கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை: கைது
காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திரவிடர் விடுதலைக் கழகம், அக்.7ஆம் நாள் பகல் 11 மணியளவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. கழகத் தோழர்கள் 65 பேர் கைதானார்கள். ஒரே நாள் இடைவெளியில் இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்தனர்.
தியாகராயர் நகர், பா.ஜ.க. அலுவலகம் அருகே தோழர்கள் திரண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தன. “துரோகம் செய்யாதே! பா.ஜ.க. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! அன்று வழக்கைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது மோடி ஆட்சி. இன்று உச்சநீதிமன்றம் வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்தும் ஏற்க மறுக்கிறதுஅதே மோடி ஆட்சி.” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க.வின் துரோகங்களை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி தோழர்கள் முழக்கமிட்டனர். பா.ஜ.க. அலுவலகம் ஏன் முற்றுகையிடப்படுகிறது என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அவர் கூறியதாவது: “மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகம், பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முன் வந்திருக்கிறது. இந்தியா பல்வேறு மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு. மத்திய அரசு இந்த கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து செயல்பட வேண்டியது அதன் சட்டப்பூர்வ கடமை. ஆனால் மோடி ஆட்சி கூட்டாட்சி தத்துவத்தை தனது சொந்த கட்சியின் நலனுக்காக பலிகடாவாக்கியிருப்பதால் தான் பா.ஜ.க.விற்கு எதிராக நாங்கள் போராட்டக் களத்தை அமைத்துள்ளோம். கருநாடகத்தி லிருந்து மத்தியில் மூன்று பா.ஜ.க.வினர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். சதானந்த கவுடா, அனந்த குமார், ரமேஷ் ஜிகாஜி நகிஆகியோர் கன்னடர் உணர்வோடு தமிழக உரிமைகளை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தனது கட்சி அமைச்சர்களின் அழுத்தத்திற்கு பணிந்த மோடி ஆட்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று தேவ கவுடாவிடம் தொலைபேசியில் பேசி உறுதி தந்தார். அதன் பிறகு தேவகவுடா போராட்டத்தை கைவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் வாரியம் அமைக்க ஒப்புக் கொண்ட மோடி ஆட்சி, பிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்டுவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் அறிவித்தது. கருநாடகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபைக்கான தேர்தல் வரவிருக்கிறது. அங்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாலும், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு அதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதாலும் கட்சிக் கண்ணோட்டத்தோடு கன்னடர்களுக்கு ஆதரவான நிலையை ஒரு சார்பாக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக எடுத்திருப்பதால் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம்” என்று விடுதலை இராசேந்திரன் விளக்கினார்.
தோழர்கள் பா.ஜ.க. அலுவலகத்தை நோக்கி முழக்கங்களுடன் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தியாகராயர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணியளவில் கழகத் தோழர்கள் பலரும் உரையாற்றியப் பிறகு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், காவிரிப் பிரச்சினையின் வரலாற்றை விளக்கியும் கழகத்தின் செயல்பாடுகள் பெரியாரின் தனித்துவம் குறித்தும் ஒன்றரை மணி நேரம் பேசினார். கழகத் தோழர் அருள்தாசு பாடிய பாடல்கள், தோழர்களுக்கு எழுச்சியூட்டின. தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசு, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சுகுமார், ஜான் மண்டேலா உள்ளிட்ட 65 பேரும் 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தை யொட்டி பா.ஜ.க. அலுவலகத்தில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர்.
பெரியார் முழக்கம் 13102016 இதழ்