அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டித்தது சட்ட விரோதம், வரும் ஜூலை 31ஆம் தேதியோடு அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்க மிக முக்கிய கேடயமாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வந்த பாஜகவிற்கு இத்தீர்ப்பு பேரதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரை, 2018ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை இயக்குநராக ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இவருடைய பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஒன்றிய அரசால் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் 2021-ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டில் ஒருமுறையும் என தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருந்தது ஒன்றிய அரசு.
2020-ஆம் ஆண்டு மே மாதத்திலேயே 60 வயதை நிறைவு செய்த சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு இத்தனை முறை பணி நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? வேறு தகுதியுள்ள நபர் ஒருவர் கூட கிடைக்கவில்லையா என்ற கேள்விகள் எழத் தொடங்கின. சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி நீட்டிப்புக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும் பணி நீட்டிப்பு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டுமென்றும், இன்னொரு முறை சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படக்கூடாது என்றும் 2021-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் தெள்ளத்தெளிவாக இப்படியொரு தீர்ப்பை வழங்கிய பின்பும்கூட 2022-ஆம் ஆண்டில் சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டார்.
இதைக்கண்டு அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ஆம் தேதி ஒரு மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி நீட்டிப்பு சட்டவிரோதம், ஜூலை 31-ஆம் தேதிக்குள் புதிதாக ஒருவரை அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால், வேறு ஆள் கிடைக்கவில்லையா என்றும் நீதிபதிகள் ஒன்றிய அரசை நோக்கி காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பொம்மைகளாக மாற்றி, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே மட்டுமே ஒன்றிய அரசு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது இந்தியாவில் இருக்கிற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள், சனநாயகவாதிகள் முன்வைக்கிற பரவலான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிற விதமாக சஞ்சய் மிஸ்ராவின் பணி நீட்டிப்பு நடவடிக்கை இருந்து வந்ததது. உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.
நாட்டில் நிலவும் வேலையின்மை, மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதிய- மதவாத மோதல்கள், சகிப்புத்தன்மைக்கு எதிரான அவலங்கள் போன்ற முக்கியப் பிரச்னைகள் எவற்றுக்கும் பதில் கொடுக்காத உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு மட்டும் வேக வேகமாக அன்றே பதில் கொடுத்தார். இந்தத் தீர்ப்பு தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அமித் ஷா, “அமலாக்கத்துறை இயக்குநராக யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, அமலாக்கத்துறையின் பணி என்னவென்பதுதான் முக்கியம். அமலாக்கத்துறை எந்தவொரு தனி நபருக்கும் அப்பாற்பட்ட அமைப்பு. பணமோசடி, அந்நிய செலாவணி சட்டங்களை மீறுதல் போன்ற குற்றங்களை விசாரிப்பதுதான் அந்த அமைப்பின் பணி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்.
அமலாக்கத்துறை இயக்குநராக யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை என்று அமித் ஷா சொல்வது சரியென்றால், ஏன் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு இத்தனை முறை பணி நீட்டிப்பு கொடுத்து, அவரைத் தக்கவைக்க ஒன்றிய பாஜக அரசு விரும்புகிறது என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. ஏனெனில் 2018ஆம் ஆண்டு இவர் அமலாக்கத்துறை இயக்குநராக பொறுப்பேற்ற பின்னர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை மேலோட்டமாகப் பார்த்தாலே நமக்குத் தெளிவாகப் புரிந்துவிடும்.
இவருடைய 5 ஆண்டுகள் பதவிக் காலத்தில் மட்டும் 3,000-க்கும் அதிகமான வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்திருக்கிறது. ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர்கள் அனில் தேஷ்முக்த், நவாப் மாலிக், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பார்த்த சட்டர்ஜி, தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி உள்ளிட்ட பலர் இப்பட்டியலில் உள்ளனர்.
நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி 5 நாட்கள், சுமார் 42 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சோனியா காந்தியிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பிரியாங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோராவும் விசாரணையில் இருந்து தப்பவில்லை. ஆம் ஆத்மியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் இன்னமும் சிறையிலேயே உள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நேரடியாகவும், சில மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளோடும் இணைந்தும் பாஜக ஆட்சிபுரியும் சூழலில், பாஜகவினர் மீதான பணமோசடி குற்றச்சாட்டுக்கள் மட்டும் சஞ்சய் குமார் மிஸ்ராவின் புலனாய்வுக் கண்களுக்கு எட்டாமலேயே போய்விட்டன. அதனால்தான் சஞ்சய் குமார் மிஸ்ராவை வீட்டுக்கு அனுப்ப மனமில்லாமல் அமித் ஷா பதறுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் சஞ்சய் குமார் மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக பொறுப்பேற்றதற்குப் பின்னர்தான் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாது. இவர் பாஜகவின் எண்ணத்திற்கேற்ப பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறார் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தையும், 2014 முதல் 2022 வரையிலான பாஜக ஆட்சிக்காலத்தையும் ஒப்பிடும்போது அமலாக்கத்துறையை பாஜக எவ்வளவு மோசமாக கையாண்டு, ஜனநாயகத்தை சீர்குலைத்திருக்கிறது என்பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
2005ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 6,000 வழக்குகள் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,142 வழக்குகளுக்கு மட்டும்தான் முழுமையாக விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25 வழக்குகள் மட்டும்தான் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன.
