பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?
1956இல் புத்தருடைய 2500 ஆவது ஆண்டு விழா சென்னை இராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பாக நடைபெற்றது. அந்த விழாவில், பெரியாரும் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து இரவு 10 மணிக்கு ஒலிபரப்புவதாக உறுதி அளித் திருந்தது. ஆனால், அதன்படி அது செய்யவில்லை! நாளேடுகளும் பெரியார் கலந்து கொண்டதால் புத்தர் விழாவை வெளியிடாமல் இருட்டடிப்புச்செய்தன.
“ஒரு வார காலத்துக்குள் பதிவு செய்தவற்றை வானொலி நிலையம் ஒலிபரப்ப வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இல்லா விட்டால், இராமன் படம் கொளுத்தப்பட்ட செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்” – என்று பெரியார் அறிவித்தார்.
20.7.56 அன்று திருச்சிராப் பள்ளியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “1.8.56 அன்று தமிழ்நாடு எங்கிலும் இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
“கடவுள் தன்மை, ஒழுக்கம், நாணயம், சாதாரண அறிவு இல்லாத துரோகம், வஞ்சகம், பேராசை, மதுவருந்தல், புலால் உண்ணல், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்கக் குணங்கள் கொண்ட இராமனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத் தக்கவனாகக் கருதக் கூடாது என்பதற்காகத் தான் இராமாயண இராமனைக் கொளுத்தச் சொல்கிறேன்” – என்று ‘விடுதலை’ தலையங்கத்தில் பெரியார் இராமன் பட எரிப்புப் பற்றி விளக்கம்
தந்தார்.
26.7.56 அன்று சென்னையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்ற திலகர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட டாக்டர் பி.வரத ராஜுலு நாயுடு அவர்கள், பெரியார் இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் போராட்டம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மக்கள் மனம் புண்படுமா?
“இராமன் படத்தை எரிக்கக் கூடாது என்பவர்கள், தாம் சொல்லும் காரணங்களை – காட்டும் ஆதாரங் களை எடுத்துக் காட்டி அவற்றை மறுத்து அல்லது சமாதானம் கூறாமல் கொளுத்த வேண்டாம்; கொளுத்து வது தப்பு என்று கூறாமல் மக்கள் மனம் புண்படும் என்று கூறுவது சரியல்ல – என்றும் இழிவிலிருந்து வெளியேற வேண்டும் என்பவ னுக்கு ‘மக்கள் மனம் புண்படும்’ என்பது மதிக்கத்தக்கது ஆகாது” என்றும் பெரியார் 30.7.56 ‘விடுதலை’யில் தலையங்கம் எழுதினார்கள். திட்டமிட்டபடி இராமன் பட எரிப்புப் போராட்டம 1.8.56இல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
1.8.56 அன்று ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்தி மக்களுக்கு விளக்கம் அளித்து, படம் கொளுத் தப்படும் என்றும் அவர் தெரிவித் திருந்தார். இராமன் படம் கொளுத்துவதனால், குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படும் என்றும், பொதுக் கூட்டத்தில் படம் கொளுத்தப்பட விடக் கூடாது என்றும் கருதி, ஊர்வலத்துக்கும், பொதுக் கூட்டத்திற்கும் அரசு தடையாணை பிறப்பித்தது.
நாடெங்கும் படங்கள் எரிந்தன
1.8.56 மாலை 4.55 மணியளவில் பெரியார் அவர்களும் முக்கிய தோழர்களும் சென்னையில் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர். அன்றிரவே பெரியாரும் பிற தோழர் களும் விடுதலை செய்யப்பட்டனர். குத்தூசி குருசாமி, கி. வீரமணி, ஆனைமலை நரசிம்மன் உள்பட ஆயிரக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். நாடெங்கும் இராமன் படம் கொளுத்தப்பட்டது. அய்யாயிரத் துக்கு மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் இராமன் பட எரிப்பில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டால் நீதிமன்றத்தில் பின் வருமாறு வாக்குமூலம் சொல்ல வேண்டும் என்று 30.7.1956 ‘விடுதலை’யில் அறிவுறுத்தப்பட்டது. “நான் குற்றவாளியல்ல. எவர் மனத்தையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் காரி யத்தைச் செய்யவில்லை. இராமாயணம் என்பது கட்டுக்கதை என்பதையும், இக்கதையில் திராவிடர்கள் இழிவாகக் கூறப்பட் டிருக்கின்றனர் என்பதையும், இந்த உண்மையானது, பண்டித நேரு அவர்கள் உள்ளிட்ட எல்லா சரித்திர ஆசிரியர்களாலும் கூறப்பட்டிருக் கிறது என்பதையும், திராவிட மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாக வும், இதற்கானஒரு வகை பிரச்சார முறையாகவுமே இராமன் படத்தை வரைந்து தீ வைத்துக் கொளுத் தினேன். இதற்காக, நீதிபதியவர்கள், எந்தத் தண்டனை விதித்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.”
பெரியார், ‘விடுதலை’ 30.7.1956
பெரியார் முழக்கம் 27102016 இதழ்