைவர்களிலும் 65 விழுக்காட்டினர் பொதுப் பிரிவினர்தான். மாவட்ட அளவிலான தலைவர்களைப் பார்த்தாலும் 65 விழுக்காட்டினர் பொதுப் பிரிவினராகத்தான் உள்ளனர். பொது வாகவே பாரதிய ஜனதா கட்சியின் மீது பார்ப்பன-பனியா கட்சி என்ற விமர்சனம் இருந்துவருகிறது. இதை மாற்றத்தான் கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களை அதிகளவில் உள்ளிழுக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், கட்சியின் பொறுப்பு நிலைகள் அதற்கு முற்றிலும் நேர்மாறாகவே இருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 752 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் பாஜகவின் 487 (65.2 ரூ) மாவட்ட நிர்வாகிகள் பொதுப்பிரிவைச் சேர்ந்த பார்ப்பன-பனியாக்கள் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினர் . 185 பேர் (24.7ரூ) இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சார்ந்தவர்கள். 33 (4.4 ரூ) பேர்தான் பழங்குடியினர். வெறும் 28 (3.7ரூ) பேர்தான் தாழ்த்தப் பட்டவர்கள். சிறுபான்மையின மதங்களைச் சேர்ந்தவர்கள் 13 (1.7ரூ) பேர் மட்டுமே.
பாஜகவின் தேசிய அலுவலக பொறுப் பாளர்களாக தாழ்த்தபட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். மாநில நிர்வாகிகளாக இவர்களில் ஒருவர் கூட இல்லை.
பாஜகவின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் 50 பேர், தேசிய நிர்வாகிகள் 97 பேர், 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 36 மாநிலத் தலைவர்கள், 24 மாநிலங்களைச் சேர்ந்த 752 மாவட்ட பிரதிநிதிகள் என அனைவரையும் இந்த ஆய்வுக்கு பிரிண்ட் உட்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த ஜாதியினர் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்பதை வகைப்படுத்தித்தான் பொறுப்புகள் நிர்ணயத்தில் பாஜக செயல்பட் டுள்ளது.
முசுலிம்கள், கிறுத்துவர்கள் மற்றும் புத்த மார்க்கத்தினர் இந்நாட்டில் சிறுபான்மையினராகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. சீக்கியர்கள் இந்திய அளவில் சிறுபான்மையினராக இருந்தாலும், பஞ்சாபில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். அதனால் பஞ்சாபில் மட்டும் சீக்கியர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது பாஜக. பஞ்சாபை தவிர்த்து வெளியில் பார்த்தால் தேசிய அலுவலகப் பொறுப்பிலும், தேசிய நிர்வாகியாகவும் தலா ஒரேயொரு சீக்கியர் மட்டுமே நிர்ணயிக்கப் பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகியாக மத்தியப் பிரதேசத்தில் ஒருவரும், சத்தீசுகரில் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். வேறு எங்கும் சீக்கியர்கள் நியமிக்கப்படவில்லை.
தேசிய அளவிலான அலுவலக நிர்வாகிகளின் பெயர்கள், தேசிய நிர்வாகிகளின் பெயர்கள், தேசிய செயலாளர்கள், தேசிய துணைச் செயலாளர்கள், தேசிய பேச்சாளர்கள், தேசிய துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர்களின் பெயர்கள் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலேயே கிடைக்கின்றன.
மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் மாநில அளவிலான இணையதளப் பக்கங்களில் கிடைக்கின்றன. சில மாநிலங்களில் மட்டும் பெரிய மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். ஜாதியின் அடிப்படையில் இந்தப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மிகத் துல்லியமாக நம்மால் அறிய முடிகிறது. சில இடங்கள் மட்டும்தான் இதற்கு முரண்படுகின்றன.
பா.ஜ.க.வின் 50 தேசிய அளவிலான அலுவகப் பொறுப்பாளர்களில் 17 பேர் பார்ப்பனர்கள். 21 பேர் முன்னேறிய சமூகத்தினர். 4 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3 பேர் தாழ்த்தப்பட்டவர்கள். 3 பேர் பழங் குடியினர். இருவர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர்.
பாஜகவின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் இடங்களில் பார்ப்பனர்களையும், முன்னேறிய சமூகத்தினரையும் தாண்டி மற்ற அனைத்துப் பிரிவினர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
இதில் 3 தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவர் பாஜக எ°.சி. அணி தலைவராவார். இரண்டு முசுலிம்களில் ஒருவர் சிறுபான்மையினர் அணி தலைவராவார்.
3 பழங்குடியினர்களில் ஒருவர் எ°.டி பிரிவு தலைவராவார். மற்றொருவர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஜோதி துருவ் என்ற பெண். இவரும் பழங்குடியினர் அல்ல என அம்மாநில அரசு அவருடைய ஜாதிச் சான்றிதழை நீக்கி சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.
