மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
மோடி ஆட்சியின் அனைத்து செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது.
சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (ssun) – கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை.
இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய பாடத் திட்டம் கொண்டு வரும்பொழுது அரசு கவனிக்கும் என்றும் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.
வென்டி தோனிகர் (Wendy Doniger) எழுதிய ‘The Hindus-An Alternative History’ என்ற புத்தகம் தடை செய்யப்படுவதற்கும், டெல்லி பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய “முன்னூறு இராமாயணம்” என்ற கட்டுரையை நீக்கியதற்கும் இந்த அமைப்பின் பிரச்சாரம் முக்கிய காரணம்.
இந்த அமைப்பின் கருத்துக்களை ஆளும் பாரதீய ஜனதா கட்சி செவிமடுத்து கேட் கின்றது. முன்பெல்லாம் நமது கோரிக்கைகள் நிறைவேற நீதிமன்றம் செல்ல வேண்டி யிருந்தது. ஆனால் இப்பொழுது அரசு செவி மடுக்கின்றது என்கின்றார் இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அதுல் கோத்தாரி. முன்பிருந்த வாஜ்பாய் அரசைவிட இன்றைய அரசு ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து செயல்படுவதில் தடைகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆட்சி முறை மற்றும் கலாச்சாரத்தில் நேருவின் வழிமுறையை அகற்றிவிட்டு தனது தடத்தைப் பதிக்கவே மோடி முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர்.
ஆர்.எஸ்.எஸ். தனது திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசை இயக்கிக் கொண் டிருக்கிறது. கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு ஆறு குழுக்களை ஆர்.எஸ்.எஸ். நியமித்துள்ளது. அதன் உறுப்பினர்களாக பா.ஜ.க.வின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் பொதுச் செயலாளரான தத்தத்ரேய ஹோசபலே மற்றும் கிருஷ்ணா கோபால் ஆகியோர் அரசாங்கமும் இந்துத்துவாதிகளும் இணைந்து நடத்தும் பாசறைகளை ஒருங்கிணைக்கின்றனர்.
இந்த ஒருங்கிணைப்பு சந்திப்பில் கூறப்படும் சில கருத்துக்கள் உடனடியாக அமைச்சர் களின் மூலமாக நிறைவேற்றப்படுகின்றன. நிபந்தனைகளுக்கு ஒத்துப்போகும் சில கருத்துக்கள் உடனடியாக செயல்படுத்த முடியாது என்றாலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சாத்திய மில்லாத சில கருத்துகள் ஒதுக்கப்படு கின்றன.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். சமன்வே பைதக் என்ற பெயரில் ஒருங்கிணைப்பு சந்திப்பை நடத்தியது. நோக்கம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.ஆல் கௌரவிக்கப்படும் இந்து தலைவர்களுக்கு முக்கிய பதவிகளைப் பெற்றுத் தருவதே.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மும்பை யில் இராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். மஹாரானா பிரதாப், கௌத்தியா வைஷ்நவிசம் நிறுவனர் சைதன்ய மஹா பிரபு, ஜனசங்கின் தீனதயாள் உபாத்யாய ஆகியோரின் பிறந்த நாள்களை பண்பாட்டு அமைச்சகம் தற்போது கொண்டாடி வருகிறது.
பாரதிய சிக்சா மண்டல் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பு. ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலை கல்வி வரை உள்ள பாடத் திட்டங்களில் இந்திய அறிவு பாரம் பரியத்தோடு ஒத்துப் போகும் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந் துள்ளது. எங்களுடைய சில அறிவுரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்கிறார் இதன் இணை ஒருங்கிணைப்பு செயலாளர் முகுல கணித்கர். “முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டி பயிற்சி பட்டறைகளை இதுவரை 26 பல்கலைக்கழகங்களில் நடத்தியுள்ளோம். நாக்பூரில் நடந்த மறுமலர்ச்சிக்கான ஆராய்ச்சி என்ற மாநாட்டில் 55 (பல்கலைக்கழக) துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதன் மூலம் இந்திய அறிவு முறைமை முன்னெடுத்து செல்லப்படும்” என்கிறார் கணித்கர்.
நீதிமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் மற்றும் தொழிற்துறை சார்ந்த கல்லூரிகளிலும் வட்டார மொழிகளோடு இந்தியையும் திணிப்பதே அடுத்தக்கட்ட பணி என்கிறார் கோத்தாரி. பாரதிய சுரக்ஷh மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாம். தலித்களிலும் சிந்தனைவாதிகளை வளர்த் தெடுக்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் பெயர் குறிப்பிடும்படி முக்கியமானவர்கள் மிலிந்த் காம்ப்ளே என்பவர் இவர். தலித் இந்தியர் வர்த்தகப் பிரிவு நிறுவனர். மற்றொருவர் நரேந்திர ஜாதவ் – இவர் மத்திய அமைச்சர்.
பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் வலதுசாரி சிந்தனைகளை பரவலாக்கு கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ராவ் மாதவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் மகனான சௌர்யா டோவலும் இணைந்து ‘இந்தியா நிறுவனம்’ என்ற ஒன்றை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு, வெளி நாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினை களில் வலதுசாரி சிந்தனைகளை திணிப்பதில் இவர்கள் சூத்திரதாரிகளாக உருவெடுக் கின்றனர்.
“பல்கலைக்கழக மாணவர்கள் வட்டத்தில் வலதுசாரி சிந்தனைவாதிகளை உருவாக்கு வதற்கு, ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு குழுமமும், பாரத் நித்தி என்ற அமைப்பும் ஈடுபடுகிறது. சங்கல்ப் என்ற நிறுவனத்தின் வழியாக 1986லிருந்து இன்று வரை ஆயிரம் மாணவர்களை அரசு ஆட்சிப் பணிகளுக்காக பயிற்சி அளித்து அனுப்பியுள்ளோம்” என்கிறார் கணித்கர்.
பண்பாட்டு துறைகளிலும் ஆலோசனை குழுக்களிலும் இன்று வலதுசாரி சிந்தனை கொண்டவர்களையே காண முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்சின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பார்வை உடையவர்களே வரலாற்று ஆய்வு மய்யம், இந்திராகாந்தி தேசிய கலை பண்பாட்டு மய்யம், பிரச்சார் பாரதி தேசிய நினைவு காப்பகம், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு போன்ற அரசு துறைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தேசத்தின் பெயரால் இந்தியா காவிமயமாகிக் கொண் டிருக்கிறது. அதற்கான வேலை முழு மூச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(ஆதாரம் : The Week, December 4, 2016)
பெரியார் முழக்கம் 19012017 இதழ்