திருப்பூரில் ஜாதிவெறியைக் கண்டித்துக் கழகம் மறியல்
திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிரி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சத்துணவு சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமைக்கு எதிராகக் களமிறங்கின.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளை யத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருமலை கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சமைக்க தடை விதிக்கும் சாதிவெறி கும்பலை கைது செய்யக் கோரியும் சத்துணவு ஊழியர் அந்த அரசு பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய மற்றும் தோழமைகள் இயக்கங்கள் சார்பில் அந்த பள்ளி அருகே உள்ள சேவூர் நால்ரோட்டில் சாலை மறியல் நடைபெற்றது.
இதையடுத்து மாவட்ட உதவி ஆட்சித் தலைவர் ஆதித் திராவிடர் நலத்துறை அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதில் சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் அதே பள்ளியில் பணியாற்றவும் அவர் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்த சாதிவெறி கும்பல் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்கவும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர், கல்விஅதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வும் கோரிக்கை வைக்கப்பட்டது
அந்த கோரிக்கையை ஏற்பதாக மாவட்ட உதவி ஆட்சித் தலைவர் உறுதியளித்ததால் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர்கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர்பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன.
பெரியார் முழக்கம் 26072018 இதழ்