ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது.

அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது.

ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன.

பெரியார் படத்துடன் அன்னை நாகம்மையார், பெரியாரின் சகோதரி கண்ணம்மாள், அன்னை மணியம்மையார், முத்துலட்சுமி (ரெட்டி) ஆகியோரின் படங்கள் அடங்கிய துணிப்பதாகை மேடைக்கு எழுச்சியூட்டியது.  4 மணியிலிருந்தே தோழர்கள் பெண்களும், ஆண்களுமாக கருஞ் சட்டையுடன் குவியத் தொடங்கினர். தோழமை அமைப்பினரும், பொது மக்களும் ஏராளமாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புரட்சிகரப் பாடல்கள், இடையிடையே தோழர்கள் உரை என்று நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சென்னிமலை கழகத் தோழர் கவிப்பிரியா வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு முழுமையாக பொறுப்பேற்று செயல்பட்டு மாநாட்டை வெற்றி மாநாடாக்கியதில் பெரும் பங்காற்றிய அரங்கம் பாளையம் மணிமேகலை தலைமை உரையாற்றினார். திருப்பூர் முத்துலட்சுமி, சங்கீதா முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, புரட்சிகர மாணவர் முன்னணியைச் சார்ந்த கண்மணி, பெரியாரியலாளர் ஓவியா, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். மாநாட்டுக்கு முன்னின்று உழைத்த இராசிபுரம் கழகத் தோழர் சுமதி நன்றி கூறினார்.

மாநாட்டில் நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதியின் முதல் தவணையாக கழகப் பொறுப்பாளர்கள் ரூ10,000/-த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். குமாரபாளையம் மு.கேப்டன் அண்ணாதுரை-பரிமளம் ஆகியோரின் மகள் ஈழக் கனிமலர், தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் தொகையை மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.

2017-12-16-photo-00002047 2017-12-16-photo-00002064 2017-12-16-photo-00002072 2017-12-16-photo-00002074 2017-12-16-photo-00002080 dsc_8964

பெரியார் முழக்கம் 21122017 இதழ்

You may also like...