நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள் சூலூரில் சூளுரைத்தது கழகம்
1957 நவம்பர் 26இல் தமிழ்நாடு முழுதும் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 6மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகிய பெரியார் இயக்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சூலூரில் கழகம் பொதுக் கூட்டம் நடத்தியது. போராட்ட வரலாறுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக விளக்கினார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர கழகம் சூளுரைத்தது.
கோவை மாவட்டம் சூலூரில் 26.11.2017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவைப் போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு பறையிசையைத் தொடர்ந்து, சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மடத்துக்குளம் மோகன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினர். உடுமலை கௌசல்யா நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மிக நீண்ட உரையினை ஆற்றினார். சற்றேறக்குறைய ஒன்றரை மணி நேரம் நீடித்த உரையில் தமிழக நீதிக்கட்சி ஆட்சியின் தொடக்கம், சமூக நீதி வரலாறு, அரசியல் சட்டத்தின் உருவாக்கம், அதன் மீதான புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு, பார்ப்பனர்களின் ஆதிக்கம், அரசியல் சட்டம் தமிழ்மக்களை இழிவாக குறிக்கும் பகுதிகள், அதை எரிக்க வேண்டிய காரணங்கள் ஆகியவற்றை விளக்கினார்.
சட்ட எரிப்புப் போராட்டத்தை நவ 3 ஆம் தேதி தந்தை பெரியார் அறிவித்தவுடன் அதை தடுக்கும் நோக்கில் எரிப்பவர்களுக்கு தண்டனை தர புதிய சட்டப்பிரிவை ஒரு வாரத்தில் உருவாக்கிய பின்னும் ஜாதி ஒழிப்பு வீரர்களின் உறுதி, திண்மை காரணமாய் ஏறத்தாழ 10000த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சட்டத்தை எரித்து கைதான வரலாறு, காவல்துறையாலும், உள்துறை அமைச்சராலும் அனைவரையும் கைது செய்ய முடியாத இயலாமை ஆகியவற்றிற்கிடையில் 4000த்திற்கும் மேற்பட்டோர் கைதாகி 3 மாதம் முதல் 2 வருடம் வரை சிறையேகிய வரலாற்றினை எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.
கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது பெய்த மழையில் கூட சிறு சலசலப்பில்லாமல் பொது மக்களும் தோழர்களும் அமர்ந்து உரையை கேட்டு வீரர்களின் தியாகத்தைப் போற்றினர். இறுதியில் தோழர் பாபு நன்றியுரை ஆற்றினார்.
செய்தி : விஜயகுமார்
பெரியார் முழக்கம் 30112017 இதழ்