பொள்ளாச்சியில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம்
பொள்ளாச்சி பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்புதூரில் அருள்ஜோதி உணவு விடுதி அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் ஜூலை 15, 2018 அன்று நடந்தது. 84 பேர் பயிலரங்கில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பெண்கள். பயிற்சியாளர்கள் அனைவரும் புதிதாக பெரியாரியலை நோக்கி வரும் இளைஞர்கள்.
பயிலரங்கைத் தொடங்கி வைத்து, மூத்த கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் உரையாற்றினார்.
தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். 2 மணி நேரம் வகுப்பு நடந்தது. மதிய உணவைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, ‘பயிற்சி முகாம் நோக்கம்’ குறித்து விரிவாகப் பேசினார்.
தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார். சுல்லிமேடு காடுப் பகுதியிலிருந்து பெரியாரியல் நோக்கி வந்துள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் பயிற்சி முகாமில் பங்கேற்று பெரியாரியல் கருத்துகளைக் கேட்டது குறிப்பிடத் தக்கது.
பழங்குடி மாணவிகள், பெரியார் குறித்த பாடல்களைச் சிறப்பாகப் பாடினர். பயிற்சி முகாம் நடைபெறு வதற்கு உந்து சக்தியாக இருந்து தனது துணைவரின் பழங்குடிச் சமுதாயத் தினரிடம் பெரியாரியலைப் பரப்பி வரும் வினோதினி நன்றி கூறினார்.
கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மூத்த கழகத் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நிகழ்வில் பங்கேற்றனர். பொள்ளாச்சி பகுதி கழகத் தோழர்கள் ஒரு நாள் பயிற்சி முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்தப் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மடத்துக்குளம் மோகன் நிகழ்வில் அறிவித்தார். முகாம் மிகுந்த பயன் தந்ததாக பயிற்சியாளர்கள் பலரும் கூறினர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 19072018 இதழ்