பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி
ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை:
விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன்.
இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.
நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.
பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்!
பெரியார் என்பவர் கடவுள் சிலைகளை உடைப்பவர்!
பெரியார் நமக்கு சொல்லித்தந்த யாவற்றையும்
மறுப்பவர்,என்ற எதிர்மறையான புரிதலோடுதான்
இருக்கிறார்கள்.
அந்தப் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது
இதுதான்!
மதிப்பிற்குரியப் பெண்களே!
நாத்திகத்திற்காக மட்டுமே
இங்கர்சால் எனும் புரட்சியாளர் தோன்றினார்!
வர்க்க, பொருளாதார அடிப்படையில்தான் பெண்ணியத்தை
அணுகினார் தோழர் காரல் மார்க்ஸ்.
தொழிலார் நலன்
கல்வியின் நோக்கம்
பாலின சமத்துவம்
பொருளாதாரப் புரட்சி
சாதியொழிப்பு… மத மறுப்பு
என ஒவ்வொரு புரட்சியாளர், ஒவ்வொரு புரட்சிக்காய் போராடியபோது, இவையனைத்திற்கும் வெகுண்டெழுந்து களத்தில் நின்று போரிட்டு வென்ற ஒரே புரட்சியாளர் இவ்வுலகத்தில் என் தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே!
என் இனிய பெண்ணினமே!
நீ விலக்காகி வலியில் துடிக்கையில்…
தீட்டென்றுவெளியேத் தள்ளி…
தனித்தட்டு… தனிக்குவளை… தனிப் பாய் என்று
வீட்டுத் தீண்டாமையில்
உன்னை வெளியே விரட்டினார்களே!
விலங்கு போல் பாவித்து
நடத்தினார்களே!
அப்படியான உன்னை விரல் பிடித்து
வீட்டுக்குள் சேர்த்தது…
உன் சகோதரனல்ல!
உன் தந்தையுமல்ல!
உன் சகோதரியும் அல்ல!
ஏன்! உன் தாய்கூட அல்ல!
யாரைப் புரிதலில்லாமல் வெறுக்கிறாயோ…
யாரைப் பகுத்தறிவற்று ஒதுக்கி வைத்திருக்கிறாயோ….
அந்த ஈரோட்டுக் கிழவன்தான்
உன்னை வீடு சேர்த்தது.
அந்தக் கிழவன்தான் உன்னை
மனிதி ஆக்கியவன் ;
அந்தக் கிழவன்தான் சுயமரியாதையோடு
உன்னை இருக்கச் சொன்னவன்.
அந்தக் கிழவன்தான் இராணுவத்திலும்,
விமான ஓட்டியாகவும் ஆணுக்குச்
சமமாக நீ வரவேண்டுமென வியர்வை
சிந்தியவன். என் இனிய
பெண்ணினமே! சுயமரியாதை
இல்லாமல் உனக்கு விடுதலை இல்லை!
பெரியாரை தவிர்த்தால்… இம் மண்ணில் சுயமரியாதை
என்ற ஒன்றே இல்லை!
பெரியாரைப் படி! அதுதான் நம்மினத்தின் விடுதலைக்காய்
வைக்கப் போகிற முதல் அடி!
வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்!
பெரியார் முழக்கம் 11012018 இதழ்