உருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்

உருவாகாத ரிலையன்ஸ் கல்வி நிறுவனத்துக்கு,  ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனத்துக்கான’ தகுதியாம்.

இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் இந்தியாவி லுள்ள ஆறு உயர்கல்வி நிறுவனங்கள், உலக கல்வி தரத்துக்கு இணையான இந்தியாவின் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence)’ அறிவிக்கப்பட்டன. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (டெல்லி, மும்பை), இந்திய அறிவியல் கழகம் (பெங்களுர்), பிலானியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கழகம் (1964), மணிபால் உயர்கல்வி அகாடமி (1953) என குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டு கால உயர்கல்வி பயிற்சி அனுபவ முடைய கல்வி நிறுவனங்களோடு, இன்னும் உருவாக்கப்படாத ரிலையன்ஸ் ஜியோ கல்வி நிறுவனத் துக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவன அந்தஸ்தை இணைத்து வழங்கி யிருக்கிறது இந்திய அரசு.

கடந்த 2016ம் ஆண்டைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்து அரசு கல்வி நிறுவங்கள், பத்து தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைகளுக்கு ‘புகழ்பெற்ற கல்வி நிறுவன’த் தகுதி வழங்கப்படும் என அறிவித்தார்.

கல்வி நிறுவங்களை தேர்ந்தெடுப் பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழு இந்தியா முழுதிலிருந்தும் விண்ணப்பித்திருந்த பல்வேறு கல்வி நிறுவங்களை பரிசீலித்து, வெறும் ஆறு கல்வி நிறுவனங்களை மட்டுமே அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. 20 கல்வி நிறு வனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் வெறும் ஆறு நிறுவங்களை தேர்ந்தெடுத்தது பற்றி குழுவின் தலைவரிடம் கேட்டதற்கு, “விண்ணப் பித்திருந்த பல்வேறு கல்வி நிறு வனங்களை ஆய்வு செய்ததில் உலகின் முதல் 500 கல்வி நிறுவனங்களுடன் போட்டி போடு வகையில் உலக தரத்தை ஒத்த 20 கல்வி நிறுவனங்கள் கூட இந்தியாவில் இல்லை.  பெரும் பாலானவை உலக கல்வித் தர ரீதியில் பின் தங்கியுள்ளன” என தெரிவித்தார்.

தற்போது இயங்கிக் கொண் டிருக்கக்கூடிய, அண்ணா பல்கலைக் கழக அனுபவத்தையொத்த பல கல்வி நிறுவனங்களுக்கு ‘உலகத்தர கல்வி அனுபவமில்லை’ என ‘தகுதி’ வழங்க மறுத்தவர்கள்தான், இன்னும் உருவாக்கவேபடாத ரிலையன்ஸ் ஜியோ கல்வி நிறுவனத்துக்கு அந்தத் தகுதியைத் தந்திருக்கிறார்கள்.

இத்தகைய அங்கீகாரம் பெறக் கூடிய கல்வி நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கித் தரப்படும். மேலும் இக்கல்வி நிறுவனங்கள் பல்கலைக் கழக அமைப் புக் குழு, இந்திய பார் கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் போன்ற இந்திய கல்வி ஒழுங்காற்று அமைப்புகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படத் தேவை யில்லாத தன்னாட்சி அதிகாரமுடைய கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும்.

கல்விக் கட்டண நிர்ணயிப்பு, இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை போன்ற, மக்கள் நல அடிப்படையில் நடைமுறையில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் ஏதும் இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனத்துக்கு இழப்பு என்றால், அவர்களுக்கு முன் அனுபவமே இல்லாத (கூடங்குள) அணுஉலை பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு லாபம் ஈட்ட இந்திய அரசு வழிவகை செய்து கொடுக்கும். இந்தியாவில் தனியாருக்கான சர்வதேச கல்வி சந்தை உருவாகிறதா, கல்வி நிறுவனத்தையே தொடங்காத ரிலையன்ஸ் ஜியோவிற்கு Institutions of Eminence அந்தஸ்தைக் கொடுத்து, கல்வியிலும் லாபம் சம்பாதிக்க வழி யேற்படுத்திக் கொடுக்கும்.  இதுதான் மோடி ஆட்சி.

பெரியார் முழக்கம் 12072018 இதழ்

You may also like...