வேதப் புரட்டைத் தகர்த்து திராவிட நாகரீகத்தை உறுதிப்படுத்திய ஜான் மார்ஷல்!

19-ம் நூற்றாண்டில் உலகின் பழமையான நாகரீகமாக பார்க்கப்பட்டது எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்கள்தான். அதனைத் தொடர்ந்து மாயன் நாகரீகமும், சீன நாகரிகமும் மிகப் பழமையானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அதற்கு என தனி நாகரீகம் என்று எதுவும் இருந்ததாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறாக ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது என்றும், அதற்கு முன்னர் இங்கு இருந்த மக்கள் நாகரீக வளர்ச்சியின்றி நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பது தான் மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. அவர்களை பொறுத்தவரை இந்தியாவின் முதல் நகரமே பாடலிபுத்திரா என்று அழைக்கப்பட்ட பாட்னாதான்.
ஆனால், இவைகள் எல்லாம் சிந்துநதிக் கரையில் ஒளிந்துகொண்டிருந்த மிகப்பெரும் பழங்கால நாகரீகத்தின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர்தான். அதாவது 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவை மட்டுமல்ல, உலகையே புரட்டிப்போட்ட ஒரு ஒரு ஆய்வு முடிவு ‘The Illustrated London News’ இதழின் முகப்புப் பக்கத்தில் வெளிவந்தது.
அந்த ஆய்வு கட்டுரை இந்தியாவை நாகரீகப்படுத்தியது வந்தேறி ஆரியர்கள் கிடையாது என்று உரக்க சொன்னது. ஆரியர்கள் இந்தியாவுக்கு வரும் முன்னரே எகிப்திய, சுமேரிய, மெசபத்தோமியா நாகரீகங்களுடன் போட்டிபோட்ட ஒரு நாகரீக சமூகம் இந்திய மண்ணில் ஆரவாரத்துடன் கொடிகட்டிப் பறந்தது என்பதையும் வெளிப்படுத்தியது.
ஐரோப்பியர் நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே இந்திய மண்ணில் நிலையான வீடுகள் கட்டப்பட்ட நகர அமைப்பு முறை இயங்கியுள்ளது. அந்த சமூகம் முன்னேறிய சமூகங்களுக்கு உரிய அடையாளமான வணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளது என்ற உண்மையை இந்த ஆய்வு கட்டுரை உலகுக்கே எடுத்துக்கூறியது.
இந்த ஆய்வு முடிவு இந்தியாவில் ஒரு மாபெரும் கலாச்சார புரட்சிக்கும் வித்திட்டது. அதுவரை வேத நாகரீகமே இந்தியாவின் அடையாளம் என்றும், அதில் இருந்தே இந்திய வரலாறு தோன்றியது என்றும் சொல்லிக்கொண்டிருந்த நிலை மாறி, இந்தியாவின் வரலாறு அதற்கும் முந்தையது என்பதை உறுதிப்படுத்தியது.
அதை பற்றி பார்க்கும் முன்னர் அந்த ஆய்வுக் கட்டுரையை யார் எழுதியது என்பதையும் பார்ப்பது முக்கியமானது. கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் பணிபுரிந்த சார்லஸ் மாசன் என்பவர் 1829 இல் தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் பகுதி வழியாக சென்றபோது அங்கு சிறிய அளவிலான இடிபாடுகளோடு ஒரு இடம் இருப்பதை கண்டு, இதனை பற்றி முதல் முறையாக குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்திற்கு சாதகமான நீர் வழி பாதையை உருவாக்க நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் பர்னஸ் என்பவரும் சிந்து நதி கரையில் இருக்கும் பழமையான கட்டட இடிபாடுகள் குறித்தும் கம்பெனிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சூழலில் பஞ்சாப் பகுதி முழுக்க கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய முல்தான் – லாகூர் இடையேயான ரயில் போக்குவரத்தின்போது தற்போது ஹரப்பா இருக்கும் பகுதியின் பழமை குறித்து தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தெரியவந்தது. இதனுடைய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் இயக்குனரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற தொல்லியல் துறை ஆய்வாளர் ஹரப்பா கட்டட இடிபாடுகளை, தொலைந்துபோன பழங்கால பௌத்த நகரம் என நினைத்து, அங்கு தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட ஜான் மார்ஷல் காலத்தில் நடந்த தொடர் அகழாய்வில் ஹரப்பா கட்டட இடிபாடுகள் பௌத்த நாகரீகத்துக்கும் முந்தையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஹரப்பா போலவே அதற்கு அருகில் இருந்த மொஹஞ்சதாரோ பகுதியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு இரண்டும் ஒரே நாகரிகத்தை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதுவரை இந்தியாவில் கிடைத்த அனைத்து பொருள்களையும் விட இங்கு கிடைத்த பொருள்கள் காலத்தால் பழமையானவை என்பதும் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதியில் ஒரு பழங்கால நாகரீகம் இருந்தது என்பதை குறிப்பிட்டு ’The Illustrated London News’-க்கு தனது ஆய்வு கட்டுரையை எழுதினார். அது சரியாக இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது.
ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகள் சிந்து நதி கரையின் அருகில் இருந்தவை சிந்துசமவெளி நாகரீகங்கள் என்று அழைக்கப்பட்டன. இங்கு கிடைத்த பொருட்கள் வேதகாலத்துக்கும் முந்தையது என்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் ஆதி குடிகள் குறித்த கேள்விக்கான விவாதம் எழுந்தது.
வேதப் புராணக் கட்டுக்கதைகளைக் காட்டி சிந்து நாகரீகத்துக்கு சொந்தம் கொண்டாடிய ஆரியர்களுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் ஆப்பு வைத்தார் ஜான் மார்ஷல். அறிவித்த நாள் 1924, செப்டம்பர் 20, ஒரு நூற்றாண்டு நிறைவடைகிறது.
ஏற்கனவே கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த ஆய்வு வெளியாகி சமஸ்கிருதம் உள்ளிட்ட வடஇந்திய மொழிகள் இந்தியாவுக்கு வெளியே இருந்து இங்கு வந்தது என்ற கோட்பாடு உருவான நிலையில், அதனை ஜான் மார்ஷலின் சிந்துசமவெளி நாகரீகங்கள் குறித்த ஆய்வு உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
எனினும் வேதகாலத்தை போற்றும் சில ஆய்வாளர்கள் சிந்துசமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என அழைக்கத்தொடங்கினர். ஆனால் தொடர்ந்து சிந்துசமவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலுக்கும் வேத கால மக்களின் வாழ்வியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும், சிந்துசமவெளி பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் இந்தியாவின் தென் பகுதியில் வாழும் திராவிட மக்களுடனே தொடர்புப்படுவதாகவும் தெரியவந்தது.
பின் வந்த காலத்தில் சிந்துசமவெளி மக்களும் திராவிட மக்களே என்றும் ஆய்வு கட்டுரைகள் வெளியாகின. இது தென்னிந்தியாவில் பெரும் பண்பாட்டு எழுச்சியை ஏற்படுத்தின.
இவ்வாறு இந்தியா மட்டுமல்ல, உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட சிந்து சமவெளி நாகரீகத்தை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த ஜான் மார்ஷலின் செயல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகமும் இந்தியாவுக்கு உலக வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுத்தந்தது.
‘இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்’ என்ற முதலமைச்சரின் முழக்கத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தவர் ஜான் மார்ஷல்.

பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்

You may also like...