‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!
அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார்.
பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை.
அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக் கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்.,
மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின் நினைவில் திட்டுத் திட்டாய் உறைந்திருக்கின்றது. உயிர்த்தெழும் தருணத்துக் காகக் காத்திருக்கிறது.
ஆரிய படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மகிஷனின் தலைமையிலான அசுரர் படை தங்களைக் காப்பாற்றியதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை. போரில் தோற்ற ஆரியர்கள், பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற அசுரர்களின் யுத்த தருமத்தைப் பயன்படுத்தி, துர்கா என்கிற பெண்ணை போருக்கனுப்பி, அவள் மூலம் வஞ்சகமான முறையில் மகிஷாசுரனைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறது. இம்மக்களின் தொன்மம், பாரதப் போரில், பீஷ்மனுக்கு எதிராக சிகண்டியை (திருநங்கை) முன்னால் நிறுத்தி வஞ்சகமான முறையில் அவரைக் கொலை செய்த கிருஷ்ணனின் தந்திரத்தை விவரிக்கும் மகாபாரதம் எழுதிய வியாசன், மகிஷாசுர வதம் என்ற சூதுக்கு சான்று கூறுகிறான்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக் கொண்டாட்டங் களின்போது வங்காளத்தின் நகர்ப்புறங்கள் கேளிக்கை யில் மூழ்கியிருக்க, அசுரர் இன மக்களோ அநீதியாய் வீழ்த்தப்பட்ட தம்மினத் தலைவருக்காய் துயரில் ஆழ்ந்திருப்பர். ஒன்பது நாட்களும் அவர்கள் வீடுகளை விட்டு வெளிவருவதில்லை. வெளியாட்களிடம் பேசுவ தில்லை. ஒன்பதாம் நாளன்று உறவினர்கள் கூடி தங்கள் முன்னோர்களுக்கு எளிமையான படையல் வைக்கின்றனர். அப்போது தங்கள் மூக்கு, வயிறு மற்றும் மார்பகங்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வெள்ளரிக்காய் தின்னும் சடங்கு ஒன்றையும் செய்கின்றனர்.
“மகிஷாசுரனை வஞ்சகமாக ஏமாற்றிய துர்கா, அவரது வயிற்றைக் கிழித்து விட்டாள். அவன் மூக்கிலிருந்தும் மார்பிலிருந்தும் இரத்தம் வடிந்ததை நினைவுகூர்ந்து, நாங்கள் அங்கெல்லாம் எண்ணை தடவிக் கொள்கிறோம். பழிக்குப் பழியாக எதிரிகளின் ஈரலைத் தின்பதற்கான உருவகமாகவே வெள்ளரிக் காயைத் தின்கின்றோம்” என்கிறார் சுஷ்மா அகர் என்ற பழங்குடியைச் சார்ந்தவர்.
பார்ப்பன இந்து மதம், கொலைகளைக் கொண் டாடும் மதம். நவராத்திரி முடிந்த பத்தாவது நாளான விஜயதசமியைத்தான், இராவணன் கொல்லப்பட்ட நாளாக கருதுகிறது பார்ப்பன மரபு. அன்றுதான் இராவணனின் கொடும்பாவி கொளுத்தப்படும் இராமலீலா. இதே விஜயதசமி நாளில்தான் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் வெற்றி ஊர்வலம் நடத்துகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடந்த இராம் லீலாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூவி தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்தார் மோடி. இராமனாக மோடியையும், இராவணனாக நவாஸ் ஷெரீபையும் சித்தரித்தன சங்க பரிவாரத்தினர் இறக்கியிருந்த விளம்பரங்கள்.
இராவணவதம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில், தங்களை இராவணனின் வழித்தோன்றல்களாக கருதும் மத்திய இந்தியாவின் கோண்டு பழங்குடியின மக்கள் அறிவிற் சிறந்த தங்கள் மூதாதையர் அநீதியாக கொல்லப் பட்டதையும், அந்தக் கொலை கொண்டாடப்படுவதையும் எதிர்த்து கடந்த மாதம் பேரணி நடத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோர்ச்சி நகரில் சுமார் 3000 கோண்டு பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒன்றும், பெந்திரி கிராமத்தில் சுமார் 6000 பேர் கலந்துகொண்ட கூட்டு வழிபாடும் நடந்துள்ளது.
அசுர் மற்றும் கோண்டு பழங்குடியினத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த தமது அடையாளங்களை, தேவ மரபுக்கு எதிரான அசுர மரபை, கம்பீரமாகப் பிரகடனம் செய்வது கண்டு திகைக்கிறது பார்ப்பனியம்.
