பெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்.
காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார்.
பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது.
- ஆனால், பெண்கள் மீதான இந்த கொடூரமானவன்முறைகள் அவர்கள் மீது திணிக்கப்படும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்த ‘ஒரு தலைக்காதல்’. பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை குறித்த பிரச்சினையாகும். காலம் காலமாக மதம், சம்பிரதாயம், ஜாதியப் பண்பாடு என்ற அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டு, சமூகத்தின் பொதுப் புத்தியில் ஆழமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடு. எனவே பெண்களுக்கு எதிரானவன்முறைகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆணாதிக்க சிந்தனை அதை உறுதிப்படுத்தும் சமூக கலாச்சாரங்களுக்கு எதிரான விழிப்புணர்வை கருத்துருவாக்கத்தை உருவாக்க வேண்டியது மிக அடிப்படையானதாகும். அத்தகைய ஆண் ஆதிக்க கருத்தியலை தகர்த்தெறிய வேண்டும் என்ற கருத்தை பா.ம.க. நிறுவனர் ஏற்றுக் கொள்கிறாரா? ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விழைகிறோம்.
- “காதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்பு திருமணம்தான் என்ற தவறான வழி காட்டுதலுமே இந்த வன்முறைகளுக்குக் காரணம்” என்று மருத்துவர் இராமதாசு கூறுகிறார். அதே நேரத்தில், தான் காதலுக்கோ, கலப்பு திருமணத்துக்கோ எதிரியல்ல என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கடிதம் முழுதும் இந்த இரண்டுக்கும் எதிராகவே இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
- பெரியார் 1942இல் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் ‘காதல்’ குறித்து எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை மருத்துவர் இராமதாசு சான்றாக எடுத்துக் காட்டியிருக்கிறார். “காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகிறது? அது எது வரையில் இருக்கிறது? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைகிறது? அப்படி மறைந்து போய் வருவதற்குக் காரணம் என்ன? என்பது போன்ற விஷயங்களைக் கவனித்து ஆய்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் (காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கி விடும்.” – இது மருத்துவர் இராமதாசு மேற்கோள் காட்டியுள்ள பெரியார் கருத்தின் ஒரு பகுதி. ‘கண்டவுடன் காதல்’; ‘தெய்வீகக் காதல்’ என்று காதலை புனிதப் படுத்தும் நிலையற்ற உணர்வுகளுக்கு பெரியார் அறிவியல் கண்ணோட்டத்தில் முன் வைத்துள்ள ஆழமான கருத்து; ஒரே ஜாதிக்குள் உருவாகும் காதல். வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே உருவாகும் காதல் – அனைத்துக்கும் பொதுவாக ‘காதல்’ குறித்து பெரியார் முன் வைத்த சிந்தனை; மருத்துவர் இராமதாசு – வெவ்வேறு ஜாதிகளுக் கிடையே உருவாகும் காதல் குறித்து மட்டும் பெரியார் எழுதுவது போலவும் அதை ஏற்கவில்லை என்பது போலவும் பெரியார் கருத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார். மருத்துவர் இராமதாசு தலித் மக்களுக்கு எதிராக ஜாதியமைப்புகளை அணி திரட்டியபோது ஒவ்வொரு கூட்டங்களில் இப்படி பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி பேசி வந்த நிலையில், 21.12.2012 ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பு மாநாட்டிலேயே கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.
“காதலுக்கு ‘தெய்வீகம்’, ‘புனிதம்’ என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் ஒருவருக் கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார். “ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ – மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது” என்று பெரியார் உறுதிப்படக் கூறுகிறார். மாறி வரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறை யின் வாய்வியல் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. மனு சாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்து விட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானி களாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக் கொண்ட நமது சமூகம், அதே ‘மனு சாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப் பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”
பெரியாரின் கருத்தில் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து வெளியிடுவது மக்களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சி அல்லவா? ஜாதி மறுப்பு திருமணங்களால் ஜாதி ஒழிந்து விட்டதா? என்று மருத்துவர் கேட்கிறார். ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு காரணிகளில் ஜாதி மறுப்பு திருமணமும் ஒன்று என்றுதான் ஜாதி எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சில கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஜாதியும் ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டுமா? அல்லது அது நீடிக்க வேண்டுமா? இதில் மருத்துவரின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது; உண்மையிலேயே ஜாதி ஒழிப்பை அவர் ஆதரிக்கிறார் என்றால், ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தவிர, ஜாதி ஒழிப்புக்கு வேறு எந்த மாற்றுத் திட்டங்களை அவர் முன் வைக்கிறார்? ஜாதி அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டை அதன் சமூக நீதி அடிப்படையில் மருத்துவர் இராமதாசு ஆதரிக்கிறார். ஆனால், இந்த இடஒதுக்கீட்டின் நோக்கம் – ஜாதியின் பெயரில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஜாதிகளுக்கு அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் வழியாக ஜாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாய்வுகளை ஒழித்து ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாக வேண்டும் என்பதுதான். