நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?
இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் கூறியதாவது:
இரண்டு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். முதலில், இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதால், இந்தியாவின் பிரதான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில்தான் உற்பத்தியா கின்றன. இதில் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்ட உள்ளனர். அதற்கு 6 இலட்சம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்க்க உள்ளனர். இது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்துக்கு தேர்வு செய்துள்ள இடத்துக்கு அருகாமையில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட 12 அணைகள் உள்ளன. பாறைகள் தகர்க்கப்படும்போது, அணைகள் சேதமடையும் அபாயம் உள்ளது.
இத்திட்டம் பற்றி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆய்வுக்கூடம் அமைக்க கட்டிட கட்டுமானம் என்ற பெயரில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதற்கு மக்கள் கருத்து கேட்கத் தேவையில்லை. மக்கள் கருத்து கேட்காமல் எப்படி இதை செயல் படுத்த முடியும்? அனுமதி கொடுக்கும் முன்பு நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். பாறைகளை உடைப்பதால் சுற்றுச் சூழலில் ஏற் படும் தாக்கம் குறித்து இதுநாள் வரை ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. சுற்றுச் சூழல் பிரச்சினை, விவசாயம், மக்கள் பாதிப்பு, காற்று மாசுபாடு தொடர்பான எந்த ஆய்வும் மேற் கொள்ளவில்லை.
2ஆவது காரணமானது, அடிப்படையில் இந்தத் திட்டத்தின் மீது எழும் கேள்விகள் ஆகும். திட்ட அறிக்கையில் இயற்கை நியூட்ரினோவை ஆய்வு செய்வது முதல் நிலை. 2ஆவது நிலை, செயற்கை நியூட்ரினோக்களை, அமெரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு அனுப்பி, சோதனை செய்வது.
இதுநாள் வரை சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் செயற்கை நியூட்ரினோ கதிர்களை அனுப்பித் தான் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு செயற்கை நியூட்ரினோ கதிர்களை அனுப்பி சோதனை செய்ய உள்ளனர். செயற்கை நியூட்ரினோக்களை அனுப்பும்போது உருவாகும் கதிர்வீச்சு, அதன் மூலம் என்ன நிகழும் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பல ஒப்பந்தங்கள் போடப் பட்டு உள்ளன. அதில் கடந்த 2010ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில், தீவிரவாதிகள் அணு ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருந்தால் அதை கண்டுபிடித்து, செயல் இழக்கச் செய்யவோ, வெடிக்க வைக்கவோ இந்த நியூட்ரினோ ஆய்வால் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த 2ஆவது பகுதி தான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பேரழிவு ஏற்படும் அச்சம் உள்ளது.
அவசர அவசரமாக இந்தத் திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு துடிக்கிறது. மக்களிடம் கருத்து கேட்காமல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடுகள் செய்யாமல் செய்ய உள்ள ஆய்வை ஏற்க முடியாது.
பெரியார் முழக்கம் 12042018 இதழ்