ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்
குடியாத்தம் அருகே உள்ள இராமாலை கிராமத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சிவாவின்
முயற்சியால் அவருக்கு சொந்தமான தோப்பில் கழக சார்பில் பெரியார்-அம்பேத்கர்
பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு
தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன. கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடு சிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்கு பெரியார் குறித்தும், ஜாதி, கடவுள்,
மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசி கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை
இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் – முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்- அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும்
நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’ எனும் தலைப்பிலும் வகுப்பு எடுததனர். இரண்டாம் நாள் மே 27 அன்று ‘வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ குறித்து வழக்கறிஞர்துரை அருண், ‘இடஒதுக்கீடு உரிமையும்- வரலாறும், பின்னணியும்’ என்ற தலைப்பில் பால்.பிரபாகரனும், ‘பெரியார் இயக்கத்தின் மீதான விமர்சனங்கள்’ எனும் தலைப்பில் கொளத்தூர் மணியும் வகுப்புகளை எடுத்தனர்.
அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, காவலாண்டியூர் ஈசுவரன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அய்யனார், செந்தில் எப்.டி.எல்., அருண், வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் நெமிலி தீலிபன், நரேன் ஆகியோர் இரண்டு நாள் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றனர்
பெரியார் முழக்கம் 09062016 இதழ்