2004-இல் இருந்து 2014 வரைக்கும் காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை விட, 2014-இல் இருந்து 2022 வரை பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது 2,555 % அதிகம். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 112 இடங்களில் மட்டுமே அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் 2014 முதல் 2022 வரை சுமார் 3,000 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்திருக்கிறது. 2014 முதல் 2022 வரை அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் 115 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதில் 95 % எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களே.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 19 பேர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், சிவசேனாவை சேர்ந்த 8 பேர், திமுக மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த தலா 6 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த தலா 5 பேர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 பேர் கடந்த 9 ஆண்டுகளாக அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒட்டுமொத்த 10 ஆண்டுகளிலும் சேர்த்தே 26 அரசியல் தலைவர்கள் வீடுகளில் மட்டும்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் 14 பேர் மட்டும்தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி அளித்த பதில் மூலம் இப்புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஊழல் ஒழிப்பில் அக்கறை இல்லை, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதுதான் முக்கியம் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. பாஜகவில் இணைந்துவிட்டாலே, எவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் ஒழிந்து புனிதர்கள் ஆகிவிடும் அதிசயமும் கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை நடந்திருக்கிறது. சோதனைக்குப் பிறகோ, சோதனை நடத்தக்கூடும் என்று அஞ்சியோ பாஜகவில் இணைந்த சம்பவங்களும் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முன்வந்த அஜீத் பவார் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றுவிட்டார். சோதனைகளுக்கு பயந்துதான் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டார். இன்று சிவசேனா கட்சியையே தாக்கரே குடும்பத்திடம் இருந்து பிடுங்கி ஏக்நாத் ஷிண்டேவிடம் கொடுத்துவிட்டார்கள். பாஜகவில் இணைந்த பிறகு சோதனை குறித்து பயமே இல்லை என்று சிலர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடமே சொன்னார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 270-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளனர். இவர்களை பாஜகவில் இணைப்பதற்காக அக்கட்சி சுமார் 2,000 கோடி ரூபாய் முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவிட்டிருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ஆனால் இன்றுவரை பாஜக தரப்பு அக்குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கவில்லை. பெரு நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை வாரிச் சுருட்டுவதற்காக, தேர்தல் பத்திரங்கள் என்னும் மோசடி முறையை சட்டப்பூர்வமாக்கிய கட்சி பாஜக.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என எல்லா மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடியது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் என பாஜகவினர் கடந்த 6 மாதங்களில் சிக்காத வழக்குகளே இல்லை. ஆரூத்ரா நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் கூட பாஜகவில் இருந்தவர்கள் சிக்கியியிருக்கிறார்கள். அண்ணாமலையோடு நெருக்கமாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆரூத்ரா வழக்குக்கு அஞ்சி எந்த நாட்டில் தலைமறைவாகியிருக்கிறார் என்றே தெரியவில்லை.
ஆனால் பாஜகவினர் மீதான பணமோசடி குற்றச்சாட்டுக்களோ, ஊழல் குற்றச்சாட்டுக்களோ விசாரணை அமைப்புகளுக்கு தெரிவதே இல்லை. சஞ்சய் குமார் மிஸ்ராக்களுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. எதிர்க்கட்சியினர் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் அரசியலுக்காக ஒன்றிய பாஜக அரசு பழிவாங்குகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. ஒருவேளை எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை நடந்தது போல, கைது நடவடிக்கைகள் நடந்ததைப் போல பாஜகவினர் வீடுகளிலும் நடந்திருக்கிறது என குறைந்தபட்சம் 10 பேரையாவது அவர்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. தன்னாட்சி அமைப்புகளின் முதுகுத்தண்டை நொடித்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறது பாஜக.
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி அதுதான் ராமராஜ்ஜியம், அந்த கனவை நோக்கி பாஜக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையம், வாய்ப்புள்ள இடங்களில் நீதித்துறையையும் கூட பயன்படுத்திக்கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தங்களில் ஊறித் திளைத்தவர்களை அதிகார மையங்களில் நிரப்பி, தங்களுக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்கிறது. அதனால்தான் சஞ்சய் குமார் மிஸ்ராவை உச்சநீதிமன்றம் வீட்டுக்கு அனுப்பிவைக்க சொன்னதை அமித் ஷா-வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாசிச பாஜகவை வீழ்த்துவது ஒன்றே மக்களுக்கான உரிமைகளைத் தக்க வைக்கும், மக்களுக்கான உரிமைகளுக்காக போராடுபவர்களையும் தக்க வைக்கும். ஊழல்தான் பிரச்னை என்றால் கூட, அதிலும் பாஜகவை விட மிகப்பெரிய ஊழல் கட்சி இந்த நாட்டில் இருக்காது. ஊழலை சட்டப்பூர்வமாகச் செய்யும் கட்சி பாஜக. பாஜகவின் ஊழல் ஒழிப்பு என்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாக மட்டுமே இருக்கிறது. – ர.பிரகாசு
பெரியார் முழக்கம் 20072023