மோடிக்கு கருப்புக்கொடி ! கோவை சூலூரில் 24022017

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் !

நாள் : 24.02.2017 மாலை 4 மணிக்கு.
இடம் : சூலூர் விமானப்படை தளம் அருகில்.

மோடியே,
ஈஷா மய்யத்தின் கிரிமினல் நடவடிக்கைக்குத் துணைப் போகாதீர்! எனும் முழக்கத்துடன்பிப். 24இல் கோவையில் தோழர்கள் திரளுகிறார்கள்

கோவை வனப்பகுதியில் யானைகள், மிருகங்கள் வாழும் பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பி வரும் ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், புதிய கட்டுமானங்களைத் திறந்து வைக்க பிரதமர் மோடி பிப்.24 ஆம் தேதி வருகிறார். இதை எதிர்த்து கோவை வரும் மோடிக்கு பிப். 24ஆம் தேதி கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள், சுற்றுச் சூழல் மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துகின்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி போராட்டத்தில் பங்கேற்கிறார். தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் பல்வேறு முற்போக்கு சமுதாய இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் கோவை நோக்கி திரளுகிறார்கள். சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவுக்கு ஆட்சி அதிகார மய்யங்கள் ஆதரவாக இருந்து வருகின்றன.

அண்மையில் இவருக்கு மத்திய அரசு ‘பத்மவிஷன்’ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள ஈஷா மய்யத்தின் கட்டிட வளாகத்தில் 112 அடி ‘ஆதியோகி சிவன்’ சிலையை பிரதமரே திறந்து வைக்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு அரசு வழங்கிய பத்ம விபூஷன் விருதை திரும்பப் பெறக் கோரியும் இந்த கருப்புக் கொடிப் போராட்டம் நடைபெறுகிறது. ஜக்கி தனது இணையதளத்தில் மோடி வருகையை பதிவிட்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவ், யானைகளின் வழித்தடங்களை மறித்து, சட்ட விரோதமாக கட்டி வரும் கட்டிடங்களுக்கு எதிராக ஏற்கனவே உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் மோடி இந்தத் திறப்பு விழாவுக்கு வருவது நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். ஜக்கி வாசுதேவ், ஈஷா மய்யம் இருக்குமிடம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ‘இக்கரை பொல்லுவ பட்டி’ எனும் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதி. 1994இல் ஈஷா மய்யம் இங்கே 2913.34 சதுர அடி கட்டிடங்களை மட்டுமே கட்டியிருந்தது. இப்போது 4 இலட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்கு கட்டிடங்கள், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள், யோகா மண்டபங்கள், கார் நிறுத்தும் இடங்களை கட்டியிருக்கிறது.

வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘மலைத்தளப் பாதுகாப்புக் குழு’ (Hill Area Conservation Authority) என்ற அமைப்பின் ஒப்பதலைப் பெறவேண்டும். இந்தக்குழுவில் வனத்துறை அதிகாரிகள்,பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்டஆட்சியாளர்கள் மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் உறுப்பினர்களாகஇருக்கிறார்கள். இந்தக் குழுவின் ஒப்புதல், பிறகு வனத்துறையின் ஒப்புதலோடு தான் கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஜக்கி வாசுதேவ், உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதலை மட்டும் பெற்று மேற்குறிப்பிட்ட முக்கிய அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இத்தகைய கட்டிடங்களால் யானையின் வழித்தடங்கள் தடுக்கப் பட்டு, அவைகள் மனிதர்வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. ஈஷா மய்யம் இங்கு வந்த பிறகு யானைகள் மரணமும், யானைகளால் தாக்கப்பட்ட மனிதர்கள் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு வந்தது. (டி.என். கோதாவர்மன் திருமுல் பார்க் எதிர் இந்திய அரசு -2012 3S.C.C.277) அப்போது உச்சநீதிமன்றம் மிருகங்களின் வாழ்விடங்களை அபகரித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி வனத்துறை ஆளுநர், ஈஷா மய்ய கட்டிடங்களால் யானையின் வழித் தடங்கள் பாதிப்புக்குள்ளாவதையும் அதே ஆண்டில் மாவட்ட வனத்துறை அதிகாரி திருநாவுக்கரசு இந்த கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தும் ஆட்சியாளர்களோ ஜக்கியோ கண்டு கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் 14 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருந்தபோது 2012ஆம்ஆண்டில் ஈஷா மய்யத்துக்கு மட்டும் அன்றைய தமிழக ஆட்சி 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதற்கு தனி ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது. இதை எதிர்த்து 2012 அக்டோபர் முதல் தேதி பாபாநாசத்தில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஈஷா மய்யம் குழந்தைகளின் சித்திரவதைக் கூடாரமாக மாறி நிற்பதை எதிர்த்துஉயர்நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. ஈஷா மய்யத்தில்‘நல்லொழுக்கம், சமஸ்கிருதப் பயிற்சிக்காக’ தனது இரண்டு மகன்களை சேர்ந்திருந்தார், மதுரை திருப்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத் துறைக்காவலர். அவரது பெயர் மகேந்திரன். ஒரு மகனுக்கு ரூ.5 இலட்சம், மற்றொருமகனுக்கு ரூ. 7 இலட்சம் கட்டணமாக செலுத்தினார். இரண்டு பேரும் மனநலபாதிப்புக்கு உள்ளாகி விட்டனர். தனது மகனைப் போலவே பல சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் அவர்களை மீட்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந் துள்ளார்.

கோவை வடவள்ளிப் பகுதியைச் சார்ந்த காமராஜ் என்பவர், தன்னுடைய இரண்டு மகள்களுக்கு கட்டாயப்படுத்தி மொட்டையடிக்கப்பட்டு சன்யாசியாக்கப்பட்டுள்ளனர், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

குற்றப் பின்னணி 2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ஜக்கி வாசுதேவ் உரையாற்ற வருகிறார் என்பதை அறிந்து கழக சார்பில் எதிர்ப்பு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. அப்போது பெரியார் திராவிடர் கழகமாக, கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

அதில் இடம் பெற்றிருந்த தகவல்கள்:
• “40 ஆண்டுகளுக்கு முன் கோவைப் ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ்ப்புறத்தில் குதிரை வண்டிகள் நிறுத்துமிடத்தில் சமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ். இவருக்கு ‘ரிச்சர்டு’ என்ற ரவுடி மிகவும் உதவியாக இருந்தார். இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் பெண்ணின் கதி தெரியவில்லை. ரிச்சர்டு கொலை செய்யப்பட்டார். அதேபோல ஜக்கி தனதுசொந்த மனைவியையும் கொலை செய்து விட்டார் என்ற வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளபோது பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறையின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது” என்று அந்தத் துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like...