1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

நீதிபதிகள் சில வழக்குகளில், சட்ட எல்லைகளைத் தாண்டி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களுக்கான அதிகார வரம்புகளை மீறுகிறார்கள்; நீதிபதிகள் சமுதாயத்தை வழி நடத்தும் தலைவர்கள் அல்ல! 1956ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் (இவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான ‘கள்ளர்’ வகுப்பைச் சார்ந்தவர்) – நிலக் குத்தகை தொடர்பான வழக்கில் நில பிரபுகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு பார்ப்பன நீதிபதிகள், தீர்ப்பை இரத்து செய்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக, “அவர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று பார்ப்பன வெறியுடன் தீர்ப்பு கூறினார்.

‘இந்து’ பார்ப்பன ஏடு, தீர்ப்பை உச்சி மோந்து பாராட்டியது. பெரியார் கொதித்து எழுந்தார். மக்களைக் கூட்டிய பெரியார் பார்ப்பன நீதிபதிகளின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். மக்கள் மன்றத்தில் தீர்ப்பு தீயிடப்பட்டது. பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜமன்னார், நீதிபதி ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு 1957ஆம் ஆண்டு வந்தது. “நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டபோது, பெரியார் சிங்கமென முழங்கினார். “இது சட்ட நீதிமன்றம், நியாய நீதிமன்றமல்ல. சட்டத்தின்படி நான் குற்றவாளியாகலாம்; நியாயத்தின்படி குற்றவாளி அல்ல. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நீதிமன்றம் கால அவகாசம் தந்தால் எனது கருத்தை ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்கத் தயார்” என்றார். 15 நாள் கெடு தரப்பட்டது. பெரியார்  ஒரு நீண்ட அறிக்கையை சுமார் ஒரு மணி நேரம் நீதிபதிகள் முன் படித்தார்.

“பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடேயாகும். நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்” என்று பார்ப்பன நீதிபதிகள் முன்னிலையிலேயே முழங்கிய புரட்சிக்காரர் பெரியார்.

இப்போதும்கூட நீதிபதிகள் எல்லை மீறுகிறார்கள். ராஜிவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு எழுதிய ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, “இந்த 7 தமிழர்கள் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை கொள் வதற்கே தகுதியற்றவர்கள்; கருணை காட்டப்பட முடியாதவர்கள்” என்று சட்டத்தின் எல்லைகளைக் கடந்து தீர்ப்பில் எழுதினார்.

இதே கதைதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்யாகுமார், பிணை வழக்கிலும் நடந்திருக்கிறது. தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதம் பிணை வழங்கினார், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இராணி. “மாணவர்கள் தேச விரோதிகளாக மாறுவது அவர்களின் உடலுக்குள் ‘கிருமிகள்’ பரவத் தொடங்கியிருப்பதன் அறிகுறி; முதல் கட்டமாக ‘கிருமி கொல்லி’ மருந்துகளை கொடுக்க வேண்டும். அதிலும் குணமாகாவிட்டால், அறுவை சிகிச்சை தான் ஒரே வழி” என்று கூறியிருக்கிறார்அந்த நீதிபதி. ‘தேச விரோதம்’ என்ற அரசியல் குற்றச்சாட்டுக்கு நீதிபதி உடல் திசுக்களின் ஆராய்ச்சி நடத்துகிறார். “நமக்குக் கிடைத்திருக்கிற கருத்து சுதந்திர உரிமை, எல்லையில் உயிரைப் பணயம் வைத்து நாட்டை பாதுகாக்கும் நமது இராணுவத்தினர் நமக்கு அளித்துள்ள பரிசு” என்று நீதிபதி கூறியிருக்கிறார். அரசியல் சட்டம் வழங்கியுள்ளதே கருத்துரிமை என்ற உண்மையைக்கூட சட்டம் படித்த இந்த நீதிபதி ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

சேலம் அஞ்சலகத்தில் சாக்குப் பையில் கெரசினை முக்கி வீசியதாக காவல்துறை, கழகத்தினர் மீது தொடர்ந்த வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் பொய்யாக சேர்த்து, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விசாரிக்கும் அறிவுரைக் குழுவிடத்தில் கொளத்தூர் மணி நிறுத்தப்பட்டபோது, “இந்த குழு எனக்கு விடுதலை ஏதும் வழங்கிவிடாது என்று நன்றாகவே தெரிந்துதான் வந்திருக்கிறேன்” என்றார்.

பொதுவாக இந்த ஆணையங்கள் அதிகாரத்தைப் பயன் படுத்தாமல், ஆட்சியாளர்களுக்கு அடங்கிக் கிடப்பவை தான்!

அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டின் தேசியக் கொடி எரிப்புப் பற்றிய ஒரு வழக்கு வந்தது. தேசியக் கொடியை  எரிப்பது என்பதும் கருத்துச் சுதந்திரம்தான் என்ற வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார். நீதிபதியின் பெயர் பார்பரா பிரிட்சே.

(Barbara Frietchie)) அதே நீதிபதி தனது தீர்ப்பில் தேசபக்தி பற்றிய உணர்ச்சியூட்டும் கருத்துகளை பதிவு செய்தார்.

சட்டத்தின் வரம்புக்கு வெளியே போய், ‘தேசபக்தி உணர்ச்சி’களை தீர்ப்பாக எழுதுவது நீதிமன்ற ஒழுங்குக்கு எதிரானது என்று கடும் எதிர்ப்புகள் வந்தன. வழக்கை அவருடன் சேர்ந்து விசாரித்த நீதிபதி ஸ்டிவன்ஸ் உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதறகாக அந்த நீதிபதியைக் கடுமையாகவே விளாசினர். (ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, கட்டுரை,

மார்ச் 5, 2016)

‘தேசபக்தி’, ‘தேச விரோதி’ என்ற அரசியல் சொற்றொடர் இப்போது கருத்துரிமைகளை மறுப்பதற்கான கேடயங்களாக மாறி வருவது ஆபத்தான போக்கு; பார்ப்பனியத்தின் புகலிடமாக மாறியிருக்கிறது ‘தேசபக்தி’.

