குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் முடிவெய்தினார்
பெரியார் இயக்கத்தின் குடும்பத்தில்
வந்த வரும், மிகச் சிறந்த பெரியாரிய
லாளருமாகவும் திகழ்ந்த குடந்தை
ஆர்.பி.எஸ். ஸ்டாலின் (74) ஜூன் முதல்
தேதி குடந்தையில் முடிவெய்தினார்.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின்
திராவிடர் கழக இளைஞரணி தலைவராக
செயல்பட்ட ஆர்.பி.எஸ். ஸ்டாலின்
ஏராளமான இளைஞர்களை பெரியார்
இயக்கத்துக்குள் கொண்டு வந்தவர்.
மரணமடைந்த திராவிடர் கழகப் பொதுச்
செயலாளர் துரை. சக்கரவர்த்தி, திராவிடர்
கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பிறகு
அந்தக் கழகத் தலைமையால் நீக்கப்பட்ட
மறைந்த வள்ளிநாயகம் போன்றவர்களை
உருவாக்கியவர். அவரது தலைமைப்
பண்புக்கு ஏராளமான சான்றுகளைக்
கூறலாம்.
1974ஆம் ஆண்டு பெரியார்
முதலாமாண்டு நினைவு நாளை வடநாட்டு
எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராட்ட
நாளாக அப்போது கழகத் தலைவராக
இருந்த அன்னை மணியம்மையார்
அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும்
டெல்லியில் இராம லீலா மைதானத்தில்
‘இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்’
என்ற இராமாயணத்தில் திராவிடர்களாக
சித்தரிக்கப்படும் கதை மாந்தர்களை
தீயிட்டு எரிக்கும் ‘இராம லீலா’வை நிறுத்த
வேண்டும். இல்லையேல் நாங்கள்
‘இராமனை’ எரிக்கும் ‘இராவண லீலா’வை
நடத்துவோம் என்று அன்னை மணியம்மை
யார் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு
கடிதம் எழுதினார். இந்திரா காந்தியிட
மிருந்து உரிய பதில் ஏதுமில்லாத நிலையில்
‘இராவண லீலா’ பெரியார் திடலில்
காவல்துறை தடையை மீறி நடத்தப்பட்டது.
அந்த சூழலில் பெரியார் திடலில்
ஆர்.பி.எஸ். ஸ்டாலின் தலைமையில் வீறு
கொண்ட இளைஞர் படை ‘இராவண
லீலா’வுக்கு திட்டமிட்டு செயல்பட்டது
‘இராமன், இலட்சுமணன், சீதை’யின் மிகப்
பெரிய உருவங்கள், இரகசியமாக
தயாரிக்கப்பட்டன. இந்த ‘உருவங்களை’
பறிமுதல் செய்ய காவல்துறை வந்தபோது
அவர்களிடம் சிக்கவில்லை. உருவங்களை
எரிக்கும் அந்த சரியான நேரத்தில்
ஆர்.பி.எஸ். ஸ்டாலின், திராவிடர் கழக
இளைஞர் படையுடன் அந்த உருவங்
களைத் தூக்கி வந்த காட்சி மறக்க
முடியாதது. உணர்ச்சி முழக்கங்களுடன்
தீயிடப்பட்டன. அதற்காக மணியம்மையார்,
ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு
தொடரப்பட்டது. மாநகர நீதிமன்றம் 6 மாதம்
தண்டனை விதித்தது. மாவட்ட நீதிமன்றம்
விடுதலை செய்தது.
கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட
மக்கள் உயிருடன் எரிக்கப்பட்ட வரலாற்றில்
பதிந்து போன ‘சாதியப் படுகொலை’யில்
முக்கிய குற்றவாளியான கோபாலகிருஷ்ண
(நாயுடு), நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தப்பித்தா
லும் அவர் மக்கள் மன்றம் தந்த மரண
தண்டனையிலிருந்து தப்பிக்க முடிய
வில்லை. இந்த வழக்கில் முதல்கட்ட
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள்
திராவிடர் கழகத் தோழர்கள்தான். சிறை
யில் அடைக்கப்பட்ட திராவிடர் கழகத்
தோழர்களுக்காக நாகை மாவட்ட நீதி
மன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்
களில் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி,
அவர்கள் விடுதலைக்குப் பொறுப்பேற்று
செயல்பட்டவர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின்.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்
பட்டவர் பிணத்தை வன்னியர் வீதிகளில்
கொண்டு செல்ல எதிர்த்தபோது அன்று
மருத்துவர் இராமதாசு, வன்னியர்களின்
ஜாதிவெறியை எதிர்த்து தாழ்த்தப்பட்டோர்
பிணத்தை தானே தோளில் சுமந்து
சென்றார். (இப்போதுள்ள மருத்துவர்
இராமதாசு வேறு) அப்போது இந்தப் பிரச்
சினைகளில் தலையிட்டு இருபிரிவினர்
மோதல்களைத் தவிர்ப்பதில் முக்கிய
பங்காற்றியவர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின்.
1983ஆம் ஆண்டு ஈழத் தமிழர்
பிரச்சினை தீவிரமடைந்தபோது, தமிழகம்
நோக்கி பல போராளி குழுக்கள் வந்தன.