மகிஷன் பட்ட காயங்களின் மேல் எண்ணை தடவிக் கொண்டிருந்த அசுர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. கோமாதா குண்டர்களால் ஊனாவில் உரிக்கப்பட்ட தலித்துகளின் முதுகுத் தோலில், அரியானாவின் ஜாட் வெறியர்கள் மிளகாய்த்தூள் தடவிய போதும், போட்மாங்கேவின் கண்களில் அக்லக்கின் இரத்தம் வழிந்த போதும், இரண்விர் சேனாவின் துப்பாக்கி இரவைகள் இஸ்ரத் ஜஹாரனின் இதயத்தைத் துளைத்த போதும், பெஸ்ட் பேக்கரியில் ஆர்.எஸ்.எஸ். கொளுத்திய நெருப்பில் தண்டகாரண்யக் குடிசைகள் எரிந்த போதும், அரசுரர்களின் வாரிசுகள் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.
பார்ப்பனியப் பாலைவனத்தின் சுடுமணற்பரப்பின் அடியில், உயிர்த் தண்ணீரை எதிர்பார்த்துக் காத் திருந்த அசுர விதைகளை சிலிர்த்தெழ வைத்திருப்பது தங்களுடைய கோமாதாவின் மூத்திரம்தான் என்ற உண்மை, இந்துத்துவ மூடர்களுக்குப் புரியவில்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அசுர் இனத்தவர்கள் சிலரை அழைத்துச் சென்று அவர்களை ‘மைய நீரோட்டத்தில்’ கரைக்க முயற்சித்திருக் கிறார்கள்.
பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற கிராத மரபின் வழித்தோன்றல்களான மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினப் பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களுக்குக் கடத்திச் சென்று, பார்ப்பனிய விழுமியங்களில் ஊறப்போட்டு, பார்ப்பன வைரஸ்களாக மாற்றி, மீண்டும் அவர்களை வடகிழக்குக்கே அனுப்புகிறார்கள்.
இருப்பினும், ஒன்று கலத்தல் சாத்தியப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் நாக்பூர் விஜயதசமி நைவேத்தி யத்தை வெறித்துப் பார்க்கிறது மாசானிக்கு வெட்டிய பன்றியின் தலை. அனந்தசயனத்தில் உறங்கும் திருவரங்கம் மகாவிஷ்ணுவின் முகத்தில் சுருட்டுப் புகையை ஊதுகிறான் எல்லைக் கருப்பன். ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாக சித்தரித்த அமித்ஷாவைக் காறி உமிழ்கிறார்கள் மலையாளிகள். இருப்பினும், தேசியம் என்பது பார்ப்பனியமே என்று கருதும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தனது பார்ப்பன மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.
பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தான் இப்போது அசுர் பழங்குடியினரும் கோண்டு பழங்குடியினரும் தங்கள் மூதாதைகளை உயர்த்திப் பிடித்துள்ளனர்.
பார்ப்பனப் புராணங்களை ஆய்வு செய்து, அவை ஆரியர்களால் இந்த மண்ணின் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்ட கதைகளின் குறியீடுகளாக உள்ளன என்பதை வரலாற்றறிஞர்கள் நிறுவியுள்ளனர். தற்போது எழுந்து வரும் இந்த எதிர்வினைகள், அந்த ஆய்வுகளுக்கான இரத்த சாட்சியங்களாக உள்ளன. உ.பி., ம.பி., ஜார்கண்டு, வங்காளம் போன்ற பல இடங்களில் இராவணனும் மகிஷாசுரனும் பழங்குடி மக்களால் வழிபடப்படுகிறார்கள் என்பது சமீப ஆண்டுகளில் தெரிய வந்த உண்மை. இருப்பினும், இவையெல்லாம் தம்மளவிலேயே இந்துத்துவ எதிர்ப்பு உள்ளடக்கத்தைப் பெற்றிருப்பதாக நாம் கருதவியலாது.
அறிவியல் ரீதியிலான ஆய்வுகளோ, நேரடி சாட்சியங்களோ இல்லாத காலத்திலேயே பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அதற்கொரு அரசியல் உள்ளடக்கத்தை பெரியார் வழங்கியுள்ளார். ஆரியப் படைகள் திராவிட அசுரர்களின் மேல் நிகழ்த்திய அநீதியான போரும், கொலைகளுமே இராமாயணம் என்பதை மேடைகளில் முழங்கிய பெரியார், இராமனின் படத்திற்கு செருப்பு மாலையிட்டு பார்ப்பனியத்தின் முதுகெலும்புகளைச் சில்லிட வைத்தார்.