 

பா.ஜக. தேச பக்தியின் முகத்திரை கிழிகிறது

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு, தேச விரோத நடவடிக்கை களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குரலை அப்படியே வழி மொழிந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் ‘தேசபக்தி’ எப்படி செயல் படுகிறது என்பதற்கு சான்றாக அண்மையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், ‘ஃபோர்டு பவுன்டேஷன்” அரசு சார்பற்ற ஒரு புகழ் பெற்ற தொண்டு நிறுவனம். 1952ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும் இதன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு வந்தன. இதுவரை தொண்டு நிறுவனமாகவோ அல்லது சங்கமாகவோ எந்த சட்டத்தின் கீழும் இது பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே குஜராத்தில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, இந்த நிறுவனம் தேச விரோத நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், இதை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கடந்த ஆண்டு மத்திய உள்துறைக்கு ஒரு அறிக்கையை அனுப்பியது. உடனே மத்திய உள்துறை அமைச்சகம், தேசத்துக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் அமைப்பாக அறிவித்து கண்காணிப்புக்குரிய பட்டியலில் ‘போர்டு பவுன்டேஷனை’ சேர்த்தது. இந்த அமைப்பின் வழியாக இந்தியாவுக்கு நிதி வருவது தடை செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் இந்தியாவுக்குள் அனுப்பிய 1 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் முடக்கப்பட்டது.

குஜராத் ஆட்சிக்கு போர்டு பவுன்டேஷன் மீது இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன? மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது அல்லவா? இந்தப் படுகொலைகளை உச்சநீதிமன்றங்களின் வழியாக வெளிக் கொண்டு வந்த அமைப்புகள் இரண்டு. ஒன்று ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு’; மற்றொன்று பெண் போராளியாக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய டீஸ்தா செதல்வாத் நடத்திய சப்ரங் அறக்கட்டளை, இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்தது ‘போர்டு பவுன்டேஷன்’ என்று குஜராத் அரசு கருதியது. இதுவே தடை கோரியதற்கான பின்னணி. போர்டு பவுன்டேஷன் மட்டு மல்லாது. மேலும் 15 தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு களையும் மத்திய உள்துறை முடக்கியது. இப்போது அவசர அவசரமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி போர்டு பவுன்டேஷன் மீதான தடையை மட்டும் உள்துறை அமைச்சகம் நீக்கியிருக்கிறது. இனி போர்டு பவுன்டேஷன் தாராளமாக இந்தியாவில் இயங்கலாம். ‘தேச விரோத’ முத்திரை அகற்றப்பட்டு ‘தேசபக்தி’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுவிட்டது. என்ன காரணம்?

இந்தியாவுக்கான அமெரிக தூதராக இருப்பவர் ரிச்சர்டு வர்மா – இவர் இந்திய பார்ப்பனர்; அமெரிக்க குடிமகனாகி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறி தூதர் பதவி பெற்றவர். இவரும் அமெரிக்க அதிகாரிகளும் தடையை நீக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கடி தந்து வந்தனர். இவர்கள் சந்தித்துப் பேசியது நிர்பேந்திரா மிஸ்ரா என்ற பார்ப்பன அதிகாரியைத்தான். இவர் மோடியின் முதன்மைச் செயலாளர். பிரதமர் அலுவலகத்தை அதிகாரச் செல்வாக்குடன் ஆட்டிப் படைப்பவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்திலிருந்து வந்தவர்கள். இவ்வளவு அவசரமாக தடை நீக்கப்பட்டதற்கான காரணமும் உண்டு. மோடி, அமெரிக்காவில் வாஷிங்டனில் நடக்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கப் போகிறார். அங்கே ஒபாமாவை சந்திக்கும்போது இந்த ‘நல்ல செய்தியை’ ஒபாமாவிடம் தெரிவிக்க வேண்டும். இதுவே இந்த அவசர நடவடிக்கையின் பின்னணி.

எது தேச பக்தி? எது தேச விரோதம்? என்பதை நிர்யணிப்பதே பார்ப்பன அதிகார வர்க்கம்தான்.

மற்றொரு தகவலும் உண்டு.

அரியானாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி, அந்த நாட்டின் குடியுரிமை பெற்ற சீனிவாசன் என்ற பார்ப்பனர் அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாகிவிட்டார். ‘பகவத் கீதை’யின் மீது உறுதியேற்று, நீதிபதி பதவியேற்ற அவரை, ஒபாமா அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவே நியமித்து விட்டார் என்று பார்ப்பன ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து, பெருமையோடு செய்திகளை வெளியிட்டன! கீதை மீது உறுதி ஏற்றதற்காக ஒபாமா தந்த பரிசு என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால், அது உண்மையல்ல; ஒபாமா வேறு ஒரு அமெரிக்கரைத்தான் நீதிபதியாக்கினார் என்ற உண்மை பிறகு அம்பலமானது.

பகவத் கீதையை தூக்கிக் கொண்டு எந்த நாட்டுக்கு ஓடினாலும், ‘அவாள்’ பார்வையில் ‘தேசபக்தி’ தான்!

– இரா

பெரியார் முழக்கம் 24032016 இதழ்

You may also like...