ஆக, ஒட்டுமொத்தமாக தேசிய அளவிலான பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகப் பொறுப் பாளர்களில் 76 விழுக்காட்டினர் பார்ப்பனர்களும், முன்னேறிய சமூகத்தினரும்தான். 8 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள். 6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டவர்கள்.
தேசிய நிர்வாகிகள் நியமனத்திலும் இந்த சமத்துவமின்மையானது மிகுந்தே காணப்படுகிறது. மொத்தமுள்ள 97 தேசிய நிர்வாகிகளில் 29 பேர் பார்ப்பனர்கள். 37 பேர் முன்னேறிய சமூகத்தினர்கள். 18 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். 7 பேர் தாழ்த்தப் பட்டவர்கள். 3 பேர் சிறுபான்மையினர். ஒருவர் சீக்கியர். ஒருவர் பழங்குடியினர். மற்றொரு தேசிய நிர்வாகியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சந்தன் மித்ரா கடந்த மாதத்தில் பாஜகவிலிருந்து வெளியேறிவிட்டார். இந்தப் பதவிக்கு இன்னும் புதிதாக யாரும் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
ஆக தேசிய நிர்வாகிகளிலும் 69 விழுக்காடு பார்ப்பனர்களும், முன்னேறிய சமூகத்தினர்களும் தான் உள்ளனர். எஞ்சியவர்கள் 31 விழுக்காடு உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான தலைவர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் கிடையாது. 7 பேர் பார்ப்பனர்கள். 17 பேர் முன்னேறிய சமூகத்தினர்கள். 6 பேர் பழங்குடியினர். 5 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் முசுலிம். ஆக, இதிலும் 66 விழுக்காட்டுக்கும் அதிகமாக பார்ப்பனர்களும், முன்னேறிய சமூகத்தினர்களும் தான் உள்ளனர்.
பாரதிய ஜனதாவின் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் பார்த்தால் முன்னேறிய ஜாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
மொத்தமுள்ள 752 மாவட்டங்களில் 746 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களின் தகவல்தான் கிடைத்துள்ளது. இதில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மூன்று மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் ஜாதி குறித்த தகவல் உறுதியாகக் கிடைக்கவில்லை.
எஞ்சியவர்களில் 487 பேர் முன்னேறிய சமூகத்தினர். இதில் நான்கில் ஒரு பங்கு பார்ப்பனர்கள்.
25 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள். 4 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். 2 விழுக் காட்டுக்கும் குறைவாகத்தான் சிறுபான்மையினர்கள் இருக்கிறார்கள். ஆக, மாவட்ட அளவிலான பொறுப்புகளிலும் பார்ப்பனர்களும், முன்னேறிய சமூகத்தினர்தான் 65 விழுக்காடு பொறுப்புகளில் உள்ளனர்.
எந்த சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் பாஜகவில் இல்லை என்பதைத்தான் இது பிரதிபலிக்கிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16.6 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்கள். 8.6 விழுக்காடு பழங்குடி யினர்கள். மற்ற ஜாதிகளுக்கான துல்லியமான கணக்கெடுப்புகள் இதுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் 2007 தேசிய மாதிரி ஆய்வறிக்கையின் படி இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 விழுக்காடாகும்.
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய ஜாதிக் கூட்டணியை வைத்துதான் அங்கு ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக. அம் மாநிலத்தில் மொத்தம் 71 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் சில மாவட்டங்களைப் பிரித்து 92 மாவட்டத் தலைவர்களை பாஜக நியமித்துள்ளது. இதில் 72 விழுக்காடு மாவட்டத் தலைவர்கள் முன்னேறிய சமூகத்தினர்களே. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 30 பேர் பார்ப்பனர்கள். 15 பேர் பனியாக்கள். 26 பேர் மற்ற முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் அம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 விழுக்காடாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களில் இருவர் மட்டுமே மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 26 விழுக்காடு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலை கணக்கில்கொண்டு மேலும் சில மாநிலங்களிலும் இதுபோன்ற நடைமுறையைத் தீவிரமாக பாஜக பின்பற்றியுள்ளது. பீகாரில் நியமிக்கப்பட்டுள்ள 40 மாவட்டத் தலைவர்களில் 6 பேர் பார்ப்பனர்கள். 16 பேர் முன்னேறிய சமூகத்தினர். 11 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். 6 பேர் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (இ.பி.சி). அதாவது 55 விழுக்காடு பார்ப்பனர்களும், முன்னேறிய சமூகத்தினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் மற்ற முன்னேறிய சமூகத்தினர்கள் 70 விழுக்காடு அளவுக்கு மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 25 விழுக்காடும், 4 விழுக்காடு பழங்குடியினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு சீக்கியர் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ°தானில் 71 விழுக்காடு மாவட்டத் தலைவர்களாக பார்ப்பனர்களும், பனியாக்களும், மற்ற முன்னேறிய சமூகத்தினரும்தான் உள்ளனர். 23 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள்.
