‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, 2017 அக்டோபர் 26ஆம் நாள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் கடந்த 2017 டிசம்பர் 17ஆம் நாள் தூத்துக்குடி மூவிபுரம் முத்து மகாலில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன், தூத்துக்குடி வே.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு நினைவலைகளை, கழகத் தோழர்கள் செ. செல்லத்துரை, ச.கா. பாலசுப்பிரமணியன், குமரி மாவட்ட அமைப்பாளர் சேவியர் (எ) தமிழரசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் குறும்பை மாசிலாமணி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கண்ணதாசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச. தமிழன், சட்டக் கல்லூரி மாணவர் அர்ஜூன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டப் பொருளாளர் எம்.மைதீன்கனி, கிறித்துவர் வாழ்வுரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பணி சுந்தரி மைந்தன், தமிழ்ப் புலிகள் சார்பில் கத்தார் பாலு, திராவிடர் கழக சார்பில் தி.ப. பெரியாரடியான் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

அய்யா அம்புரோசு பேரன் புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதன்பின் தூத்துக்குடி பால். பிரபாகரன், அய்யா அம்புரோசுவின் அரசியல் பணி குறித்தும் அவரோடு பழகிய நினைவு களையும் சாதி ஒழிப்புக் களத்தில் அவர் ஆற்றிய பணியினையும் நினைவு கூர்ந்தார்.

சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா. அதியமான் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.  அவரது உரையில், அம்புரோசு அவர்களின் சாதி ஒழிப்புப் பணியினைக் கண்டு தான் மகிழ்ந்ததாகவும்,இதுதான் பெரியார் தொண்டனுக்கு அடையாளம் என்றும் புகழ்ந்துரைத்தார். அம்புரோசு அவர்களின் புதல்வன் அரசு, தனது தந்தையின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அம்புரோசுவின் நற்பண்புகளை யும், கழகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் குறிப்பிட்டு, அவர் விட்டுச் சென்ற பணியினை தொய்வின்றி செய்வதே உண்மையான நினைவேந்தல். அதனை தோழர்கள் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுததார். நிறைவாக ச. இரவிசங்கர் நன்றி கூறினார்.

நிகழ்வில் ஆழ்வை, கீழப்பாவூர், சூரங்குடி, கபாலி பாறை தோழர்களும், தூத்துக்குடி நகரம் மற்றும் குமரி தோழர்களும் அய்யா அம்புரோசு உறவினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.                                                          செய்தி : பால் பிரபாகரன்

பெரியார் முழக்கம் 04012018 இதழ்

You may also like...