பட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்
வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததும் இதே அமர்வுதான்!
பட்டியலினப் பாதுகாப்புச் சட்டத்தைத் தளர்வுறச் செய்த உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஏப்.12, 2018இல் சென்னையில் மருத்துவர் எழிலன் தலைமையில் இளைஞர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்த்திய உரை:
பட்டியல் இன மக்களுக்கும் பழங்குடி யினருக்கும் ஒரே பாதுகாப்புக் கவசமாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது உச்சநீதிமன்றம். சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தைக் கூறி சட்டம் தந்த பாதுகாப்புப் பிரிவுகளை தகர்த்து, உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வே சட்டத்தை மாற்றி எழுதிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப மாற்றி எழுதிக் கொள்ள முடிகிறது.
கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு துரோகத்தை செய்துள்ள நீதிபதிகள் உதய்உமேஷ் லலித் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் – இருவருமே பார்ப்பனர்கள். இந்தியாவின் அதிகார மய்யமான உச்சநீதிமன்றத்தில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர்கூட நீதிபதியாக இல்லை. 55 சதவீத நீதிபதிகள் பார்ப்பனர்கள். ஒரே ஒரு பெண் நீதிபதி. அவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்.
இப்போது அமுலிலுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டம் கொண்டு வரப்பட்டாலும் சட்டத்துக்கான நெறிமுறைககளை உருவாக்காமல் பார்ப்பன தலித் விரோத அதிகார வர்க்கம்
6 ஆண்டுகாலம் இழுத்தடித்தது. 1995இல் தான் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, சட்டம் அமுலுக்கு வந்தது. 2015இல் சட்டம் மேலும் வலிமையாக்கப் பட்டது. வன்கொடுமைகள் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட்டன. கட்டாயப்படுத்தி மொட்டை அடித்தல், செருப்பு மாலை அணிவித்தல், பாசன வசதிகளைத் தடுத்து நிறுத்துதல், கையினால் சாக்கடை-மலம் எடுக்க அனுமதித்தல், கோயிலுக்கு ‘தேவதாசி’களாக காணிக்கையாக்குதல், பில்லி சூன்யம் வைத்ததாகக் கூறி சமூகப் புறக்கணிப்பு செய்தல் போன்றவைகளும் வன்கொடுமைகளே என்று சட்டம் மேலும் வலிமையாக்கப்பட்டது. ஆனாலும் சட்டத்தை நிறைவேற்றும் காவல்துறை, அதிகார அமைப்புகளில் படிந்து நிற்கும் ஜாதிய உணர்வுகளால் இந்த சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை. வன்கொடுமைக்கு உள்ளாகும் பட்டியல் – பழங்குடியினப் பிரிவினரில் 75 சதவீதம் பேர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சமூக மிரட்டலுக்கு பயந்து நீதி கேட்டுப் போராடுவதற்கே முன்வருவது இல்லை. மனித உரிமை இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் முன்முயற்சி எடுத்து நடத்தும் வழக்குகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.
இப்போது இந்த இரண்டு நீதிபதிகள் முன் வந்துள்ள வழக்கு என்ன? மகாரஷ்டிரா மாநிலத்தில் ‘காரத்’ மருந்தியல் கல்லூரியில் பணியாற்றிய பாஸ்கர் கெய்க் வார்ட் என்ற தலித் ஊழியர் பற்றி அவருக்கான இரகசியக் குறிப்பேட்டில் கல்லூரி முதல்வரும் பேராசிரியரும் அவரைப் பற்றிய மோசமான எதிர்காலத்தைப் பாழாக்குகிற கருத்துகளை எழுதி இருந்தனர். இவர்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, உயர்அதிகாரியான மகாஜன் என்பவரிடம் பாஸ்கர் கெய்க்வாட் அனுமதி கேட்டார். மகாஜன் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். பிறகு மகாஜன் மீதே தலித் ஊழியர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி மகாஜன் மகாராஷ்டிரா உயர்நீதி மன்றத்தை அணுகினார். மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் மகாஜன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்தைக் கூறி அந்த சட்டத்தையே இரத்து செய்துவிட முடியாது (கூhந நகேடிசஉநஅநவே டிச iஅயீடநஅநவேயவiடிn டிக வாந ஹஉவ உடிரடன nடிவ நெ வாறயசவநன அநசநடல நெஉயரளந வாநசந றயள ய யீடிளளibடைவைல டிக வாந டயற நெiபே யரௌநன) என்றும் கருத்து தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து உயர் அதிகாரி மகாஜன் (தொழில்நுட்பத் துறை இயக்குனர், பிறகு ஓய்வு பெற்றுவிட்டார்) உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 18ஆவது பிரிவு தந்த பாதுகாப்பை நீக்கம் செய்துவிட்டது. அதாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டால் முன் ஜாமீன் பெற முடியாது. இப்போது உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கலாம் என்று கூறிவிட்டது. அத்துடன் இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியரை அவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மேலதிகாரியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும்; மேலதிகாரி ஒப்புதல் தர மறுத்தால் கைது செய்ய முடியாது. அரசுப் பணியாளராக இல்லாத ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் பதிவானால் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒப்புதல் தந்தால்தான் கைது செய்ய முடியும். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பே புகார் உண்மையானதா? அல்லது முறைகேடாக தூண்டப்பட்டு தரப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, உண்மை என்று உறுதி செய்தால் மட்டுமே முதல் தகவல் அறிக்கையையே பதிய வேண்டும் – என்பது தான் இப்போது உச்சநீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு.
‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது; தீண்டாமை சட்டப்படி குற்றம்” என்று அரசியல் சட்டத்தின் 17வது பிரிவு தீண்டாமை ஒழிப்பை அடிப்படை உரிமையாக்கியிருக்கிறது. இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாக்கவே 1989ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. இந்தச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது தான் உச்சநீதிமன்றத்தின் கடமை. ஆனால் உச்சநீதி மன்றம் சட்டத்தையே மாற்றி எழுதிக் கொண்டிருக் கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மகாஜன் கோரிக்கையே தன் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான். சட்டத்தை அவர் கேள்வி கேட்கவில்லை. உச்சநீதிமன்றமோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே கேள்விக் குள்ளாக்கியிருக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கு உண்மை யானதா அல்லது பொய்யாக புனையப்பட்டதா என்பதை விசாரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்குத்தான் உண்டு. அந்த உரிமையை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே காவல்துறைக்கு வழங்கிவிட்டது உச்சநீதி மன்றம்.
ஜாதிய உணர்வுகள் தலைவிரித்தாடும் காவல்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றம் தங்களுக்கு வாரிக் கொடுத்துள்ள இந்த உரிமையை எப்படிப் பயன் படுத்துவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.
லலித் மற்றும் கோயல் என்ற இந்த இரண்டு நீதிபதிகளின் அதே அமர்வுதான் கடந்த ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கியது. (அர்னேஷ் குமார் எதிர் பீகார் அரசு) வரதட்சணை தடுப்புச் சட்டமான 498(ஏ)இன் கீழ் வழக்குகளை ‘எந்திரத்தனமாக’ப் பதிவு செய்யக் கூடாது. இந்தச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று இதே அமர்வு அப்போதும் கூறியது.
இந்த இரண்டு நீதிபதிகளுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள். மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ‘கொலிஜியம்’ வழங்கிய பரிந்துரையை நிராகரித்து, இந்த இரண்டு நீதிபதிகளையும் மோடி ஆட்சி பரிந்துரைத்தது. நீதிபதி லலித், பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா மீதான போலி என் கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக வழக்காடியவர். 2ஜி வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். மக்கள் சேவை செய்து வந்த மருத்துவர் பினாயக்சென், தேசத் துரோக வழக்கில் கைது முறைக்கேடாக செய்யப்பட்டபோது, அவருக்குப் பிணை வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதாடுவதற்கு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், இந்த நீதிபதி லலித்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கக் கூடாது என்பதற்கான அழுத்தமான வாதங்களையும் முன் வைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டு மத்திய சமூகநலத் துறை அமைச்சகம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு அந்தச் சட்டத்திலே பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்ததை இப்போது உச்சநீதி மன்றம் தனது தீர்ப்புக்கு சாதகமாக எடுத்துக் காட்டி யிருக்கிறது. சமூக நலத் துறையின் இந்த பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்கவில்லை. நாடாளுமன்ற நிலைக் குழு நிராகரித்த ஒரு கருத்தை உச்சநீதி மன்ற நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிலைநாட்ட நீதிமன்றம் முறைகேடாக செயல்பட் டிருக்கிறது. உண்மையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் உரிமை சமூக நலத் துறைக்குக் கிடையாது. உள்துறை அமைச்சகம் தான் கருத்து தெரிவிக்க முடியும்.
ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், மண்டல் பரிந்துரை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி யவரும், 2015 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விரிவாக்கத்துக்கான வரைவுகளைத் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றியவருமான பி.எஸ். கிருஷ்ணன், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலோட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வந்துவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் – தலித் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம். சமூகத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, வலிமையற்ற சமூகமாக உழலும் சமூகத்துக்கு இந்த சட்டம் தரும் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்யும் வழக்குகள் எல்லாவற்றையுமே பொய்யான வழக்குகள் என்று கூறிட முடியுமா? கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலையா கிறார்கள். அதற்காகக் கொலையே நடக்கவில்லை என்று கூற முடியுமா?” என்று கேட்டுள்ளார் பி.எஸ்.கிருஷ்ணன்.
தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப் படும் வழக்குகளில் விசாரணைகள் திட்டமிட்டுக் கிடப்பில் போடப்படுகின்றன. நீண்ட கால தாமதத்தைப் பயன்படுத்தி வழக்குத் தொடுத்தவர்கள், சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் அச்சத்தின் பிடியில் வாழ வேண்டியிருக்கிறது. 1929ஆம் ஆண்டு சைமன் ஆணையம் இந்தியா வந்தபோது டாக்டர் அம்பேத்கர் அளித்த மனுவில் பட்டியல் இனமக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்வதை சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கண்ணோட்டத்தில் தான் 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் மேலும் கடுமையாக்கப்பட்டது என்றும் பி.எஸ். கிருஷ்ணன் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக் கிறார்.
ஜாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்ற அம்பேத்கர் இலட்சியத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்ம் தடையாக இருக்கிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது தான் இன்னும் கொடுமையானது. இடஒதுக்கீடு கொள்கையால்தான் ஜாதி மேலும் வளருகிறது என்று இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கூறும் அதே வாதத்தை இப்போது உச்சநீதிமன்றமும் பிரதிபலிக் கிறது. தலித் மக்கள் வாழ்வுரிமை உறுதியாக்கப்படும் போதுதான் அவர்கள் சமூக நீரோட்டத்திலே பயணிக்க முடியும். அத்தகைய காலம் வரும்போது தான் ஜாதி ஒழிப்பு என்ற இலக்கை நோக்கியே பயணிக்க முடியும் என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் ‘பார்ப்பனக் கண்ணாடி’ போட்டுக் கொண்டு தீர்ப்பு எழுதுகிறது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் ஏன் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதை நடைமுறை யிலிருந்தும் சமூக அதிகார மய்யங் களின் ஜாதியப் பார்வையிலிருந்தும் அணுகவேண்டிய நீதிமன்றம். ‘எந்திரத்தனமாக’ சட்டம் முறை கேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்? உண்மையில் சட்டம் எந்திரத்தனமாக செயல்படுகிறது என்பதைவிட நீதிமன்றம் தான் எந்திரத்தனமாக செயல்பட்டிருக் கிறது.
இந்தச் சட்டத்தின் பிரிவுகளேகூட இன்னும் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி எந்த இழப்பீடும் வழங்கப்படுவதே இல்லை. (உ.பி.யில் மாயாவதி முதல்வராக இருந்தபோது மட்டும் இதை நடை முறைப்படுத்தினார்)
வன்கொடுமைத் தடுப்புச் சட்டங் களின் கீழான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் பல மாநில ஆட்சிகள் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவே இல்லை. 2015ஆம் ஆண்டு சமூகநலத் துறையின் அறிக்கையின்படி பீகார், உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கருநாடகம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கனா மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படவே இல்லை.
உச்சநீதிமன்றம் வழங்கும் இத்தகைய தீர்ப்புகளுக்குப் பின்னால், மத்திய அரசின் கை இருக்கிறது என்ற சந்தேகத்தையும் நிராகரிக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. உச்சநீதி மன்றத்தில் அரசின் தலையீடு இருப்பதையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசின் தலையீட்டுக்குப் பணிந்து போவதையும் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி செலமேஸ்வர் வெளிப்படை யாகவே பேசி வருகிறார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வை தேர்வு செய்வதில் தலைமை நீதிபதி வெளிப்படையாக இல்லை என்று நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேட்டி அளித்தார்கள். இப்போது மீண்டும் செலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கும், உச்சநீதிமன்ற நீதிபதி களுக்கும் கடிதங்களை எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் ‘கொலிஜியம்’ (நீதிபதிகள் தேர்வுக் குழு) பரிந் துரைத்த நீதிபதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் தர மறுப்ப தோடு நீதித் துறையிலும் குறுக்கிட்டு உத்தரவு களைப் பிறப்பிக்கின்றன.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதி யாக்க ‘கொலிஜியம்’ பரிந்துரைத்தது. ஆனால் உத்தரகாண்ட் அரசை மத்திய அரசு கலைத்தபோது, கலைத்தது செல்லாது என்று தீர்ப்பளித்தார் என்ற காரணத்துக்காக ஜோசப் பதவி உயர்வை ஏற்பதற்கு சட்ட அமைச்சகம் மறுத்து வருகிறது.
கருநாடக மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக உள்ள கிருஷ்ணபட்டை மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ‘கொலிஜியம்’ இரண்டு முறை பரிந்துரைத்தும், அவர் நீதிபதியாக முடியாமல் மத்திய சட்ட அமைச்சகம் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இந்த நீதிபதி மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி, விசாரணை நடத்த மத்திய சட்ட அமைச்சகம் கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரிக்கு உத்தரவிடு கிறது. தலைமை நீதிபதியும் உத்தரவுக்கு கீழ் பணிந்து செயல்படுகிறார். நீதிபதிகள் உச்சநீதிமன்றக் கட்டுப் பாட்டின்கீழ் இருக்கும்போது அரசு எப்படி நேரடியாக உத்தரவிடலாம் என்று நீதிபதி செலமேஸ்வர் கேட் கிறார். இத்தனைக்கும் கிருஷ்ணபட் மீதான புகார்களை உச்சநீதிமன்றம் ஏற்கனவே விசாரித்து அவர் மீதான புகார்கள் உண்மையல்ல என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒரு வருடம் வரை வெளியிடாமல் நிறுத்தியது ஏன் என்றும் தலைமை நீதிபதியிடம் கேட்கிறார் செலமேஸ்வர்.
உச்சநீதிமன்றமே அதற்குரிய சுதந்திரத்துடன் செயல்படாமல் மத்திய அரசுப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழங்கிய தீர்ப்பையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது என்றார் விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் 19042018 இதழ்