சத்தீசுகரில் 45 விழுக்காடு இதர பிற்படுத்தப் பட்டவர்களும், 41 விழுக்காடு முன்னேறிய சமூகத்தினரும் (பார்ப்பனர்கள்-3ரூ, பனியாக்கள்-17எ, மற்ற முன்னேறிய சமூகத்தினர்கள்- 21ரூ) மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 7 விழுக்காடு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நியமிக்கப்பட்டுள்ள 41 மாவட்ட தலைவர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். 21 பேர் முன்னேறிய சமூகத்தினர்கள். 8 பேர் பிற்படுத்தப் பட்டவர்கள். 6 பேர் பழங்குடி யினர்கள். 3 பேர் மட்டுமே தாழ்த்தப் பட்டவர்கள். அந்த மாநிலத்தின் பலமான ஜாதியாகத் திகழும் படேல் சமூகத்தினர் 31 விழுக்காடு அளவுக்கு பாஜகவின் மாவட்டத் தலைவர்களாக உள்ளனர். இவர்கள்தான் இப்போது இட ஒதுக்கீடு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் பாஜக நியமித் திருக்கிற 40 மாவட்டத் தலைவர்களில் 15 பேர் அம்மாநிலத்தின் ஆதிக்க ஜாதியாக விளங்குகிற மாரத்தா வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். எஞ்சியவர்களில் 11 பேர் பார்ப்பனர்கள். 6 பேர் முன்னேறிய சமூகத்தினர்கள். 4 பேர் மட்டும்தான் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். பழங்குடியினர்களோ 3 பேர் மட்டுமே. ஒருவர் முசுலிம். அதிலும் மோசமாக தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.
மேற்கு வங்கத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட் டுள்ள மாவட்டத் தலைவர்களில் இருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வர்கள். 5 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய சமூகத்தினரே. பாஜக ஆட்சியில் உள்ள அசாமில் 45 விழுக்காடு மாவட்டங்களில் பார்ப்பனர்கள் உட்பட முன்னேறிய சமூகத்தினர்களே மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். 32 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 21 விழுக்காட்டினர் பழங்குடியினர்கள். ஒருவர் மட்டும் முசுலிம்.
ஜம்மு காஷ்மீரில் 48 விழுக்காடு அளவுக்கு முசுலிம்கள் மாவட்ட தலை வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய சமூகத்தினர்கள்தான்.
கர்நாடகாவைப் பொறுத்தவரை யில் நியமிக்கப்பட்டுள்ள 36 மாவட்ட தலைவர்களில் 19 பேர் லிங்காயத்துகள். 7 பேர் ஒக்காலிகா சமூகத்தினர். இந்த இரண்டு சமூகத்தினரும்தான் கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியப் பிரிவினர்களாக உள்ளனர். 2 பேர் முன்னேறிய சமூகத்தினர்கள். 5 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள்.
தமிழ்நாட்டிலோ மறைமுகமாக ஆளுங்கட்சியின் கூட்டணி அரசு போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கிறது பாஜக. தமிழ்நாட்டில் 71 விழுக்காடு அளவுக்கு பிற்படுத்தப் பட்டவர்களும், 26 விழுக்காடு அளவுக்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட முன்னேறிய சமூகத்தினரும் மாவட்டத் தலைவர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டவர் களில் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை.
பொறுப்பாளர்கள் நியமனத்தில் நிலவும் இதுபோன்ற பாரபட்சம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களிடம் கருத்து கேட்க பிரிண்ட் ஊடகம் முயற்சித்தபோது, யாரும் பதிலை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஜாதியினரையே பாஜக தேர்ந்தெடுத்து தலைவராக நியமித்துள்ளது என்பது உறுதியா கிறது.
மேலும் இந்த பாகுபாட்டை சமநிலைப்படுத்தும் விதமாக மாவட்ட தலைவருக்கு கீழுள்ள பொறுப்புகளில் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கபடுவதாகவும், இந்த முறையைத்தான் நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் பின்பற்றுவதாகவும் பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில் தகவல்கள் கிடைக்கின்றன. மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தலைவர் பிரிண்ட் ஊடகத்துக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், “மோடி பிற்படுத்தப்பட்டவர். இதுவே பாஜக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கட்சி என்பதைக் காட்டும். படிப் படியாகத்தான் மாற்றங்கள் நிகழும். ஒரு நாளில் இந்த மாற்றத்தை அளிக்க இயலாது” என்றார்.
‘தி பிரிண்ட்’ ஆங்கில இதழ்
தமிழில் : ர. பிரகாசு
பெரியார் முழக்கம் 09082018 இதழ்