அதில் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற போராளிக்
குழு, ஆர்.பி.எஸ். ஸ்டாலினைப் பற்றி
அறிந்து அவரிடம் ஆதரவு கேட்டு வந்த
போது அந்த போராளிக் குழுவுக்கு
உதவுவதில் முழுமையாக பாடுபட்டார். நிதி
திரட்டல், ஆயுதம் தயாரித்தல் என பலவேறு
தளங்களிலும் அவரது உதவிக்கரம்
நீண்டது. அவரது குடும்ப வணிக
நிறுவனமான குடந்தையில் புகழ்பெற்ற
‘கிருஷ்ணா பேக்கரி’யின் முழு
வருமானத்தையும் போராளிகளுக்கே
வழங்கினார். கடும் பொருள் இழப்புகளை
சந்தித்தார். தமிழ்நாடு விடுதலை என்ற
தந்தை பெரியாரின் இலட்சியத்தை
உறுதியாகப் பற்றிக் கொண்ட ஆர்.பி.எஸ்.
ஸ்டாலின், அந்த உணர்வோடு தமிழ்
ஈழத்தின் விடுதலைக்காகவும் பங்
காற்றினார்.
1979ஆம் ஆண்டு சென்னை பெரியார்
திடலில் பெரியார் நூற்றாண்டு விழா
தொடங்கியது. அதில் கருஞ்சட்டை
அணிந்த இளைஞர்களின் மாபெரும்
அணிவகுப்புப் பேரணி நடந்தது. பெரியார்
இலட்சியத்தால் ஈர்க்கப்பட்டுத் திரண்ட
இந்த இளைஞர்களைத் திரட்டி, பெரியார்
இயக்கம் விடுதலையை நோக்கிய ஒரு
புரட்சிகர அமைப்பாக களம் காண
வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படத்
தொடங்கினார், ஆர்.பி.எஸ். ஸ்டாலின்.
அந்த தீவிர செயல்பாடுகளை திராவிடர்
கழகத் தலைமை விரும்பவில்லை. அதன்
காரணமாக திராவிடர் கழகத்தின் சட்டகத்
துக்குள் அவர் தன்னை பொருந்திக்
கொள்ள முடியாதவரானார். திராவிடர்
கழகத்திலிருந்து விலகி நின்றார். பின்னர்
பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்தா
லும் தன்னை கொள்கை அடையாளத்
துடனே வெளிப்படுத்திக் கொண்டார்.
ஆர்.பி.எஸ். ஸ்டாலின் தந்தை ஆர்.பி.
சுந்தரம், ஒரு சுயமரியாதைக்காரர். ஆர்.பி.
சுந்தரத்தின் தம்பி, மறைந்த மன்னை
சாரங்கன் அவர்களும் பெரியார் இயக்கத்
தில் பொறுப்பேற்று தீவிரமாக செயல்
பட்டவர்.
தொண்டையில் புற்று நோய் பாதிப் போடு நீண்டகாலம் போராடினார்
ஆர்.பி.எஸ். ஸ்டாலின். அந்த காலங்
களிலும் கொள்கை உணர்வுகளோடு
சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்
என்ற துடிப்பே அவரிடம் மேலோங்கி
இருந்தது. கடைசி காலங்களில்
சென்னைக்கு சிகிச்சைக்கு வரும்போது
திராவிடர் விடுதலை கழகத் தலைமை
நிலையத்துக்கு பலமுறை வந்தார். ‘புரட்சிப்
பெரியார் முழக்கம்’ ஏட்டை குடந்தை
நகரத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்
களிலும் பெரியார் சிந்தனையோடு தி.மு.க.,
அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள குடந்தைப்
பகுதி தோழர்களுக்கும் கொண்டு செல்ல
வேண்டும் என்று ஆர்வத்துடன் செயல்
பட்டார். அதற்காக உறுப்பினர்கள் சேர்த்து
ரூ.25,000/-த்தை ‘புரட்சிப் பெரியார்
முழக்கம்’ வங்கிக் கணக்கில் செலுத்
தினார்.
கொளத்தூர் மணி, கோவை
இராமகிருட்டிணன் மீது அவர் மிகுந்த
நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும்,
இவர்கள் பெயரை ஒவ்வொரு நாளும்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உச்சரித்துக்
கொண்டே இருந்தார் என்றும் இறுதி
காலங்களில் அவருடனிருந்த தோழர்கள்
கூறுகிறார்கள். அவரது இல்லத்துக்கு
பெரியார் இல்லம் என்றும், இல்லத்தின்
வளாகத்துக்கு ‘அம்பேத்கர் வளாகம்’
என்றும் பெயர் சூட்டியிருந்தார்.
மரண செய்தி அறிந்தவுடன் திராவிடர்
விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்
மணி, பொதுச் செயலாளர் விடுதலை
இராசேந்திரன், அமைப்புச் செயலாளர்
ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர்
திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்
செல்வம், குடந்தை நகருக்கு விரைந்து
இறுதி வணக்கம் செலுத்தினர். தந்தை
பெரியார் திராவிடர் கழகப் பொதுச்
செயலாளர் கோவை இராமகிருட்டிணன்
குடந்தை வந்து இறுதி மரியாதை செலுத்
தினார்.
நாகை மாவட்டக் கழகத் தோழர்கள்
இளையராஜா, மகேசு, செந்தில் குமார்,
இராஜ இராஜசோழன், திருவாரூர் மாவட்ட
செயலாளர் மன்னை காளிதாசு உள்ளிட்ட
ஏராளமான தோழர்கள் இறுதி மரியாதை
செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சித்
தோழர்களும் கட்சிகளைத் தாண்டிய
பொது மக்களும் மிகப் பெருமளவில்
திரண்டு வந்து மரியாதை செலுத்திய
காட்சியே அவரது சமுதாயத தொண்டின்
சிறப்பைக் காட்டுவதாக அமைந்திருந்தது.
ஆர்.பி.எஸ். ஸ்டாலினுக்கு வீர
வணக்கம்!
– இரா
பெரியார் முழக்கம் 09062016 இதழ்