காவிக் கூட்டத்தின் புளுகுக்கு மறுப்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா?
மணிப்பூர் பல்கலைக்கழகத்தில், அறிவியல் மாநாட்டின் தொடக்கவிழாவில் உரையாற்றிய மத்திய அறிவியல் – தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அண்மையில் காலமான உலகப்புகழ் பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பெருமையைப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இ=எம்சி ஸ்கொயர் என்ற சமன்பாட்டைக் காட்டிலும் உன்னதமான அறிவியல் கோட்பாடுகள் இந்திய வேதங்களில் இருந்திருக்கின்றன,” என்று சொல்லியிருப்பதாகக் கூறி, அரங்கில் கூடியிருந்த அறிவியலாளர்களை அசர வைத்தார். விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், அவர் பேசியதற்கு ஆதாரம் தர இயலுமா, ஸ்டீபன் ஹாக்கிங் எங்கே எப்போது அப்படிச் சொன்னார் என்று தெரிவிக்க முடியுமா என்று கேட்டார்கள். “அதைத் தேடுவது உங்கள் வேலை. தேடுங்கள், உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் பிறகு நான் ஆதாரம் தருகிறேன்,” என்று கூறி நழுவினார் அமைச்சர்.
ஊடகவியலாளர்கள் உடனே தேடலில் இறங்கினார்கள். அதில், ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் ஒரு சமூக ஊடகப் பக்கம் இருக்கிறது, அதிலே அவர் இப்படிச் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது என்று தெரியவந்தது. தொடர்ந்து தேடியபோது கிடைத்த அடுத்த தகவல், அந்த சமூக ஊடகப் பக்கம் ஹாக்கிங் பெயரால் பதிவேற்றப்பட்டு வந்த ஒரு போலியான பக்கம்! யாரோ ஒரு ஹரி என்பவர் அந்தப் போலிப்பக்கத்தைக் கையாண்டுவந்திருக்கிறார். போலிப் பக்கத்திற்கான இணைப்பு அடையாளம் ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ என்று உள்ளது. உண்மையான இணைப்பு அடையாளமோ ‘ஸ்டீபன் ஹாக்கிங் ஸ்டீபன் ஹாக்கிங் என்பதையும் ஊடகவியலாளர்கள் வெள்ளியன்று மாலையே கண்டுபிடித்து விட்டார்கள்.
போலிப் பக்கத்தில், சிவராம் பாபு என்ற வேத வல்லுநர் ஒருவர் 2011ல் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்த ஹாக்கிங், வேதத்தில் ஐன்ஸ்டீனின் சமன்பாட்டைக் காட்டிலும் மேலான அறிவியல் கோட்பாடுகள் இருப்பதாகத் தானே கூறுவது போலப் பதிவாகியுள்ளது.
சிவராம் பாபு பின்னர் ஹாக்கிங்குக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பித் தனது நன்றியைத் தெரிவித்து, இன்னொரு புத்தகம் அனுப்புவதாகவும் அதனைப் படித்துவிட்டுக் கருத்துக்கூறுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்து ஸ்டீபன் ஹாக்கிங் அலுவலகப் பணியாளர் அனுப்பிய மின்னஞ்சலில், ஹாக்கிங்குக்கு இப்படி நிறைய ஆவணங்கள் வந்து குவிவதால் அவற்றையெல்லாம் படித்துக் கருத்துச் சொல்வது இயலாத செயல் என பணிவோடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது!
ஆக வேதம் பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் எதுவும் சொல்லவில்லை. ஆனால், 2001ல் புதுதில்லிக்கு வந்த ஹாக்கிங், அங்கே தனது கணினி உதவிக்குரலில் நிகழ்த்திய உரையில், “பெரும்பாலான அறிவிய லாளர்கள் சோதிடத்தை நம்பாததற்குக் காரணம் என்னவென்றால், பரிசோதனை அடிப்படையில் நிறுவப்பட்ட நமது கோட்பாடுகளோடு அது ஒத்துப்போகவில்லை என்பதேயாகும்” என்று தெளிவாகக் கூறினார்.
‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற தமது புத்தகத்தின் முதல் பாகத்தின் முடிவில், ”பேரண்டம் குறித்த எனது ஆராய்ச்சியின் நோக்கம் கடவுளின் மனசை அறிவதே,” என்று கூறி பலரையும் திகைக்க வைத்து, இரண்டாம் பாகத்தின் நிறைவாக, ”இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும் இப் பேரண்டத்தைப் படைக்கக் கடவுள் என்றொருவர் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று காட்டுகின்றன,” என்று தெளிவுபடுத்தியவர் ஹாக்கிங். அவர் பெயரால் ஒரு சமூக ஊடகப் பக்கத்தை நடத்தியது மோசடி என்றால், அறிவியல் மாநாட்டில் அவர் பெயரை அமைச்சர் இப்படிப் பயன் படுத்தியதை என்னவென்பது?
பெரியார் முழக்கம் 22032018 இதழ்