வால்மீகி எழுதிய இராமாயணத்தின் பிரதிகளில் இருந்தும், இன்னபிற புராணங்களின் பிரதிகளி லிருந்தும் மேற்கோள்களைக் காட்டி அதிர்ச்சியில் பிளந்த பார்ப்பன வாய்களில் நெருப்பைக் கொட் டினார். பெரியாரின் இராமாயணத்தை மேடைகளில் நாடக மேடைகளில் நிகழ்த்திக் காட்டி சனாதனி களைக் கலங்கடித்தார் எம்.ஆர். இராதா. இராதாவின் நாடகத்தில் இராமன் அவதரிக்கும்போது, ஒரு கையில் மீனும், இன்னொரு கையில் கள்ளுக் கலயமும் ஏந்தியிருந்தான். ‘இராமனைக்’ கைது செய்தால் இந்துக்களின் மனம் புண்படுமே எனத் தடுமாறிய போலீசார், வேடத்தைக் கலைக்கு மாறும் வண்டியில் ஏறுமாறும் இராதாவிடம் கெஞ்சி யும், அதனை மறுத்து, கையில் மீனும், கள்ளுக் கலயமுமாக இராமன் நடந்து சென்ற கண்கொள்ளாக் காட்சியை அன்று தமிழகம் கண்டது.
பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இராமனுக்கு செருப்பு மாலை சாத்தப்பட்டதோ, பிள்ளையார் சிலைகள் உடைக்கப் பட்டதோ, இராவண லீலாவோ – அவையனைத்தும் அரசியல் உள்ளடக்கத்துடன் மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
அயோத்தியை முன்வைத்து அத்வானி இரத யாத்திரை நடத்திய போதும், பாபர் மசூதியை இடித்த போதும் தமிழத்தின் வீதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இராமனை எரித்தது. சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அரங்கநாதனின் உறக்கத்தைக் கலைத்தது. நந்தனும், சம்புகனும், ஏகலைவனும், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராளிகளாக ம.க.இ.க.வின் அசுரகானம் பாடல் களில் உயிர்த்தெழுந்தார்கள். முற்போக்காளர்களோ இராம ஜென்மபூமி என்ற மோசடியை நேருக்குநேர் எதிர்க்கும் துணிவின்றி, “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு” என்று மழுப்பினார்கள். அத்வானியின் இராமனுக்கு எதிராக மோடியின் இராமனை நிறுத்தினார்கள்.
ஆம். 1980களின் பிற்பகுதி தொடங்கியே பார்ப்பன பாசிசம் தீவிரமாகத் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது என்ற போதிலும், இந்து மதம் என்று இவர்களால் அழைக்கப்படுவதே பார்ப்பன மதம்தான் என்பதையோ, இதன் புராணங்கள் அனைத்திலும் நிரம்பியிருப்பவை ஆரிய நிறவெறியும் வருணாசிரம வெறியும்தான் என்பதையோ முற்போக்காளர்கள் எனப்படுவோரே ஏற்கவில்லை. அவர்களும் பார்ப்பனக் கருத்தாக்கத்துக்கு ஆட்பட் டிருந்தனர் அல்லது அதனை எதிர்க்க அஞ்சினர்.
இராவண காவியமும், இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகமும் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டிலேயே அரங்கேறிவிட்டன என்ற போதிலும், இப்போதுதான் டெல்லி ஜவகர்லால் பல்கலையில் மகிஷாசுரன் தினம் கொண்டாடப்படு கிறது. இப்போதும்கூட பார்ப்பன மரபையும் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட அசுர மரபையும் எதிர்நிறுத்தி இந்து மதத்தின் வரலாற்றையும் அதன் ஆன்மாவையும் புரிந்து கொள்வதற்கு பல அறிவுத் துறையினர் தயாராக இல்லை. தேவ மரபும் அசுர மரபும், பார்ப்பனியமும் பவுத்தமும், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கான சான்றுகள் என்று இந்துத்துவாதிகள் அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்க் கிறார்கள், அல்லது விமரிசிக்கிறார்கள்.
இராவணனுக்கும் மகிஷாசுரனுக்கும் வரலாறு எழுதி, அவர்களை தேசிய நாயகர்களாக்குவது நம் நோக்கமல்ல. இராம இராச்சியத்துக்கு எதிராக இராவண இராச்சியம் எதையும் நாம் முன்வைக்க வில்லை. ஆனால் வரலாறு திரிக்கப்படும்போது, திரிக்கப்பட்ட அந்த வரலாறு, நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, எதிர்காலத்தை விழுங்கி விடுமோ என்று அச்சுறுத்தும்போது நாம் அசட்டையாக இருக்க முடியாது.
“சிங்கங்களுக்கென்று ஒரு வரலற்றாசிரியன் தோன்றாதவரை, வேட்டைகளின் வரலாறு வேட்டைக் காரர்களையே கொண்டாடும்” என்றார் நைஜீரியக் கவிஞர் சினுவா அச்சேபி. பசுமாட்டு தேசியத்தின் கொம்பைப் பிடித்து உலுக்குகிறது எருமை மாட்டு தேசியம்.
நன்றி: ‘புதிய ஜனநாயகம்’ நவம்பர் 2016
பெரியார் முழக்கம் 17112016 இதழ்