கழகத் தோழர்கள் நேரில் ஆய்வு விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் திருகோயிலூர் போகும் வழியில் அரகண்டநல்லூரை அடுத்து உள்ள வலதுபுரத்தில் வெள்ளம் புத்தூர் கிராமம், விழுப்புரத்திலிருந்து 56 கிமீ தூரத்தில் உள்ளது .அங்கே தலித் மக்கள் 130 குடும்பங்கள் உள்ளனர். வன்னியர் சமூகம் நாயக்கர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் மலைவாழ் நரிக் குறவர்கள் 300 குடும்பங்கள் வசிக் கிறார்கள்.
சம்பவம் 21-02-2018 அன்று ஏழுமலை (மறைவு) மனைவி ஆராயி அவர் மகன்கள் பாண்டிதுரை வயது 26, சரத்குமார் வயது 22, விஜி வயது 19, இவர்கள் மூவரும் பெங்களூரில் வேலை செய்து வந்தனர்.
அஞ்சலட்சி வயது 17 திருப்பூரில் வேலைசெய்து வந்தவருக்கு 23-02-18 அன்றுதான் தகவல் தெரிவித்துள்ளனர். தனம் 13 எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமயன் வயது 9 நான்காம் வகுப்பு.
அன்று இரவு ஆராயி தனம் சமயன் கடுமையாக தாக்கப்பட்டு வியாழன் விடியற்காலை 22-02-18 அன்று பக்கத்து வீட்டில் உள்ள தனம் உடன்படித்த சிறுமி கதவை திறந்து பார்த்து பயந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மற்றவர்கள் பார்த்துள்ளனர். பிறகு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தனம் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று புரியாதவர்களாக அனைவரும் சொல் கிறார்கள். இந்த சம்பவத்தை கேள்விப் பட்டவுடன் அப்பகுதியை சேர்ந்த தலித் அல்லாத மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்த்து இப்படி நடந்துவிட்டதே என்று வேதனைப்பட்டதாக சொல் கிறார்கள் தலித் மக்கள். அங்குள்ள தலித் மக்களுக்கும் வன்னியர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்ததில்லை என்கிறார்கள்.
இதுபோன்ற மர்மமான முறையில் அப்பகுதி நரிக்குறவர் பெண் மீதும் வன்னியர் சமூக பெண்மீதும் இதுபோன்ற தாக்குல்கள் நடத்தி பாலியல் வன்முறை நடந்ததாக சொல்கிறார்கள் .
ஆராயி குடும்பம் அவர் கணவர் ஏழுமலை உயிருடன் இருக்கும்போது 8 , 9 ஆண்டுகளுக்கும் முன் அவர்கள் வைத்திருந்த 14 சென்ட் நிலத்தை அவர்கள் வீட்டிற்கு எதிரில் உள்ள நிலத்துக்காரார் தேவனூரை சேர்ந்த வன்னியர் சமூகம் ராஜேந்திரனிடம் விற்று நான்கு சென்ட் எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்கள். ஆனால் அதற்கான பத்திரமோ ஆதாரத்தையோ ஆராயி குடும்பத்தார் வைத்திருக்கவில்லை. வாய்பேச்சாக கூறி வந்துள்ளார். இவை இப்படி இருக்க ராஜேந்திரன் வயது 55. ஆராயிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆராயி அவரை திட்டியுள்ளார். அவருடைய சிறிய மகள் தனத்திற்கு சோப்பு ஷேம்புகள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ஒருமுறை ஆராயி மருமகளிடம் மகாலட்சுமி வழியில் சந்தித்து செல்போன் நெம்பரை கேட் டுள்ளார். அப்போது அவரை திட்டியுள்ளார். ஆராயி மகள் அஞ்ச லட்சுமியிடம் வீட்டிற்கு உள்ளே வந்து தண்ணீர் கேட்டுள்ளார் . ஆராயின் பக்கத்து வீட்டு பெண்ணிடமும் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் இவர்தான் வந்தாரா? அந்த சம்பவத்தில் தொடர்புடையவரா? என்பதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். அவர் செல்வாக்கான நபர் என்று சொல்லி அச்சப்படுகிறார்கள். மூன்று பேரையும் இந்த தனி நபர் அப்படி செய்திருப்பாரா என்று தெரியவில்லை. அரகண்ட நல்லூர் காவல்நிலையத்திற்கு சென்று திராவிடர் விடுதலைக் கழகத்திலிருந்து வருகிறோம் என்றோம். உதவி ஆய்வாளர் சிவக் குமாரிடம் கேட்டபோது தலித் இளைஞர் களை நான்கு பேரை நான்கு நாட்களாக வைத்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று சொன்னோம். அவர்களை நாளைக்கு விட்டு விடுகிறோம் என்றார்கள்.
ராஜேந்திரனை ஏன் இதுவரை நீங்கள் அழைத்து வந்து விசாரிக்கவில்லை என்றோம். அவருக்கு இதில் தொடர்பில்லை என்றார். ஏற்கனவே அவர் அந்த குடும்பத்து பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித் துள்ளார் என்றோம். நான் அவரை மீண்டும் அழைத்து விசாரிக்கிறேன் என்றார். ஆய்வாளர் எங்கே என்று கேட்டோம். வெளியில் சென்றுள்ளார் என்றார் டி.எஸ்பி. இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தாரா என்றோம். இல்லை மோடி வருகைக்கு போய்விட்டார், இனிமேல்தான் செல்ல இருக்கிறார் என்றார்கள்.
மற்றபடி குற்றவாளிகள் குறித்து நேரடியான நபர்கள் யார் என்று அடையாளம் காணமுடியாததாக உள்ளது என்றார். இன்று மாலை 4 மணியளவில் சமயன் உடல் அடக்கம்செய்யப்பட்டது. தனம் ஆராயி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அந்த பகுதி இளைஞர்கள் போதிய அரசியல் படுத்தப்படாதவர்களாகவே உள்ளனர். இப்போது தான் முதல் தலைமுறை கல்லூரி சென்று படித்து வருகிறார்கள்; தெரு விளக்கு எரியாத நிலையிலே இருந்துள்ளது; அதனாலே அன்றைக்கு யார் வந்தார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர். அண்மையில் இந்த சம்பவத்திற்குப் பிறகு தெருவிளக்கை பொருத்தியுள்ளனர் .
மிகக் கொடுரமாக நடந்த இந்த வன் முறை நடத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். விசாரணையை சி.பி.அய்க்கு மாற்ற வேண்டும். மருத்துவமனையில் இருப்ப வருக்கு உயரிய சிகிகிச்சையை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அந்த பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் பூஆ.இளை யரசன் மற்றும் விஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி ஆகியோர் 25.02.18 அன்று மதியம் 2 மணியவில் இருந்து மாலை 6 மணி வரை அங்கிருந்து சமயனின் உடல் இறுதி அடக்கம் முடித்து விட்டு அந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்துள்ளனர்.
பெரியார் முழக்கம் 08032018 இதழ்