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாகும்போது, ஜாதி கடந்த திருமணங்கள் இயற்கையாகவே நடக்கத் தான் செய்யும். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் இறுதி இலக்கு – ஜாதியம் கட்டமைத்த ஒடுக்குமுறைகளை ஒழித்து, ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் இந்த சமூக அறிவியலுக்கு புறம்பாக இடஒதுக்கீட்டையும் ஆதரித்துக் கொண்டு, ஜாதி மறுப்புத் திருமணங்களும் பயன்தராது என்பது ஒன்றுகொன்று முரண்பாடு ஆகாதா என்று கேட்க விரும்புகிறோம். ‘பழம் தானாக இயல்பாக கனிய வேண்டும்; அடித்து பழுக்க வைக்கக் கூடாது’ என்று மருத்துவர் கூறுவது நியாயம்தான். ஆனால், தாமாக முன் வந்து பழுத்து கனியாகி ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து வாய்க்கையைத் தொடங்கிய பிறகும் ஜாதியைக் காட்டி மிரட்டுவதும் அவர்களை பிரித்து வைப்பதும் ஜாதிக் கொடுமையை தங்கள்குலப் பெண்கள் மீது ஏற்றி வன்முறையைத் தூண்டிவிடுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் செயல்களா? என்று கேட்க விரும்புகிறோம். சில ஜாதித் தலைவர்கள் வாட்ஸ் அப் வழியாக இப்படி ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பேசுவதை மருத்துவர் இராமதாசு ஏன் கண்டிக்க முன்வரவில்லை? அருவருக்கத்தக்க வார்த்தைகளுடன் ஒரு தலித்தலைவர் பேசிய பேச்சை மருத்துவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்தகைய பேச்சுகள் கண்டனத்துக்கு உரியவையே! நாமும் கண்டிக்கிறோம். பெண்களையும் அத்தகைய பேச்சுகள் இழிவு படுத்தவே செய்கின்றன. ஆனால், இதேபோன்ற பேச்சுகள் ‘மாமல்லபுரம்’ கூட்டத்திலும் மருத்துவர் அய்யா முன்னிலையிலேயே பேசப்பட்டதையும் ‘ஜீன்ஸ் பேண்ட்’, ‘கூலிங் கிளாஸ்’ போட்டு பெண்களை மயக்குகிறார்கள் என்று மருத்துவர் பேசியதும்கூட பெண்களை ‘காயப்படுத்தும்’, ‘அவமதிக்கும்’ பேச்சுகள்தான் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களில் 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். ஜாதி ஒழிந்து விட்டதா? என்று கேட்கிறார். “‘ஜாதியற்றவர்கள்’ என்று தாராளமாக தங்கள் குழந்தைகளை அறிவிக்கலாம். அப்படி ‘ஜாதியற்றவர்கள்’ என்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும்” என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை மருத்துவர் ஏன் வற்புறுத்தக் கூடாது? தந்தை, தாய் என்பதையும் கடந்து இட ஒதுக்கீட்டுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ள ஜாதியைத்தான் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். இதுதான் எதார்த்தம். 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று மருத்துவர் கூறுவது,தலித் ஆண்களை மட்டுமே குறிவைத்து பேசுகிறார் என்று கருத வேண்டியி ருக்கிறது. ஆக தலித் ஆண்கள் தலித் அல்லாத பெண்களை திருமணம் செய்வதை எதிர்ப்பதே அவர் வலியுறுத்தும் பெண்கள் பாதுகாப்புக்கான கோரிக்கையின் மய்யம் என்றே தோன்றுகிறது. பெண்களுக்கான அச்சுறுத்தல் – அடக்கு முறைகள் – ஒரு தலைக்காதல் என்ற பிரச்சினையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூகத்துக்குள் குடும்பத்துக்குள் ஜாதியமைப்புக்குள்ளும் ஆழமாக ஊன்றி நிற்கிறது. மதங்கள் – அது எந்த மதமாக இருந்தாலும் பெண்களை ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அவர்கள் ஆதிக்கத்துக்கு பணிந்து போவதையே பெண்களுக்கான இலக்கணமாக போதிக்கின்றன. வேறு ஜாதி ஆண்களை காதலித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக சொந்த ஜாதிக்குள் ‘வரன்’ தேடி கட்டாயமாக மணம் முடித்து வைப்பது பெண்களுக்கான பாதுகாப்பா? அது பெண்களுக்கான உரிமை மறுப்பு அல்லவா?
மருத்துவர்தான் விளக்க வேண்டும். எனவே, பெண்களுக்கான அச்சுறுத்தல் அவர்கள் மீதான வன்முறை என்பது பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி அமைப்பதிலிருந்து தொடங்கியாக வேண்டும். ஆணாதிக்கச் சிந்தனை எதிர்ப்பு, ஜாதிய பண்பாட்டு எதிர்ப்பிலிருந்து இந்த இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்ந்து ஒரு தலைக் காதல் வன்முறையையும் கண்டிக்க வேண்டும்.
‘ஒரு தலைக் காதல்’ பிரச்சினை மட்டுமே பெண்களுக்கான அச்சுறுத்தல் என்று பிரச்சினையை சுருக்கிப் பார்ப்பது பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஜாதியப் பாதுகாப்புக்கு வலுவூட்டும் உள்நோக்கம் கொண்டது என்றே நாம் கருதுகிறோம்.
பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து நமக்கு முழு உடன்பாடுதான். ஆனால், ஜாதி மறுப்பு திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்க வேண்டும் என்று கூறுவது ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறு வதற்கு போடப்படும் மறைமுகத் தடையேயாகும். ஒவ்வொரு ஜாதியிலும் வரதட்சணை; குடும்ப உறவுகளின் சிக்கல்கள் என்று பல்வேறு வடிவங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருப்பது மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு தெரியாதா? எனவே, பெண்களின் சமத்துவம், ஆணாதிக்கத்திற்கான சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலேயே உண்மையான பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி முடிக்கிறோம்.
பெரியார் முழக்கம் 01092016 இதழ்